Wednesday, March 27, 2024

கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும்....!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும்....!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் என்பது, நாட்டு மக்கள் அனைவரின் விருப்பமாக தற்போது இருந்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏன் வீழ்த்தப்பட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பல அற்புதமான விளக்கங்களை மக்கள் முன் வைக்கிறார்கள். 

கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பது அவர்களின் வாதமாக இருந்து வருகிறது. உயரும் பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, ஜனநாயகத்தை நசுக்குதல், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில்லை தோல்வி, வெறுப்பு அரசியல், பொருளாதார சரிவு, சமூக கட்டமைப்பில் பாதிப்பு என ஏராளமான புள்ளிவிவரங்களை அரசியல் கட்சிகள் முன் வைக்கின்றன.

பா.ஜ.க.வும் ஊழலும்:

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, தாம் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஊழலே நடைபெறாது என உறுதி அளித்தார். "நானும் சாப்பிட மாட்டேன். யாரையும் சாப்பிட விட மாட்டேன்" என்று ஊழல் குறித்து அவர் புதிய விளக்கம் அளித்தார். 

ஆனால், ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு, பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மோடி, ஊழலை ஒழித்தாரா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. ஆனால், ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக, பா.ஜ.க. செய்த ஊழல்கள் குறித்து தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 7 பெரிய ஊழல்களை செய்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) வெளியிட்டுள்ளது. அதன்படி, பாரத்மாலா திட்ட ஏலத்தில் மோசடி, துவாரகா எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 250 கோடி ரூபாய் செலவு, சுங்கச்சாவடி விதிகளை மீறி மக்களிடம் இருந்து 132 கோடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூல் செய்துள்ளது உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் ஒரே எண்ணின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அதோடு, அயோத்தி வளர்ச்சித் திட்டத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஓய்வூதியத் திட்டத்தின் பணத்தை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. எச்ஏஎல் நிறுவனத்தில், விமான என்ஜின் வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடியால் 154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி கூறியுள்ளது.

தேர்தல் பத்திர மெகா ஊழல்:

இதுஒருபுறம் இருக்க, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை என்ற திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவுக்கு பா.ஜ.க. ஊழல் செய்து இருப்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. இந்த விவகார வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

கடந்த நான்காண்டுகளில் (ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024) தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச நன்கொடையைப் பெற்ற கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க.விற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 6 ஆயிரத்து 986 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக எஸ்பிஐ அளித்த தகவல்களின்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் பத்திர ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட முக்கிய ஊடகங்கள் மறுத்து வருகின்றன. அதுகுறித்த விவாதங்கள் கூட நடத்தப்படுவதில்லை. மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பல்வேறு புதிய பிரச்சினைகள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உருவாக்கி வருகின்றன. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவு நிதியை பா.ஜ.க. எப்படி பெற்றது என்று கேள்வி எழுப்பினால், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை மிரட்டி, ஒன்றியத்தின் சுதந்திரமான அமைப்புகள் மூலம் சோதனை நடத்தி, அதன்மூலம் அதிகளவு நிதியை பா.ஜ.க. பெற்று வந்து இருக்கிறது என்பது தற்போது உண்மையாகியுள்ளது. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய இந்த பட்டியலில், பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், சுலா ஒயின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பிறகு அவர்கள் பத்திரங்கள் வாங்கி நன்கொடை அளித்து இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் பணம் பறிக்கும் வழியே தேர்தல் பத்திரம் திட்டம் என கடுமையாக சாடி இருக்கிறார்,

பரகலா பிரபாகர் கருத்து:

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், தற்போது கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது.

"தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையேதான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம், தற்போது இருப்பதைவிட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் ஒன்றிய அரசை கடந்து பொதுமக்களிடம் அதிவேகமாகச் சென்றடைய தொடங்கிவிட்டது. அனைவருக்கும் இந்தத் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய தொடங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த பா.ஜ.க. அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என தாம் நினைப்பதாகவும்,  2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது” என்றும் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

முழிக்கும் பா.ஜ.க.:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவு நிதியை சுருட்டி, மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்துள்ள பா.ஜ.க. மற்றும் அக்கட்சியின் தலைவர்கள், தற்போது என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், தங்களது மெகா ஊழல் நாட்டு மக்கள் மத்தியில் வெள்ள வெளிச்சம் ஆகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், அதனை திசைத் திருப்ப பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். 

ஆனால், தற்போது காலம் கடந்துவிட்டதால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மீது வேண்டும் என்றே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். அதில் ஒன்று வாரிசு அரசியலாகும். ஆனால், எதிர்க்கட்சிகளில் இருப்பதைவிட பா.ஜ.க.வில் தான் அதிகளவு வாரிசு அரசியல் இருந்து வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 

எச்சரிக்கை மிகவும் அவசியம்:

நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, முற்றிலும் பா.ஜ.க.விற்கு எதிராக மாறிவிட்டது. நாட்டின் ஒரே நம்பிக்கையாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மட்டுமே இருந்து வருகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ.க. பல்வேறு சதித் திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்ளும். கடந்த தேர்தலில் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால், அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து ஆட்சியை கைப்பிடித்த பா.ஜ.க. மீண்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதா என ஆர்வத்துடன் இருந்து வருகிறது. 

எனவே, எதிர்க்கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் மற்றும் ஊழல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மதத்தை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டங்களை சரியான பிரச்சாரம் மூலம் உடைக்க வேண்டும். நாட்டில், அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால், ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும். இதனை நாட்டு மக்களின் மனங்களில், பதியவைத்து அவர்களின் எண்ணங்களில் பிரதிபலிக்க எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, நாட்டு நலனின் அக்கறைக் கொண்ட அனைவரும் பணியாற்ற வேண்டும். உழைக்க வேண்டும். 18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைவது உறுதி. எனினும், இந்த எண்ணம் மற்றும் எதிர்பார்ப்பின் காரணமாக, எதிர்க்கட்சிகளும், நாட்டு மக்களும், அலட்சியமாக இருந்துவிடாமல், தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகி, ஒன்றியத்தில் நல்லாட்சி அமையும் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: