Saturday, November 22, 2025

டிரம்ப்-மம்தானி சந்திப்பு....!

 " டிரம்ப்-மம்தானி சந்திப்பு: கவனிக்க வேண்டிய அம்சங்கள் "

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற முஸ்லிம் வேட்பாளர்  சஹ்ரான் மம்தானி, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் நியூயார்க் மக்களின் கவனத்தை மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தேர்தலில் மிகவும் துணிச்சலான பேச்சுகள், மக்களிடம் வாக்கு கேட்கும் முறையில் புதிய அணுகுமுறை, எளிமையான வாழ்க்கை பணிகள் என அனைத்தும் கொண்டவர் தான் சஹ்ரான் மம்தானி. பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அவர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்லாமல், மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட மிக தெளிவாக, உறுதியாக தெரிவித்து வருகிறார்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உள்ளிட்ட எந்தவித உதவிகளையும் வழங்கக் கூடாது என்பது மம்தானியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அவர் மிகமிக உறுதியாகவும் இருந்து வருகிறார். அமெரிக்க மக்களின் வரிப் பணம், பாலஸ்தீன மக்கள் கொல்வதற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் உறுதிப்பட கூறி வருகிறார். மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக வாஷிங்டன் நகருக்கு சஹ்ரான் மம்தானி சனிக்கிழமை (22.11.2025) சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் பயணம் தற்போது உலகம் முழுவதும் வரவேற்றைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சஹ்ரான் மம்தானியின் புதிய அணுகுமுறை என்றே கூற வேண்டும். 

டிரம்ப்-மம்தானி சந்திப்பு :

நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற மம்தானி, அமரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.  டிரம்ப்-மம்தானியின் இந்த சந்திப்பு பலரை, குறிப்பாக பழமைவாதிகளை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு, மம்தானி தலைமையிலான நியூயார்க்கிற்கு "முழுமையான மற்றும் முழுமையான பொருளாதார மற்றும் சமூக அழிவு" ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்து இருந்தார்.  மேலும், கூட்டாட்சி நிதியை நிறுத்தி வைப்பதாகவும் அச்சுறுத்தினார். 

ஆனால் வாஷிங்டன், டி.சி.யில், இருவரும் நட்பு சூழ்நிலையில் பேசிக் கொண்டிருந்தனர். மம்தானி நிர்வாகத்தின் கீழ் நியூயார்க்கில் வாழ்வது தனக்கு வசதியாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை வலுவான தலைமைத்துவ திறன்களைக் கொண்ட "பகுத்தறிவு நபர்" என்றும் டிரம்ப் பாராட்டினார். மம்தானியும் அந்த உணர்வை எதிரொலித்தார். நியூயார்க்கை அதன் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் மாற்ற டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். மம்தானியின் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். மேலும், புதிய மேயரின் நியூயார்க்கர்களுக்காக பணியாற்றும் திறனில் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் சந்திப்பில், குடியேற்ற அமலாக்கம் மற்றும் மலிவு விலை குறித்த கவலைகளைப் பற்றி மம்தானி விவாதித்தார். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொதுவான இலக்குகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதிபர் டிரம்ப் கருத்து :

நியூயார்க் மேயர்  சஹ்ரான் மம்தானிவுடனான சந்திப்பு குறித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, அமெரிக்க மக்களை மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் தலைவர்களை வியப்பு மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  “மம்தானி என்னிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. நானும் அவரிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. அதில் நாங்கள் உடன்படுகிறோம்” என்று டிரம்ப் கூறினார். 

“சோசலிசத்தின் பயங்கரமான விளைவுகளை” கண்டிக்கும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பு குறித்து கேட்டபோது, ​​மம்தானி கவலைப்படவில்லை என்றார். ஒரு ஜனநாயக சோசலிஸ்டாக, தனது கவனம் வரவிருக்கும் வேலையில் இருப்பதாக அவர் கூறினார். “மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் நகரத்தை வாழத் தகுதியானதாக மாற்ற நாம் செய்ய வேண்டிய வேலை” என்று மம்தானி கூறினார்.

ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு :

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கும் நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான இந்த சந்திப்பு இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகளைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார். 

இந்த சந்திப்பு ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசிய மேயராக மம்தானியின் வரலாற்று வெற்றியை முன்னதாகப் பாராட்டிய தரூர், மக்கள் தீர்ப்பிற்குப் பிறகு தலைவர்கள் எவ்வாறு தேர்தல்களில் கடுமையாகப் போராட முடியும். ஆனால் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் டிரம்ப்-மம்தானி சந்திப்பு காட்டுகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டிரம்ப்-மம்தானி நல்லிணக்கத்தை பாராட்டிய தரூர், ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் உங்கள் கருத்துக்காக எந்தவித தடைகளும் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் போராடுங்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும், மக்களின் தீர்ப்பு வந்ததும், நீங்கள் இருவரும் சேவை செய்வதாக உறுதியளித்த நாட்டின் பொதுவான நலன்களுக்காக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண தாம் விரும்புவதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அதற்காக தனது பங்கை ஆற்ற முயற்சிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். 

உண்மையில் அதிபர் டிரம்புக்கும், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான சந்திப்பு மிகமிக தெளிவான ஒரு பார்வையை, நல்ல அம்சத்தை, கருத்தை உலகின் முன் வைத்துள்ளது. தேர்தல்களின்போது எப்படி எதிர்த்து செயல்பட்டாலும், தேர்தல் முடிந்ததும், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், நாட்டில் உண்மையான வளர்ச்சி, அமைதி, முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு ஏற்படும். அந்த வகையில், அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் சந்திப்பு இந்திய அரசியல் தலைவர்களுக்கு மட்டுல்லமல்லாமல், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு அனைவருக்கும்  ஒரு நல்ல பாடத்தை சொல்லியுள்ளது என்பது மறக்க முடியாத உண்மையாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: