Friday, March 29, 2024

நோன்புக் கஞ்சி.....!

நோன்புக் கஞ்சியில் இவ்வளவு பலன்களா....?

என்னுடைய இளமைப் பருவம் அது. எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில், ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க நான் எவ்வளவு ஆர்வத்துடன் இருப்பேனோ, அதைவிட அதிக ஆர்வத்துடன், நோன்புக் கஞ்சியை குடிக்க மனம் அதிகம் விரும்பும். நோன்புக் கஞ்சிக் குறித்து நினைத்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். வீட்டில் சுவையான நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டாலும், பள்ளிவாசலில் தயாரிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படும் நோன்புக் கஞ்சியின் சுவை கொஞ்சம் தூள் கிளப்பும் வகையில் இருக்கும். 

எனவேதான், நோன்புத் திறக்கும் நேரத்தில், முன்னதாகவே பள்ளிவாசலுக்குச் சென்று, இரண்டு அல்லது மூன்று கிண்ணங்களில் நோன்புக் கஞ்சியை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து விடுவேன். மற்ற நாட்களில் நோன்புக் கஞ்சியை சாப்பிடுவதைவிட, ரமலான் நோன்பு காலங்களில், அதை சாப்பிடும்போது, நமக்கே அறியாமல் ஒருவித ஆனந்தமும் புத்துணர்ச்சியும் எற்படும். அதுவும், பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க வரும் சக இஸ்லாமிய தோழர்களுடன் இணைந்து அமர்ந்துகொண்டு, நோன்புக் கஞ்சியுடன் வடை, போண்டா வகைகள் மற்றும் புதினா சட்னி ஆகியவற்றையும் சாப்பிடும்போது, மனதில் மேலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் உருவாகும்.

நோன்புக் கஞ்சி-ஒரு பார்வை:


ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருக்கும் முஸ்லிம்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது நோன்புக் கஞ்சி. 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில், தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’ எனச் சொல்லப்படும் அதை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் முஸ்லிம்களும் அதை அருந்துவார்கள். நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் அது மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. 

நோன்புக் கஞ்சி, பச்சை அரிசி, பாசி பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பட்டை, கிராம்பு, தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், மல்லிக்கீரை, பச்சை மிளகாய், கெட்டியான தேங்காய் பால், மட்டன் கைமா அல்லது பீப் கைமா, உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் நோன்பு கஞ்சியாகும். மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், உடலுக்கு ஆரோக்கியமும் தெம்பும் தரும் பொருட்கள் என்பால், நோன்புக் கஞ்சி சாப்பிடும்போதும் நமது உடல் நல்ல ஆரோக்கியத்தை பெறும் என உறுதியாக கூறலாம். 

நோன்புக் கஞ்சியின் பலன்கள்:


நோன்பாளிகள் பசித்திருக்கும் போது உடலில் தேங்கிய சர்க்கரையளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காக அதிகமாகச் செலவிடப்படுகிறது. மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில், உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுவதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு, தலைவலி ஏற்படும். இப்படி, சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக் கஞ்சி இருக்கிறது. நோன்பு நாட்களில். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து எடுத்துக்கொள்ளும் இந்த முதல் உணவானது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நோன்புக் கஞ்சி சுவையில் பிரியாணியை போலவே இருக்கும். அத்துடன்,  உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு ஊட்டம் தரும். இதுவரை நோன்புக் கஞ்சியை நீங்கள் ருசித்ததில்லை என்றால், ஒரு முறை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். பின்னர் அதற்கு அடிமையாகி, ஒவ்வொரு நாளும் தேடி தேடி வாங்கி சாப்பிடுவீர்கள். 

ரமலானில் உணவுத் திருவிழா:

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும், நோன்புக் கஞ்சியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள், தங்களுடைய சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், விருந்தோம்பல் மூலமும், நோன்புக் கஞ்சி விருந்து வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தமிழகத்தில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. பல அரசியல் கட்சிகள் ரமலான் மாதத்தில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் வகையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மற்ற உணவுப் பொருட்களுடன் கண்டிப்பாக நோன்புக் கஞ்சி இடம்பிடித்து இருக்கும். 

அத்துடன், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில், ரமலான் காலத்தில் நாவுக்கு சுவையான விதவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ரமலான் காலத்தில் முக்கிய நகரங்களில் உணவுத் திருவிழா நடைபெற்று, இந்த திருவிழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொண்டு, இஸ்லாமிய உணவுகளை மட்டுமல்லாமல், இந்திய உணவு வகைகளையும் ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். 

நோன்புக் கஞ்சி சாதாரணக் கஞ்சியாக நமக்கு தென்பட்டாலும், அது உடலுக்கு ஆரோக்கியத்தையும், தெம்பையும் தருவதுடன், மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் அன்பையும் வளர்க்கும் உணவாக இருந்து வருகிறது என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: