" மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை இணைத்து பயன்படுத்தும்
இராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் குடும்பம் "
- சில சுவையான தகவல்கள் -
தமிழகத்தில் எல்லோருடைய கவனத்தை கவரும் வகையில் இருக்கும் முக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக இராமநாதபுரம் தொகுதி இருந்து வருகிறது. இந்த தொகுதியின் உறுப்பினராக (எல்.எல்.ஏ.) இருப்பவர் காதர் பாட்சா முத்துராமலிங்கம். இப்படி முஸ்லிம் மற்றும் சகோதர சமுதாய பெயரை இணைத்துக் கொண்டு, தனது பெயரை காதர் பாட்சா முத்துராமலிங்கம் என வைத்துக் கொண்டு இருக்கும் இவர், உண்மையில், இஸ்லாமியரா அல்லது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்வி அல்லது குழப்பம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய மக்களுக்கு ஏற்படுவது இயல்பாகவே இருந்து வருகிறது. காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற ஒத்திசைவான பெயரில் பல சுவையான தகவல்கள் அடங்கி இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
தனித்துவமான கலவையான பெயர் :
உடன்பிறப்பே வா திட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (நவம்பர் 24, 2025) சென்னையில் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்த தி.மு.க. தலைவர்களில், ராமநாதபுரம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவர். அவரது தனித்துவமான கலவையான முஸ்லிம் மற்றும் இந்து இணைந்த பெயர் நீண்ட காலமாக பொது ஆர்வத்தை ஈர்த்துள்ளது. திரைப்பட நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற தமிழ் திரைப்படத்தையும் கூட ஊக்கப்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் எம். அப்பாவு சட்டமன்றத்தில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற அவரது பெயரை அழைக்கும் போதெல்லாம், அது எப்போதும் கேள்விகளைத் தூண்டுகிறது. எம்.எல்.ஏ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா என்று பலர் யோசிக்கிறார்கள். வியப்புடன் ஆச்சரியம் அடைகிறார்கள்.
காதர் பாட்சா முத்துராமலிங்கம் விளக்கம் :
இப்படி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், இராமநாதபுரம் தொகுதியில் உள்ள மக்களும், ஏன் தமிழக மக்களும், காதர் பாட்சா முத்துராமலிங்கம் பெயர் குறித்து தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு பெயர் வைத்து பயன்படுத்துவதில் உள்ள உண்மையான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அருமையான விளக்கத்தை அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மூன்று தலைமுறைகளாக காதர் பாட்சா பெயர் :
“நாங்கள் மூன்று தலைமுறைகளாக ‘காதர் பாட்சா’ என்ற பெயரை பயன்படுத்தி வருகிறோம். என் தந்தை காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர், என் பெயர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், என் மகன் பாட்சா” என்று இராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றும் இவர், தனது பாட்டி, மீரக்கல், மறைந்த ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் தாயார் இந்திரானிணியின் உறவினர் என்றும் பெருமையுடன் தெரிவிக்கிறார்.
மேலும் விவரிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம், "பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர், முஸ்லிம் சமுதாய மக்களுடன் எப்போதும் பாசமும் அன்புன் செலுத்தி நெருக்கமாக இருந்தவர். தேவரின் தாயார் இறந்தபிறகு, அவர் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு சாந்தா பீவி என்ற முஸ்லிம் செவிலியர் பாலுட்டி வளர்த்தார். மேலும், கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளியில் அவர் கல்வி பயின்றார். இதன் காரணமாக தங்களுடைய குடும்பம், முஸ்லிம் சமுதாய மக்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது" என்று கமுதி தாலுகாவில் உள்ள மேலராமநதி கிராமத்தில் வசிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களது குடும்பம் நீண்ட காலமாகவே இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து மிகுந்த நன்மதிப்பு கொண்ட குடும்பமாக இருந்து வருகிறது. எனது பாட்டி மீரக்கல் பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் வேதனை அடைந்து வந்த நிலையில், நாகூர் தர்காவிற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனைக்குப் பிறகு, என்னுடைய தந்தை பிறந்தார். நாகூர் ஆண்டவரின் ஆசி அவருக்கு கிடைத்ததால், காதர் பாட்சா என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. பின்னர், வெள்ளைசாமி தேவர் என்ற பெயரும் இணைத்துக் கொண்டு, காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர் என்று அவர் அழைக்கப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் பாட்னாரின் பெயர் வெள்ளைசாமி தேவர் என்பதால், அதை என்னுடைய தந்தையின் பெயருடன் இணைத்து வைக்கப்பட்டது.
சமூக நல்லிணக்கத்தின் கோட்டை :
இராமநாதபுரம் எப்போதும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் சமூக நல்லிணக்கத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. கொடை வள்ளல் சீதக்காதி, இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல், ஆலோசகராகவும் இருந்தவர். இப்படி, இராமநாதபுரம், இந்து முஸ்லிம் சமுதாய மக்களின் கலவையாக எப்போதும் அமைதியாக வாழ்ந்து வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரைப் பின்பற்றி, தேவர் சமுதாய மக்கள், முஸ்லிம் சமுதாய மக்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தி, எப்போதும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் எங்கள் குடும்பமும், மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை எங்கள் பெயர்களுடன் இணைத்து பயன்படுத்தி வருவது எங்களுக்கு பெருமையாக மட்டுமல்லாமல், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமை அனைத்துச் சமுதாய மக்கள் மத்தியில் எடுத்துரைக்க எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை நாங்கள் தொடர்ந்துகொண்டே இருப்போம்" இப்படி தனது பெயருடன் காதர் பாட்சா என்ற முஸ்லிம் பெயர் இணைத்து அழைப்படுவது குறித்து பல சுவையான தகவல்களை இராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கம் விவரித்தபோது மிகுந்த வியப்பாகவும் அதே நேரத்தில் சமூக நல்லிணக்கம் தழைக்க அவரது குடும்பம் செய்துவரும் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment