Tuesday, March 19, 2024

நம்பிக்கை என்பது ....!


நம்பிக்கை என்பது யாதெனில்....!

 

மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டுமானால், அவனிடம் ஒரு பண்பு, ஒரு குணம் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த பண்பின் மூலம் அனைத்துவிதமானப் பிரச்சினைகளையும் சமாளித்துவிட்டு, மனிதன் வெற்றிக் கனியை பறிக்க முடியும். மேலும், தொடர்ந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும். மனிதன் வெற்றியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டுமானால், அவனிடம் அவசியம் இருக்க வேண்டிய முதல் பண்பு, நம்பிக்கையாகும்.

ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை:

ஏக இறைவனை எந்தளவுக்கு நம்புகிறோம், அந்தளவுக்கு மனிதனும் தன்னை முழுமையாக நம்ப வேண்டும். ஏக இறைவன் தனக்கு துணையாக இருக்கும்போது, தம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. தனக்கு இறைவன் வழங்க நினைப்பதை யாரும் பறித்துவிட முடியாது. இப்படி உறுதியாக நம்பி, தன்னிடம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு மனிதன் செயல்பட வேண்டும்.  

ஏக இறைவன் மனிதனுக்கு எல்லாமே வழங்கி இருக்கிறான். அனைத்துவிதமான திறமைகளை மனிதனுக்கு இறைவன் வாரி வழங்கி இருக்கிறான். ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆனை நாம் படிக்கும்போது, மனிதன் மீது இறைவன் காட்டி இருக்கும் கருணை, மனிதன் மீது இறைவனுக்கு இருக்கும் அக்கறை, மனிதன் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதில் இறைவனுக்கு இருக்கும் ஆலாதி விருப்பம் ஆகியவற்றை அறிய முடிகிறது.

இப்படி ஏக இறைவன் நமக்கு எல்லாமே வழங்கி இருக்கிறான் என உறுதியாக நம்பி செயல்புரிந்தால் மட்டுமே வாழ்க்கையில் நமக்கு வெற்றி கிடைக்கும். மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி ஆகியவை மாறிமாறி வரும் நிலைகளாகும். எனவே, வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல்,  விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். “நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்ற உங்களின் எண்ணமே உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும். உங்களின் வெற்றி எண்ணம், உங்களை எப்போதும் தன்னம்பிக்கையுடன் வைத்துக் கொண்டே இருக்கும். மேலும், இந்த தன்னம்பிக்கை, வெற்றி, தோல்வி ஆகிய இரண்டு நிலைகளிலும் உங்களை சமமாக வைக்க உதவும்.

தற்போது உலகம் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஏக இறைவன் வழங்கிய அற்புதமான அறிவை, திறமையை பயன்படுத்தி, மனிதன் இன்று புதியபுதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, நல்ல உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அதன்மூலம் உல்லாமான வாழ்க்கை மனிதனுக்கு கிடைத்து இருக்கிறது. இந்த வாழ்க்கைக்கு யார் காரணம் என நாம் கொஞ்சம் ஆராய்ந்தால், ஏக இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் மற்றும் அதன்மூலம் நாம் ஏற்படுத்திக் கொண்ட தன்னம்பிக்கை ஆகியவையே என்பது நமக்கு உறுதியாக தெரியவரும்.  

இஸ்லாமிய நம்பிக்கை:

இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை என்பது, ஏக இறைவன் மீது  முழுமையாக நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அவனுடைய வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள் மற்றும் விதியின் நன்மை தீமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைப்பதைக் குறிப்பிடும். இவையே ஈமான் எனும் நம்பிக்கையின் ஆறு தூண்கள்.

ஏக இறைவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. ஏக இறைவனை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. ஏக இறைவன் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.

உங்களில் யாராக இருந்தாலும் நரகத்திலும் சொர்க்கத்திலும் அவரது இடம் முடிவு செய்யப்படாமல் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறியபோது,நாங்கள் இதன் மீது நம்பிக்கை வைத்து ஏதும் செய்யாமல் இருக்கலாமா” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் செயல்படவேண்டும் எனக் கூறிவிட்டு யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்”. (92:5) என்ற திருக்குர்ஆனின் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

விதியை நம்ப வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விதியின் மீது பழி போட்டு விட்டு, செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்துகிறார்கள்.

விதியும் எதிர்காலமும்:

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் விதி இல்லாவிட்டால் எப்படி நாம் நடந்து கொள்வோமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு வினாடிக்கு முன்னாள் வரை நடந்த அனைத்திலும் விதி இதுதான் என்பது நமக்குத் தெரிந்து விட்டதால், நடந்துவிட்ட நல்ல காரியம் குறித்தும் கெட்ட காரியம் குறித்தும் விதியின் காரணமாகவே நடந்தது என்று கருதிக் கொள்ள வேண்டும். விதியின் மீது பழியைப் போட்டு விட்டு உழைக்காமல் சோம்பி இருக்கும் நிலை இஸ்லாத்தில் கிடையாது. விதியை நம்பும் மனிதன், தன்னுடைய உழைப்பையும், தன்னம்பிக்கையையும் உறுதியாக நம்ப வேண்டும்.

உலக வரலாற்றில் சாதனைகளை நிகழ்த்தியவர்களின் வாழ்க்கையை படித்தால், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், அவமானங்கள், ஆகியவற்றையெல்லாம் சந்தித்த அவர்கள், தங்களுடைய இலட்சியப் பயணத்தில் சிறிதும் அலட்சியம் காட்டாமல், தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டே இருந்தார்கள் என்பதும், அதன்மூலம் மட்டுமே தங்களுடைய குறிக்கோளை, இலக்கை எட்டி வெற்றியை குவித்து, தங்களுக்கும், உலகத்திற்கும் நன்மையை செய்து இருக்கிறார்கள் என்பதும் தெரியவரும். விதியை நம்புங்கள். ஆனால், வீட்டிலேயே முடங்கி கிடந்து விடாதீர்கள். அப்படி விதியை நம்பிவிட்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தால், உங்களுக்கு உண்ண உணவும் கூட கிடைக்காது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உங்கள் ஊரும், உங்கள் மாநிலமும், உங்கள் நாடும், ஏன் உலகமும் உங்களை மதிக்காது. விதியை மட்டுமே நம்பி, முடங்கி கிடக்கும் மனிதனுக்கு ஏக இறைவனும் உதவி செய்ய முன்வர மாட்டான்.

கதவை தட்டுங்கள்:

நம்மில் பலர் விதியை மட்டும் நம்பிவிட்டு, ஏக இறைவன் நமக்கு வழங்கியுள்ள நல்ல திறமைகளை பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை ஒருவிதமான வாழ்க்கையாக இருந்து வருகிறது. பல்கேரிய நாட்டின் புகழ்பெற்றப் பழமொழி இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது. “கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்என்ற அந்த பல்கேரியப் பழமொழி, மனிதனின் நிலையையும், அவன் முயற்சி செய்யாமல் இருப்பதையும், அதனால் எப்படி வாய்ப்புகள் பறிபோகின்றன என்பதையும் மிக அழகாகக் சுட்டிக் காட்டியுள்ளது.

“பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது”. என்று ஒரு அறிஞர் கூறி இருக்கிறார். இந்த வார்த்தைகளை சற்று ஆழமாக சிந்தித்தால், பிரச்சினைகளை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால், பின்னர் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையை நாம் தொடர முடியும்.

ஒரு மேல்நாட்டு அறிஞர் இப்படி கூறியிருக்கிறார்: “துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை”. உண்மைதான், துயர எண்ணங்கள் துன்பத்தை விட மிகவும் கொடுமையானவை. இதை நாம் மனதில் உள்வாங்கிக் கொண்டு, நமது எண்ணங்களை சீர்படுத்திக் கொண்டு, செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.

சோம்பேறிகளாக இருந்தவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். சாதிப்பதும் இல்லை. “சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை” என்பது ஒரு அறிஞரின் அழகான கருத்தாக இருந்து வருகிறது.

“கடமையைச் செய்கின்றவனுக்கு கடமை இருந்துகொண்டே இருக்கும்.  கலைப்படுகின்றவனுக்கு கவலை இருந்துகொண்டே இருக்கும்” என கவிஞர் கண்ணதாசன் கூறிய அழகான வார்த்தைகள் இங்கு என் நினைவுக்கு வருகிறது.

எனவே வாய்ப்புகளுக்கான கதவை தட்டுங்கள். கதவை தட்டுவதுடன் நின்று விடாமல், கடமையைச் செய்துக் கொண்டே இருங்கள். இதன்மூலம் மட்டுமே, நம்முடைய வாழ்க்கைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்பிக்கை என்பது யாதெனில்:


நம்பிக்கை என்பது யாதெனில், ஏக இறைவன் மீதும், மனிதன் தன் மீதும் முழுமையாக நம்பிக்கை வைத்து, நாள்தோறும் தனது பணிகளை செய்வதாகும். இப்படி மனிதன் செயல்பட்டால், அவனுடைய உள்ளத்தில் மட்டுமல்ல, உடலிலும் ஒருவித உற்சாகம் பிறக்கும். இதன் காரணமாக அவனது பணிகளையும், செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்ய அவனுக்கு ஆர்வம் பிறக்கும். இந்த ஆர்வம் பணிகளில் தனிக் கவனம் செலுத்த உதவும்.  

இதுவரை சோம்பேறியாக, செயல்படாமல் இருந்துவிட்டால் அதுகுறித்து கொஞ்சம் வருத்தப்பட்டு விட்டு, இனி வரும் காலங்களில், அப்படியல்ல, இன்றுமுதலே, புதிய நம்பிக்கையுடன் செயல்பட தொடங்குவோம். அதை நமது பழக்கமாக்கிக் கொள்வோம். அதன்மூலம் நல்ல வாழ்க்கையாக, வெற்றி வாழ்க்கையாக, பிறருக்கு பயன்படும் வாழ்க்கையாக நமது வாழ்க்கை அமைத்துக் கொள்வோம்.

வாருங்கள்….! இனியும் தாமதிக்காமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, நமது வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்றிக் கொள்வோம். அதற்கான முயற்சியை இன்றே தொடங்கி, ஏக இறைவனின் அருளால் இனி வரும் காலங்களில் வெற்றிகளை குவிப்போம்.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: