" மக்களின் நம்பிக்கையை இழக்கும் நீதித்துறை
"
- ஜாவீத் -
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் உள்ள அனைத்து தன்னாட்சி அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. பாஜக ஆட்சியாளர்களின் சொல் அசைவுக்கு ஏற்ப, இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனை அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். இந்திய நீதித்துறை மீது மக்களுக்கு எப்போதும் ஒரு உயர்ந்து மதிப்பு மற்றும் நம்பிக்கை இருந்து வருகிறது. எந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்து வருகிறது. ஆனால், தற்போது நீதித்துறையும், ஆட்சியாளர்களின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்துவிட்டனவோ என்ற அச்சம் மற்றும் கேள்விக்குறி மக்களுக்கு எழுந்துள்ளது.
ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ, அல்லது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆசை காரணமாக, நீதிமன்றங்களில் தற்போது தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மெல்ல மெல்ல தகர்ந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளில் நிலைமை இன்னும் மோசமாக இருந்து வருகிறது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன.
சிறையில் உமர் காலித்
:
2020 டெல்லி கலவரத்தில் சதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக முஸ்லிம் இளைஞர் உமர் காலித் செப்டம்பர் 2020 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டன. பிப்ரவரி 2020 டெல்லி கலவரங்களுக்குப் பின்னால் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களின் போது பெரிய சதித்திட்டத்தை திட்டமிட்டதாக உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர், குல்பிஷா பாத்திமா மற்றும் ஷிஃபா-உர்-ரஹ்மான் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காலித் மீது இந்திய தண்டனைச் சட்டம், 1980 இன் கீழ் கலவரம் (பிரிவு 147 மற்றும் 148), கொலை (பிரிவு 302), சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் (பிரிவு 149) மற்றும் பகைமையை ஊக்குவித்தல் (பிரிவு 153A) உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (பிரிவு 13, 16, 17, 18) மற்றும் ஆயுதச் சட்டம், 1959 (பிரிவு 25 மற்றும் 27) ஆகியவற்றின் கீழும் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு டெல்லி கஜூரி காஸ் வழக்கில் கலவரம், நாசவேலை மற்றும் தீ வைப்பு சம்பவங்களுக்காக ஏப்ரல் 2021 இல் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், சதி குற்றச்சாட்டின் கீழ் அவர் செப்டம்பர் 2020 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலித் முதலில் மார்ச் 2022 இல் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு அதே ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்யப்பட்டது. காலித் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ், அரசு தரப்பு வழக்கு முரண்பாடான சாட்சி கணக்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள் கொண்ட வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் சூழலுக்கு வெளியே வழங்கப்பட்ட பேச்சுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதாக வாதிட்டார். இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் தனது இளமையை கழித்து வருகிறார். இப்படி பல எடுத்துக்காட்டுகள் நாட்டில் இருந்து வருகின்றன.
மௌலானா மஹ்மூத் மதானி வேதனை :
இத்தகைய சூழ்நிலையில், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கடுமையாக விமர்சனம் செய்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்றே கூற வேண்டும்.
நவம்பர் 29 தேதி சனிக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மௌலானா மஹ்மூத் மதானி உச்சநீதிமன்றம் குறித்து சில கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அரசாங்க அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய மதானி, நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகம் பாதுகாப்பற்றதாக உணர்கிறது என்று வேதனை தெரிவித்தார். "பாபர் மசூதி, மூன்று தலாக் மற்றும் பல வழக்குகள் தொடர்பான தீர்ப்புக்குப் பிறகு, சில ஆண்டுகளாக நீதிமன்றங்கள் அரசாங்க அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாகத் தெரிகிறது என்று மௌலானா விமர்சனம் செய்தார். நீதிமன்றம் ஞானவாபி மற்றும் மதுரா வழக்குகளை விசாரித்து வருகிறது. அதேநேரத்தில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்தையும் புறக்கணிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
நீதிமன்றங்களின் தன்மை குறித்து கேள்விகளை எழுப்பிய பல சந்தர்ப்பங்கள் நமக்கு உள்ளன. அரசியலமைப்பைப் பின்பற்றும்போதும், சட்டத்தை நிலைநிறுத்தும்போதும் மட்டுமே உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று அழைக்கப்பட தகுதியுடையது. அவ்வாறு செய்யாவிட்டால், அது 'உச்சநீதிமன்றம்' என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றது என்றும் மௌலானா மஹ்மூத் மதானி கடுமையாக சாடினார்.
வாதத்தில் நியாயம் :
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி அவர்களின் வாதத்தில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. அவரது கருத்தை சமூக நலனில் அக்கறைக் கொண்ட பலரும் ஆமோதிக்கின்றனர். பல வழக்கறிஞர்கள் கூட, நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வவ்போது வேதனையுடன் கருத்துகளை தெரிவித்து வருவதை சமூக ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதன் காரணமாக மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது இருந்து மரியாதை, மதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூறலாம்.
தற்போதைய சூழ்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றங்கள் யாருடைய அழுத்தத்திற்கும் ஆளாகாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இயங்க வேண்டும். ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இல்லாமல், நீதிமன்றங்கள் சட்டத்தின்படி, தீர்ப்புகளை வழங்க முன்வர வேண்டும். அப்படி உண்மையாகவே தீர்ப்புகளை, உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கினால், எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படமால் பல ஆண்டுகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இதன்மூலம் நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும். நீதித்துறை மீது புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடைசியாக, உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அவர்கள் சொல்லியுள்ள ஒரு கருத்தை இங்கு நாம் நினைவில் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். 'ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு காலத்தை தாண்டி நிலைத்திருக்க வேண்டும். அதனை நமது சட்ட அமைப்பு உறுதி செய்கிறது. தீர்ப்பு என்பது மணலில் எழுதப்பட்டதல்ல. அதனை மதிக்க வேண்டும். முகங்கள் மாறிவிட்டன என்பதற்காக முந்தைய தீர்ப்புகளை மாற்ற முயற்சிக்க கூடாது' என்று நீதிபதி நாகரத்னா அவர்கள் மிக அழகாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை நீதியரசர்கள் மற்றும் நீதிமன்றங்கள் கவனத்தில் கொண்டு, முகங்கள் மாறிவிட்டன என்று நினைத்துவிட்டு, தீர்ப்பை வழங்காமல், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தீர்ப்பை நியாயமாகவும், விரைவாகவும் வழங்கினால் மட்டுமே மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதான நம்பிகை மேலும் அதிகரிக்கும்.
==============================






No comments:
Post a Comment