Saturday, November 15, 2025

தயக்கமே கூடாது.....!

 

தயங்கி விடாதீர்கள்....!

நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு பணியை செய்ய விரும்பினாலும், முதலில் நமது மனம் கொஞ்சம் தயக்கம் அடையும். அந்த நல்ல பணி வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்று சிந்திக்க வைக்கும். இப்படி தயக்கம் அடையும்போது, வெற்றிக்கான அந்த பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படும். இதனால், வெற்றி என்பது வெறும் கனவாகவே அமைந்துவிடும்.

வாழ்க்கையில் நல்ல பணிகளை செய்ய ஒருபோதும் தயங்கவே கூடாது. முடிந்த அளவு ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து அந்த பணியை தொடங்கிவிட வேண்டும். வாழ்க்கையில் பெரும் அளவுக்கு சாதித்த பலரின் வரலாறுகளை கூர்ந்து கவனித்தால், வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலை அடையாமல், தங்களது இலட்சியப் பணிகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் தொடங்கியதே முக்கிய காரணம் என்பது தெரியவரும் மாறாக, தயங்கி நின்றவர்கள் வரலாற்றில் இடம்பெறாமல், காணாமல் போனார்கள் என்பது தான் உண்மையாகும்.

முஸ்லிம்களின் நிலை :

தற்போது மிக வேகமாக உலகம் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய சவால்களை மனிதர்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் காரணமாக சிலர் தங்களது பணிகளில் சரியாக ஈடுபடாமல் அல்லது அந்த பணியை ஆரம்பிக்காமல், அதில் முழு கவனம் செலுத்தாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய மனநிலையில் எப்போதும் ஒருவித தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. ஒருசிலரை விட பெரும்பாலான முஸ்லிம்கள் மத்தியில் தயக்கம் என்ற குணம் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கிக் கொள்ளும் அவர்கள், வாழ்க்கையில் நிம்மதி இழந்து, தோல்வி எனும் மிகப்பெரிய பரிசைப் பெறுகிறார்கள்.

ஒன்றிய ஆட்சியாளர்களின் நடைமுறைகள் காரணமாக இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை  தற்போது ஒருவித பதற்றமான சூழலில் இருந்து வரும் நிலையில், அவர்களின் சிந்தனைகள் சரியான திசையை நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. உதாரணமாக, தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் முஸ்லிம்களின் நிலையை கொஞ்சம் கவனித்தால், அவர்கள் இன்னும் தயக்கத்துடன் இருந்து வருவதும், சோம்பேறித்தனம் அவர்கள் மத்தியில் இருப்பதும் நன்கு தெரிய வருகிறது. இந்த பிரச்சினையை அவர்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தான் உண்மையாகும்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பட்டியலுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பம் எப்படி பூர்த்தி செய்வது என்பதில் முஸ்லிம்கள் மத்தியில் தயக்கம் மற்றும் சந்தேகம் இருந்து வரும் நிலையில், அதற்கு விடை காணும் வகையில் எந்தவித முயற்சிகளையும் பெரும்பாலான முஸ்லிம்கள் எடுக்கவே இல்லை என்றே கூறலாம். இந்த விவகாரத்தில் பல முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இருந்தும் முஸ்லிம்கள் மத்தியில் இன்னும் சரியான அளவுக்கு விழிப்புணர் ஏற்படவில்லை. அவர்களிடம் எப்போதும் இருக்கும் அலட்சியம் மற்றும் தயக்கம் என்ற குணங்கள், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பிரச்சினையிலும் தொடர்கிறது. முஸ்லிம்கள் இன்னும் தயக்கத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த தயக்கம் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் தயக்கம் உடனே நீங்க வேண்டும். அவர்கள் பிரச்சினையின் தீவிரத்தை நன்கு உணர்ந்துகொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பட்டியலில் தங்களது பெயர் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர்களையும், தங்களது மஹல்லாவில் உள்ள மற்றவர்களின் பெயர்களையும் சேர்க்க உடனே பணியில் இறங்க வேண்டும்.

தயக்கமே கூடாது :

ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களது  வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தயங்கி நின்றதே கிடையாது. ஓர் இறைக் கொள்கையை மக்களிடையே எடுத்துக் கூறி, நல்ல வாழ்க்கையை போதிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் இறைத்தூதர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தார்கள். தங்களது வாழ்க்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த துயரங்கள், வேதனைகளை போன்று இப்போது முஸ்லிம்களாகிய நாம் சந்திக்கவில்லை. நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் சிறிய பிரச்சினைகள் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்றை படித்தால், பல அற்புதமான தகவல்கள் நமக்கு கிடைக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரி 8 ரமலான் மாதத்தில் (டிசம்பர் 629 அல்லது ஜனவரி 630) மக்காவை வெற்றிகரமாகக் கைப்பற்றினர். இந்த மக்கா வெற்றி, குரைஷிகள் நபித்தோழர்களுடன் செய்துகொண்டிருந்த போரின் முடிவாக அமைந்தது. மேலும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், குறைஷிகள் சரணடையவும் வழிவகுத்தது.

மக்காவிற்குள் நுழைந்த முஸ்லிம்களுக்கு எதிராக யாரேனும் சண்டையிட்டாலொழிய எந்தத் தீங்கும் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். மேலும், இம்முயற்சி இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கில் இருந்தது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குரைஷிகளுடன் போரிட மக்காவை நோக்கி தமது படையுடன் பயணத்தைத் தொடங்கினர்.  மக்காவை அடையும் போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தது.  அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தபோது, குரைஷிகள் எந்த எதிர்ப்புமின்றி சரணடைந்தனர்.  இதன் விளைவாக உலகில்  இஸ்லாம் பரவத் தொடங்கியது.  பல பழங்குடியினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.  இந்த வெற்றி, முஸ்லிம்-குரைஷி போர்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தியது.

இந்த மக்கா வெற்றியின் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம் என்னவென்றால், ஒருபோதும் தயங்கி நின்றுவிடக் கூடாது. ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி துணிச்சலுடன் பயணித்துக் கொண்டே இருந்தால், நிச்சயம் நம்முடைய இலக்கை நாம் அடைய முடியும்.

எனவே, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பட்டியல் தயாரிப்பு பணியில் முஸ்லிம் சமுதாயம் இன்னும் கொஞ்சம் அதிகமாக தீவிரம் காட்ட வேண்டும். தகுதியுள்ள ஒரு முஸ்லிமின் பெயரும் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவே கூடாது. கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த நாட்டின் மண்ணுக்காக, விடுதலைக்காக தங்களது உயிரையும், செல்வத்தையும் இழந்த முஸ்லிம்கள், இந்திய நாட்டின் சொந்த குடிமக்கள் ஆவார்கள். தற்போது பா.ஜ.க. முஸ்லிம்களை துன்பத்திற்குள் சிக்க வைக்க சதிகளை செய்துக் கொண்டே இருக்கிறது. இந்த சதியை நன்கு உணர்ந்துகொண்டு, முஸ்லிம் சமுதாயம் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதி செய்ய வேண்டும். கடைசியாக மீண்டும் சொல்கிறோம், தயங்கி விடாதீர்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: