Tuesday, March 19, 2024

வாணியம்பாடி பிரியாணியும் ராஜீவ் காந்தியும்...!


"வாணியம்பாடி பிரியாணியை விரும்பி சாப்பிட்ட ராஜீவ் காந்தி"...!

-  எஸ்.ஏ.ஏ.  -

 


சுவையான பிரியாணியை ஒருமுறை நன்கு ருசித்து சாப்பிட்டு விட்டால், பின்னர், அதை சாப்பிடாமல் ஒருபோதும் இருக்கவே முடியாது. அத்தகைய ஒரு அற்புதமான உணவுதான் பிரியாணி. ஒரு உணவுப் பொருளை பாராட்டும்போது, காரம், மணம், குணம் நிறைந்தது என்று நாம் பொதுவாக சொல்வது போல், மக்களிடையே பிரியாணிக்கும் ஒரு தனி மவுசு இருந்து வருகிறது.  அரசியல் தலைவர்கள் முதல், சாதாரண ஏழை, எளிய மக்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் பிரியாணி.

தற்போது மனிதன், தனது வாழ்க்கையை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டதால், அவனுக்கு மிகமிக எளிமையாக அனைத்து வகையான உணவுகளும் கிடைத்து விடுகின்றன. கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு, பிரியாணி என்பது மிகவும் வசதியானவர்கள் மட்டுமே சாப்பிடும் உணவாக இருந்து வந்தது. ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களில், பண்டிகை காலங்களில் மட்டுமே பிரியாணி தயாரிக்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

தொழில் அதிபர்கள் முதல் சாதாரண கூலித் தொழிலாளி வரை அனைவரும் விரும்பும் நேரத்தில் விரும்பி சாப்பிடும் அளவுக்கு, பிரியாணி மக்களிடையே பிரபலம் அடைந்து, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதைய நவீன ஸ்டார்ட்அப் காலத்தில், பல சிறிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, ஸ்டார்ட்அப் மூலம் பிரியாணியை விற்பனை செய்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், பிரியாணியின் சுவையில் மயங்கி, அதை மக்கள் அதிகளவு விரும்பி சாப்பிட்டு வருவதால், அதன் விற்பனை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. கவுரவம் பார்க்காமல்,  புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு பிரியாணி ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கி, அவர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்தி வருகிறது. 

இப்படி, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற இந்த பிரியாணியை, அரசியல் தலைவர்கள் பலர் விரும்பி சாப்பிட்டு, அதன் சுவையில் மயங்கி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக, மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, பிரியாணியின் சுவையில் மயங்கி அடிக்கடி பிரியாணியை சாப்பிட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாணியம்பாடி பிரியாணியை விரும்பிய ராஜீவ் காந்தி:

 


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா! உண்மை தான் தோழர்களே. பிரதமராக இருந்தபோது, மறைந்த ராஜீவ் காந்தி, கடந்த 1988-ஆம் ஆண்டில், ஒருமுறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்தார். வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர் மாவட்டம்) வாணியம்பாடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவி சோனியா காந்தியுடன் அவர் கலந்துகொண்டார். புகழ்பெற்ற வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சென்ற ராஜீவ் காந்தியை, அப்போதைய கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளராக இருந்த காகா முஹம்மது சுபைஹர் சாஹிப் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வரவேற்று தங்களது மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

விழா முடிந்தபிறகு, புகழ்பெற்ற வாணியம்பாடி பிரியாணி மாஸ்டர் (பிரியாணி சமையல் கலை வல்லுநர்) பாஷு பாய், ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்காகவே சிறப்பு (ஸ்பெஷல்) கவனம் செலுத்தி தயாரித்த பிரியாணி பரிமாறிப்பட்டது.

விழாவிற்கு வந்த மற்ற விருந்தினர்களுடன் இணைந்து அமர்ந்துகொண்டு, பாஷு பாயின் பிரியாணியை ருசித்து சாப்பிட்ட ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு அந்த பிரியாணியின் சுவை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பிரியாணியின் சுவையில் மயங்கிய அவர்கள்,  மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு அதனை சாப்பிட்டது, விழா ஏற்பட்டாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த தகவலை வாணியம்பாடி தோழர் முஹம்மது நயீம் நமக்கு தகவல் தெரிவித்தபோது, நாம் உண்மையிலேயே வியப்பு அடைந்தோம்.

வாணியம்பாடி பிரியாணியை விரும்பி சாப்பிட்ட ராஜீவ் காந்தி, அத்துடன் சும்மா இருக்கவில்லை. சுவையான பிரியாணியை தயாரித்தது யார்? அவர் எங்கு இருக்கிறார்? அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என கூறினார். இதையடுத்து, பாஷு பாயை, ராஜீவ் காந்தியிடம் விழா ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.  அவருக்கு தனது வாழ்த்துகளை கூறிக் கொண்ட ராஜீவ் காந்தி, பிரியாணி மாஸ்டர் பாஷு பாயை, தன்னுடன் டெல்லிக்கே அழைத்துச் சென்றுவிட்டார். மேலும், பாஷு பாய்  தயாரிக்கும் பிரியாணியை அவர் அடிக்கடி விரும்பி சாப்பிட்டு வந்தார். சுவையான வாணியம்பாடி பிரியாணியில் தன்னுடைய மனதை பறிக் கொடுத்த ராஜீவ் காந்தி, மற்றவர்களிடம் கூட, பாஷு பாயின் கைப்பக்குவதை பாராட்டி கூறிக் கொண்டே இருப்பார் என முஹம்மது நயீம் கூறியபோது, வாணியம்பாடி பிரியாணி அந்தளவுக்கு புகழ்பெற்றதா என்ற கேள்வியும் வியப்பும் நமக்கு ஏற்பட்டது. பிரியாணி மாஸ்டர் பாஷு பாய் மறைந்துவிட்ட பிறகு, அவரது சந்ததிகள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று வெளிநாடு வாழ் இந்தியர்களாக மாறிவிட்டனர்.

ராகுல் காந்தியும் பிரியாணியும்:

 

தனது தந்தை ராஜீவ் காந்தியை போலவே, இளம் தலைவர் ராகுல் காந்திக்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தமிழகத்தில் சுற்றுப்பயண்ம் மேற்கொண்டபோது, கரூர் மாவட்டம் அரவற்குறிச்சியில் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனலில் பிரபலமான கிராமப்புற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தமிழ்நாட்டின் உள்ளூர் சமையல் கலைஞர்களுடன் இணைந்து காளான் பிரியாணியை சமைத்து, ராகுல் காந்தி சாப்பிட்டதை தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.

சமையல் வல்லுநர்களுடன் இணைந்து தாமும் பிரியாணியை தயாரித்த ராகுல் காந்தி, பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் பெயர்களை தமிழில் கூறியது மட்டுமல்ல, உணவு தயாரித்த பிறகு, பாரம்பரிய வாழை இலை தட்டில் பரிமாறிப்பட்ட காளான் பிரியாணியை   மற்றவர்களுடன் இணைந்து சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 


இப்படி பல அரசியல் தலைவர்கள், பிரியாணியின் சுவையில் மயங்கி, அதை விரும்பி சாப்பிட்டதை வழக்கமாக கொண்டு இருந்தனர். தற்போதைய மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை, பலரும் பிரியாணியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். நல்ல பிரியாணியை அவர்கள் ருசித்து சாப்பிட்டு, அதனை தயாரித்த சமையல் வல்லுநர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்:

 


உண்மைதான் தோழர்களே. பிரியாணி சாப்பிட்டு சத்திய இஸ்லாத்தை ஏற்ற அந்த பிரிட்டிஷ்காரரின் பெயர் டேவிட் ஆன்ஸன்  (David Ansen). 1920-களில் இந்தியத் துணைக் கண்டத்தையே கிலாஃபத் இயக்கம் உலுக்கிக் கொண்டிருந்த நாட்களில், டெய்லி மிரர் என்கிற நாளிதழின் நிருபராக பம்பாயில் (தற்போது மும்பை) பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

அந்த வேளையில், பம்பாயில் கிலாஃபத் இயக்கம் தொடர்பாக முஸ்லிம் வணிகர்களின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு செய்திகளைச் சேகரிப்பதற்காக பிரிட்டிஷ் நாளிதழ்களின் நிருபர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்திருந்தனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர்களில் ஒருவரான ஹுஸைன் சோட்டானி என்கிற வணிகப் பிரமுகர், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடெங்குமிலிருந்து வந்திருந்த முக்கிய தலைவர்களுக்கு விருந்து கொடுக்கின்றார். இந்த விருந்தில் டேவிட் ஆன்ஸனும் கலந்துகொண்டார்.

அந்த விருந்தில் தான்  தனது வாழ் நாளில் முதன்முறையாக பிரியாணியைச் சுவைக்கிறார், டேவிட் ஆன்ஸன். மணிமணியான பாஸ்மதி அரிசி, மிதமான சூட்டில் பதமாக வெந்த இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றுடன் கமகமவென்று மணக்க, மணக்க இருந்த பிரியாணி அந்த ஆங்கிலேயரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

உடனே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறி விட்டார். மாற்றத்துக்கான காரணம் வினவப்பட்ட போது அந்த ஆங்கிலேயர் டேவின் ஆன்ஸன் இப்படி சொன்னார்: "உடலுக்கு சக்தி அளிக்கின்ற உணவே இத்துணை ருசியாக, நேர்த்தியாக, உயர்வானதாக இருக்கிறது எனில் இவர்களின் ஆன்மாவுக்கு ஊட்டம் அளிக்கின்ற மார்க்கம் எந்தளவுக்கு மகத்தானதாக இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்" இப்படி சொல்லி டேவிட் ஆன்ஸனாக இருந்த அவர்,  தாவூத் ஆன்ஸனாகி விட்டார். பின்னர் டெய்லி மிரர் நாளிதழிலிருந்து விலகி விட்டார். இதைத் தொடர்ந்து ‘தி முஸ்லிம் அவுட்லுக்’  (The Muslim Outlook) என்கிற நாளிதழின் பொறுப்பை ஏற்றார். 1941-இல் இறக்கின்ற வரை அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். ஆக, பிரியாணி கூட, சில சமயங்களில் நேர்வழி கிடைப்பதற்குக் காரணம் ஆகிவிடுவதுண்டு என்பதற்கு இந்த சம்பவமே நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

பொதுவாக இதர மதத்துச் சகோதரர்கள் முஸ்லிம்கள் தயாரிக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவுவகைகளை அதிகமாக விரும்பிச் சுவைக்கிறார்கள். தமிழகமெங்கும் உட்பட இந்தியா முழுவதும் இன்றும் அண்டா அண்டாவாக பிரியாணி சமைக்கப்படுகின்றது. பிளேட் பிளேட்களாய் பிரியாணி, கோடிக்கணக்கான மக்களால் சுவைத்து தீர்க்கப்படுகின்றது. ஆனால் டேவிட் ஆன்ஸனைப் போன்று யோசிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்?

பிரியாணி சாதாரண உணவு அல்ல:

 


நாம் சாதாரணமாக நினைவுக்கும் பிரியாணி, பலருடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மேலே நாம் குறிப்பிட்ட ஒருசில சம்பவங்களே நல்ல உதாரணங்களாக இருந்து வருகின்றன. இதேபோன்று நிறைய சம்பங்கள் உலகமெங்கும் இருக்கின்றன. அவை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இன்றும் சகோதர மதத் தோழர்கள், இஸ்லாமியர்கள் தயாரிக்கும் பிரியாணியை விரும்பி சாப்பிட்டு வருவதை நாம் காண முடிகிறது. மக்கள் மத்தியில் அன்பையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதில் பிரியாணி முக்கிய பங்காற்றி வருகிறது. இனி எதிர்காலத்திலும் பிரியாணியின் மவுசு குறையாது. அது மக்கள் அனைவரிடமும் அன்பையும், பாசத்தையும் ஏற்படுத்தி, சகோதரத்துவத்தை மேன்மேலும் உறுதியாக வளர்க்கும் என்பது உறுதி.

=========================

No comments: