Thursday, March 21, 2024

கோடிகளை குவிக்கும் பிரியாணி வணிகம்...!

பிரியாணி வணிகத்தில்,கோடிகளை குவிக்கும் வர்த்தகர்கள்....!

-  ஜாவீத்  -

பெரும்பாலான இந்தியர்களின் உணவாக பிரியாணி மாறிவிட்ட நிலையில், இந்த தேசம் பிரியாணி தேசம் தானே என சொல்லும் அளவுக்கு, இந்திய மக்கள் மத்தியில் பிரியாணிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. சூடான, சுவையான பிரியாணியை சுவைத்து ஆனந்தம் அடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிரியாணி கடைகளின் எண்ணிக்கையும் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தலைநகர் டெல்லி, வணிக நகரமான மும்பை, சென்னை, ஹைதராபாத், லக்னோ, பெங்களூரு, போபால் உள்ளிட்ட நகரங்களில் பிரியாணிக்காகவே ஏராளமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெரிய நட்சத்திர விடுதிகளில் இருந்து தெருவோரக் கடைகள் வரை, தற்போது பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் மனங்களில் இடம்பிடித்து விட்ட பிரியாணி, தன்னுடைய ஆதிக்கத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் செலுத்தி வருகிறது. 

பிரியாணியின் இந்த ஆதிக்கம் காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் சிறு தொகையை முதலீடாகக் கொண்டு, பிரியாணி வணிகத்தில் இறங்கி, தற்போது தங்களது வாழ்க்கையில் உயர்ந்து வருகிறார்கள். 

பிரியாணி வணிகமும்  பொருளாதாரமும்:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரியாணி ஒரு முக்கிய பங்கு ஆற்றி வருகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இல்லை. மக்கள் சுவைத்து சாப்பிடும் இந்த பிரியாணி, ஏழை விவசாயிகள் முதல், நடுத்தர மக்கள் வரை, ஏன் தொழில் அதிபர்களுக்கும் கூட, பணத்தை வாரி குவித்து அளித்து வருகிறது. இதன்மூலம், அவர்களின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரியாணி வணிகம் மூலம், ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் வரி கிடைத்து வருகிறது. 

தமிழகத்தில் பிரியாணி வணிகம் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள முக்கிய பெருநகரங்களில் பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பிரியாணி விற்பனை நிறுவனங்கள் இருந்து வருகின்றன. 

ஒருசில குறிப்பிட்ட நிறுவனங்களில் கிடைக்கும் பிரியாணி, மிகவும் பிரபலம் என்பதால், அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கும். 300க்கும் மேற்பட்ட பிரியாணி வணிக நிறுவனங்களில் மட்டுமல்லாமல், அமைப்பு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், அந்தந்தப் பகுதிகளில் மட்டும் உள்ள உள்ளூர் கடைகள் என ஏராளமான நிறுவனங்களில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

காலை, பகல், இரவு என எந்த நேரமும் பிரியாணியை தங்களது உணவாக சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது, அதன் விற்பனை மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை  நாம்  அறிந்துகொள்ள முடிகிறது. 

கோடிகளை குவிக்கும் நிறுவனங்கள்:

மிகப்பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு மாதமும், சுமார் 30 லட்சம் ரூபாய் அளவில் பிரியாணி மூலம் வர்த்தகம் செய்து வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு நிறுவனம் பிரியாணியை வர்த்தம் செய்ய முடிகிறது என்று பிரியாணி வணிகம் குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பெரிய நிறுவனங்களில் 180 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை  என்ற விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பக்கெட் பிரியாணி, பத்து பேரும் சாப்பிடும் வகையிலான பிரியாணி பக்கெட் என பல்வேறு வகைகளிலும் பிரியாணி வணிகம் செய்யப்பட்டு வருகிறது.  சிறிய பிரியாணி கடைகளில், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பிரியாணி விற்பனை செய்யப்படுவதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகிய அனைவரும் தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப நாள்தோறும் பிரியாணியை சாப்பிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். 

இதேபோன்று, நாள்தோறும் 15 கிலோ அளவில் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்யும் சிறிய நிறுவனங்களும் கணிசமான இலாபம் ஈட்டி வருகின்றன. ஒரு கிலோ பிரியாணியை 10 பேர் சாப்பிடலாம் என்பதால், மக்கள் தற்போது தங்களது வீடுகளில் பிரியாணி தயாரிப்பதை குறைத்துவிட்டு, வணிக நிறுவனங்களில் கிலோ கணக்கில் பிரியாணியை வாங்கி வந்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள். இதன்மூலம், வணிக நிறுவனங்களில் பிரியாணி விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை:

பிரியாணி பல வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, பீப் பிரியாணி, வெஜிடெபிள் பிரியாணி, காளான் பிரியாணி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பிரியாணியை தயாரிக்க தேவைப்படும் பொருட்களாக ஆடு, மாடு, அரிசி, முட்டை, கோழி, மற்றும் பிற மசாலாப் பொருட்கள் அனைத்தும் நமது விவசாயிகளின் உழைப்பு மூலம் கிடைக்கிறது. பிரியாணியின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய விவசாயிகளின் வருமானமும் உயர்ந்து வருகிறது. 

இதேபோன்று, பல சரக்கு வணிகம் நடத்தும் வியாபாரிகளும் பிரியாணி தயாரிக்க தேவையான பொருட்களை விற்பனை செய்து வருவதால், அவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பிரியாணி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை காரணமாக, பலசரக்கு விற்பனை நிறுவனங்களில், பிரியாணிக்கு தேவையான பொருட்களும் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. ஆக பிரியாணி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் ஒரு உணவாக இருந்து வருகிறது.

அத்துடன், பிரியாணி சமையல் கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை அளிக்கும் ஒரு வரப்பிரசாதமாக பிரியாணி இருந்து வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பிரியாணி சமையல் கலைஞர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அவர்களின் குடும்பமும் வளம் பெற்று வருகிறதும் பரம்பரை பரம்பரையாக பிரியாணி சமையல் கலைஞர் தொழில் செய்து வருபவர்களையும் நாம் காண முடிகிறது. அவர்களின் கைப்பக்குவம் மிகச் சிறப்பாக இருப்பதால், இவர்கள் சமைக்கும் பிரியாணிக்கு எப்போதும் ஒரு மவுசு இருந்துக் கொண்டே இருப்பதால், அவர்களுக்கு தொடர்ந்து தொழில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. 

பிரியாணி வணிகத்தில் ஆர்வம்:


குறைந்த முதலீட்டில் நிறைய இலாபம் தரும் தொழிலாக பிரியாணி விற்பனை தொழில் தற்போது மாறிவிட்டது. இதன் காரணமாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தற்போது பிரியாணி வணிகத்தில் தங்களது கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் பலர், கூட்டாக இணைந்து பிரியாணி வணிகத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவுக்கு சாதனைகளை குவித்து வருவதை நாளிதழ் செய்திகள் மூலம் நாம் அறிய முடிகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியம் இளைஞர்கள், தற்போது பணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நல்ல சுவையான பிரியாணியை தேடிபிடித்து உண்டு வருகிறார்கள்.

இப்படி, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களை கவர்ந்த பிரியாணி, தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சமாகவே மாறிவிட்டது. இனி வரும் காலங்களிலும் கூட, புதிது புதிதாக பிரியாணி நிறுவனங்கள் தொடங்கப்படும். அதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் புதிய ஒளி பிறக்கும். அவர்களின் வாழ்க்கையில் புதிய மறுமலர்ச்சியும் ஆனந்தமும் ஏற்படும். ஆக, பிரியாணி மக்களின் வாழ்க்கையில் ஒளியை தரும் ஒரு உணவு என்பது மறுக்க முடியாது உண்மையாக மாறிவிட்டது.

========================


No comments: