“ நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு ”
- மௌலானா அர்ஷத் மதானி வேதனை -
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் மேலான முஸ்லிம்களுக்கு எதிராக காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள முஸ்லிம் பெயர்களை மாற்றுதல், முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைப்பது, முஸ்லிம்களின் கவனத்தை வளர்ச்சிப் பணியில் செலுத்தாமல் தடுத்தல் என பல்வேறு வகையில் முஸ்லிம்கள் தற்போது பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே வருகிறார்கள். நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறிய பிரச்சினையை கூட, மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றி, இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முஸ்லிம் இயக்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டை உண்மையில் நேசிக்கும் முஸ்லிம்களை சந்தேக கண்ணுடன் ஒருபோதும் பார்க்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக, தொடர்ந்து முஸ்லிம் வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
மௌலானா அர்ஷத் மதானி வேதனை :
இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் முஸ்லிம்களக்கு எதிராக பாகுபாடு அதிகர்த்து வருவதாக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி வேதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு திணிக்கப்பட்டு அவர்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக மௌலானா அர்ஷத் மதானி விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அரசியல் மற்றும் சமூக பற்றாக்குறை குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தாருல் உலூம் தேவ்பந்தில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய மௌலானா அர்ஷத் மதானி, தற்போதைய பாஜக அரசாங்கம், முஸ்லிம்களின் அரசியல் தலைமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டமை, டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களைக் குறிவைத்தல் மற்றும் அல்-பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜவாத் அகமது சித்திக் கைது போன்ற பிரச்சினைகளை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.
பன்முக சவால்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகம் :
நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்பாக இருப்பது ஜாமியத் உலமா-இ-ஹிந்த். அதன் தலைவராக இருக்கும் மௌலானா அர்ஷத் மதானி, முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும், நாட்டின் அமைதி, வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் பாகுபாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அரசியல், சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் முஸ்லிம் சமூகம் பன்முக சவால்களை எதிர்கொள்கிறது என்று மௌலானா கூறியுள்ளார்.
தாருல் உலூம் தேவ்பந்தில் உள்ள தனது செமினரியில் நடந்த விழாவில் உரையாற்றிய மௌலானா மதானி, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதையும், பல தனிநபர்கள் குறிவைக்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார். பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அரசியல் தலைமை, சமூக அந்தஸ்து மற்றும் வேலை உரிமைகளை பறிக்கும் கொள்கையை பின்பற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
உலக அளவில் முஸ்லிம்கள் சாதனை :
தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் தஹ்ரான் மம்தானி மற்றும் இங்கிலாந்தின் லண்டனில் சாதிக் கான் போன்ற முஸ்லிம்கள் உயர் பதவிகளை வகிக்க முடியும். ஆனால் ஒரு முஸ்லிம் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆவது மிகவும் கடினம் என்று மௌலானா மதானி கூறினார். ஒரு முஸ்லிம் துணைவேந்தர் பதவியை அடைந்தாலும், அவர் அசாம் கானைப் போல சிறைக்கு அனுப்பப்படுகிறார் என்று அவர் வருத்தப்பட்டார்.
"தற்போது அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?" என்ற கேள்வியை அவர் எழுப்பினார். முஸ்லிம்கள் ஒருபோதும் எழுந்திருக்காமல், வளர்ச்சி அடையாமல், பல்வேறு துறைகளில் சாதிக்காமல் இருக்க பா.ஜ.க. அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது" என்று மௌலானா குற்றம்சாட்டினர். அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜவாத் அகமது சித்திக், பணமோசடி மற்றும் போலி சான்றிதழ்கள் குற்றச்சாட்டில் 13 நாள் அமலாக்க இயக்குநரகத்தின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிற்கு இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்று மௌலானா மதானி குற்றம்சாட்டினார். அவரது கூற்றுப்படி, இந்த சூழ்நிலை நீதித்துறை அமைப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனெனில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகிறார்.
முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் :
இந்தியாவில் 75 ஆண்டுகள் காலமாக சுதந்திரம் இருந்தபோதிலும், கல்வி, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று மௌலானா மதானி மேலும் கூறினார். பா.ஜ.க. அரசாங்கம் முஸ்லிம்களின் காலடியில் இருந்து தரையை இழுக்க விரும்புகிறது. மேலும் இந்த இலக்கை பெருமளவில் அடைந்துள்ளது என்றும்மௌலானா மதானி தெரிவித்தார்.
ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானியின் வேதனையும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிந்திக்கப்பட வேண்டியவையாகும். பல்வேறு வகைகளில் இந்திய முஸ்லிம்கள் நாட்டில் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ முடியாத ஒரு சூழல் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஐ.ஆர். போன்ற வகையில் முஸ்லிம்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பிரச்சினைகளையும் வேதனைகளையும் சந்தித்து வரும் இந்திய முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கைக்காக, முன்னேற்றத்திற்காக மௌலானா அர்ஷத் மதானி குரல் எழுப்பி இருப்பது ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, நாட்டை உண்மையாக நேசிக்கும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களை அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment