Friday, March 22, 2024

தேர்தலும், முஸ்லிம்களின் பொறுப்புகளும்....!

 நாடாளுமன்றத் தேர்தலும், முஸ்லிம்களின் பொறுப்புகளும்....!

  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் எப்ரல் 19ஆம் தேதி முதல் ஜுன் ஒன்றாம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 18வது மக்களவைத் தேர்தலில், அவையில் உள்ள மொத்தம் 543 இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜுன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்  அறிவிக்கப்பட உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்த தேர்தலை, மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை, இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலகமே எதிர்நோக்கி இருக்கிறது. 

தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற இந்தியா கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீகிற்கு மீண்டும் இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு மீண்டும் தற்போதை எம்.பி.யாக உள்ள நவாஸ் கனியே போட்டியிடுகிறார். இதேபோன்று மற்ற 39 தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இந்தியா கூட்டணியில் இடம்பெற்று கட்சிகளின் வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். 

வழக்கம் போல, தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான அலை தற்போதும் வீசி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில், பாஜக மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் இருந்து வருகிறார்கள். தமிழக மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத மத்திய பாஜக அரசு இருந்து வருவதால், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தீர்வுகள் காணப்படவில்லை. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நூறு சதவீதம் வெற்றிக் கனிப் பறிப்பார்கள் என்பது முடிவான ஒன்றாகும். எனினும், தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பி, வாக்குகளை சிதறச் செய்ய பாஜக திட்டங்களை அரங்கேற்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எச்சரிக்கை மிகவும் அவசியம்:

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதி என்றாலும், அந்த கூட்டணி தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாஜக அதிமுகவை இரண்டாக உடைத்துவிட்டு, தற்போது தமிழகத்தில் திமுகவா, அதிமுகவா என்று இருந்த நிலையை உடைத்துவிட்டு, திமுகவா, பாஜகவா என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது உண்மையாகும். இதேபோன்று, பணபலம் மூலம், ஏராளமான சிறிய கட்சிகளை தன்வசம் கொண்டு வந்து, அவர்களின் வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டு, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறது. எனினும், பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அதேநேரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள், சிதறினால், அது பாஜகவின் திட்டங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். எனவே, திமுக கூட்டணி மிகுந்த எச்சரிக்கையாகவும் உஷாராகவும், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

குறிப்பாக, தமிழகம் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், இந்த முறை பாஜக நிச்சயம் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது என விரும்புகிறார்கள். எனவே, தேர்தல் பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், மிகுந்த கவனம் மற்றும் எச்சரிக்கை என்ற நிலைகளை கையாண்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர்கள், தொண்டர்கள், மற்றும் மக்கள் ஆகிய அனைவரும் செயல்படுவது மிகவும் அவசியமாகும். 

முஸ்லிம்களின் பொறுப்புகள்: 

இந்திய முஸ்லிம்கள் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலின்போது,  ஆற்ற வேண்டிய தங்களது ஜனநாயக கடமையின் முக்கியத்துவம் குறித்தும், இன்னும் சரியாக புரிந்துகொள்ளாமலும் அறிந்துகொள்ளாமலும் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக, நாம் தேர்தலில் வாக்களித்தால் மட்டும், பாஜக தோல்வி அடைந்துவிடுமா? என்றும், நம்முடைய வாக்குகள் மூலம் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிடுவார்களா? என்றும் அறியாமையால் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இத்தகைய கேள்விகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல, அவசியம் இல்லாதவை என்பதையும் முஸ்லிம் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அமைச்சர் பதவியை ஏற்றவர்கள் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். எனவே, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, தங்களது ஜனநாயகக் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு நடக்கும் அன்று, சோம்பல் பட்டு வீட்டில் முடங்கி கிடக்கக் கூடாது. 

முஸ்லிம்களுக்கு விரோதமான ஆட்சி: 

தற்போதைய சூழ்நிலையில். 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்ச்சி அடைந்து. படுதோல்வியை சந்தித்து, அரசியலில் இருந்து காணாமல் போக வேண்டும். கடந்த பத்து ஆண்டு கால தனது ஆட்சியில், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வந்தது. தற்போதும் செயல்பட்டு வருகிறது. மேலும், முஸ்லிம் சமுதாயத்தை எப்போதும் பதற்றத்தில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என திட்டமிட்டு, பாஜக காரியங்களை அரங்கேற்றியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து, ரமலான் நோன்பு தொடங்கும் நேரத்தில், முஸ்லிம்களை பதற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் திடீரென குடியரசு திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் பாஜக அரசு அமல்படுத்தியது. முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் பாஜக அரசு பறித்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நூறு சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதை முஸ்லிம்கள் தங்களது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்:

இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஓரளவுக்கு அமைதியாக வாழ வேண்டுமானால், காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆட்சி மத்தியில் ஏற்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவுக்கு வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாஜக ஆட்சியாளர்கள் எடுத்துவரும் பல நடவடிக்கைகளை பார்க்கும்போது, அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது. இதன் காரணமாக தான், அவர்கள் தங்களுக்கு  சாதகமான ஊடகங்கள் மூலம் போலி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு அதை மக்கள் மீது திணித்து, நாட்டு மக்களை குழப்பி வருகிறார்கள். 

ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்துமுடியும் வரை, இதுபோன்ற குழப்பங்களை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்து இந்தியா கூட்டணியின் வெற்றியின் மூலம் மட்டுமே, தங்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். 

முஸ்லிம்களின் கடமைகளும் பொறுப்புகளும்:

18வது மக்களவைத் தேர்தல், சாதாரண தேர்தல் இல்லை என்பதை இந்திய முஸ்லிம்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வழக்கம் போல், இந்த தேர்தலில் வாக்குகளை அளிக்காமல் இருக்கும் தங்களது நிலைப்பாட்டை அவர்கள் கட்டாயம் கைவிட வேண்டும். பாஜக ஆட்சியில் இந்திய முஸ்லிம் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், பதற்றங்கள் ஆகியவற்றை ஒரு நிமிடம் தங்களது மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, சிந்தித்துப் பார்க்கும் கடமை முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. 

எனவே, நான் வெளியூரில் இருக்கிறேன். என்னால், வாக்கு போட ஊருக்கு வர முடியாது. இன்று வெள்ளிக்கிழமை, ஜும்மா தொழுகைக்கு போக வேண்டும். எனவே எனக்கு வாக்கு செலுத்த நேரமில்லை. இதுபோன்ற காரணங்களை சொல்வதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள், முஸ்லிம்கள் தங்களது ஜனநாயக கடமையை சரியாக செய்வது  இல்லை என்றும், முஸ்லிம் பெண்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகளை அளிப்பது இல்லை என்றும் புகாரை தெரிவித்து வருகின்றன. 

இந்த புகாரில் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது. தேர்தலில் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமை, வாக்கு என்பது தங்களது உரிமை என்பது குறித்தும் முஸ்லிம்கள் இன்னும் சரியாக அறிந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். எனவே தான், மிகவும் சோம்பலுடன் இருந்து தேர்தலில் வாக்கு அளிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். சில முஸ்லிம் பணக்காரர்கள், தேர்தல் வாக்களிப்பது தங்களுக்கு கவுரச் குறைச்சல் என்று நினைத்துக் கொண்டு வாக்கு அளிப்பது இல்லை. 

ரமலான் மாதத்தில் நோன்பு எப்படி முஸ்லிம்களுக்கு கடமையாக இருக்கிறதோ, அதேபோன்று, வாக்கு அளிப்பதும் கட்டாய கடமை என்பதை முஸ்லிம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த கடமையை நிறைவேற்றவில்லை எனில், ஏக இறைவனுக்கு நாம் கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. 

வாக்கு அளிக்காமல் இருப்பது தீனுக்கு செய்யும் துரோகம் என ஒரு ஆலிம் சாஹிப் ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார். அது உண்மை தான். வாக்கு அளிக்காமல் இருப்பது இஸ்லாத்திற்கு முஸ்லிம்கள் செய்யும் துரோகம் ஆகும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாளில், முதல் வேலையாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். 

தாங்கள் மட்டும் வாக்கு அளித்தால் மட்டும் போதாது, தங்கள் வீட்டில் உள்ள பெண்கள், உறவினர்கள், மஹல்லாவில் உள்ள முஸ்லிம்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரையும் வாக்கு அளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் தேர்தலில் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலும், முஸ்லிம்களும்:

பாஜக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விடுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அப்படி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லையெனில், ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். எந்த காரணத்திற்காக என்னுடைய பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது என கேள்வி எழுப்ப வேண்டும். இதற்கு தேர்தல் அதிகாரி சரியான பதிலை, விளக்கத்தை அளிக்காவிட்டால், அவர் சட்டப்படி இரண்டு ஆண்டுகள் சிறைக்குச் செல்லக்கூடிய நிலை உருவாக்கும் என்பதை அவருக்கு எடுத்துக் கூற வேண்டும். 

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் சரியான முறையில் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டதால், மீண்டும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்கு அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற நிலையை பாஜக ஆட்சியாளர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. போன்ற சட்டங்கள் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை ஒழிக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் காரியங்களை ஆற்றி வருகின்றன. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்கள் நூறு சதவீதம் வாக்குகளை அளிக்க வேண்டும். ஒரு வாக்கு கூட போடாமல் இருக்கக் கூடாது. கடைசியாக, மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறோம். நாடாமன்றத் தேர்தலில் வாக்களிப்பது இஸ்லாத்தின் முக்கிய கட்டாய கடமைகளில் ஒன்று என்பதை முஸ்லிம்கள் தங்கள் மனத்தில், உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். 

============================

No comments: