Sunday, November 30, 2025

அதிகரிக்கும் காற்று மாசுபாடு....!

 அதிகரிக்கும் காற்று மாசுபாடு - பாதுகாக்க என்ன வழி?

உலக மக்கள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் மிகவும் முக்கிய பிரச்சினையாக மாசுபாடு இருந்து வருகிறது. காற்று மாசுபாடு என்பது மனிதர்கள், பிற உயிரினங்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் இருப்பது. மாசுபடுத்திகள் ஓசோன் அல்லது நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற வாயுக்களாக இருக்கலாம் அல்லது சூட் மற்றும் தூசி போன்ற சிறிய துகள்களாக இருக்கலாம். வெளிப்புற மற்றும் உட்புற காற்று இரண்டும் மாசுபடலாம்.  இப்படி காற்று உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகளால், மனித இனம் தொடர்ந்து பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. 

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவை இன்னும் முழு அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் நாள்தோறும் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களும் மாசுபாடுகளை குறைக்க தனிக் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசுபாட்டின் தரம் மிகவும் வீரியம் அடைந்து மக்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. மாசுபாடு நமது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மாசுபாடு கண்களில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

மாசுபாடுகளால் ஏற்படும் பிச்சினைகள்  :

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்ற கேள்வி எழுப்பினால், நிச்சயம் உண்டு என்று வல்லுநர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். அந்த ஆலோசனைகளை மனதில் வாங்கிக் கொண்டு முடிந்த அளவு நாம் கவனத்துடன் செயல்பட்டால், மாசுபாடுகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.  டெல்லி, சென்னை மும்பையில் அதிகரித்து வரும் மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

மாசுபாடு காரணமாக, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, நுரையீரல் நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். இதன் காரணமாக, கண்கள் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். கண்களில் நீர் வடிதல், சிவத்தல், வீக்கம் அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அதிகரித்து வரும் மாசுபாட்டின் போது நம் கண்களை நாம் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். மாசுபாட்டின் போது நமது மற்றும் நமது குடும்பத்தினரின் கண்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். 

பாதுகாக்க என்ன வழி?

மாசுபாட்டின் காரணமாக கண்களில் தூசி சேரலாம். இது கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தும். எனவே, கண்களில் சேரும் தூசி மற்றும் அழுக்குகளை அகற்ற ஒவ்வொரு நாளும் கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.  நாம் எதைத் தொட்டாலும், அவற்றில் உள்ள கிருமிகள் மற்றும் தூசி நம் கைகளில் விழும். கைகளை கழுவாமல் கண்களைத் தொடுவது தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, வெளியே செல்லும் போது சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுங்கள், சானிடைசரைப் பயன்படுத்துங்கள். அழுக்கு கைகளால் கண்களை ஒருபோதும் தொடாதீர்கள்.

கண்களைத் தேய்ப்பது கண்களில் வறட்சி மற்றும் சிவப்பை ஏற்படுத்தும். எனவே, கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்கவும். இது தவிர, மாசுபாட்டால் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்கு கார்னியாவை சேதப்படுத்தும். ஒருபோதும் கண்களைத் தேய்க்காதீர்கள். அந்த பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மாசுபாட்டால் கண்கள் வறண்டு போகலாம். எனவே, உங்கள் மருத்துவரை அணுகிய பிறகு கண் சொட்டு மருந்து அல்லது கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது உங்கள் கண்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. அத்துடன் வறட்சி பிரச்சனையையும் தடுக்கிறது. இது தவிர, தொற்று அபாயத்தையும் குறைக்கிறது.

சன்கிளாஸ்கள் பயன்பாடு :

மாசுபாட்டைத் தவிர்க்க, உங்கள் நுரையீரலைப் பாதுகாக்க வெளியே செல்லும் போது ஆண்கள் முகமூடி, பெண்கள் தாவணியை பயன்படுத்த வேண்டும். இதேபோல், வெளியே செல்லும் போது உங்கள் கண்களை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க சன்கிளாஸ்களைப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கண்களை புற ஊதா கதிர்கள் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கிறது. இது தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

எந்தவொரு கண் பிரச்சனையும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.  சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பிரச்சனை மோசமடையக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, எந்த வகையான கண் பிரச்சனையையும் புறக்கணிக்காதீர்கள். கண் தொற்று இருந்தால் மொபைல் போன்களைப் பயன்படுத்தவே வேண்டாம், ஏனெனில் இது உங்கள் கண்களை சோர்வடையச் செய்யலாம். உங்கள் மொபைல் போனில் ஏதேனும் முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால்,  அந்த நேரத்திற்கு மட்டும் அதைப் பயன்படுத்துங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு மாசுபாடுகள் காரணமாக உயிரிழப்புகள் கூட நிகழ்வது தற்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. எனவே, மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு  மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கூறும் ஆலோசனைகளை ஏற்று மாசுபாடுகளில் இருந்து தப்பிக்க வேண்டும். காற்று மாசுபாட்டை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் சரியான முறையில் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, மாசுபாடு பிரச்சினைகளில் தப்பிக்க முடியும் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதை தவிர வேறு வழி இருக்கா? என்று கேள்வி எழுப்பினால் நிச்சயம் இல்லை என்றே கூற வேண்டும். எனவே  முன்னெச்சரிக்கை வழிகளில் சரியான முறையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: