Thursday, March 21, 2024

இந்திய ஜனநாயகம்....!

பாஜக ஆட்சியில் கேள்விக்குறியான இந்திய ஜனநாயகம்....!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி பல ஆயிரம் பிரிவுகளை கொண்ட வாழும் இந்திய நாட்டில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே சட்டம், ஒரே கல்வி என "ஒரே" என்ற முழக்கங்களை பாசிச அமைப்பான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்த "ஒரே" என்ற முழக்கங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எந்தளவுக்கு பாதிப்பு அடைவார்கள் என்பது குறித்து இந்த பாசிச அமைப்புகளுக்கு எந்தவித கவலையும் சிறிதும் இல்லை.  

இதன் காரணமாகதான், ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபிறகு, மக்களை அடிக்கடி குழப்பம் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளை ஒழிக்க வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் பணிகள் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிட்டு, அல்லது எதிர்க்கட்சிகளே தேவையில்லை என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியும் அவரது கூட்டாளிகளும் செயல்பட்டு வருவது அவர்களின் நடவடிக்கைகள் மூலம் நன்கு தெரியவருகிறது. 

கேள்விக்குறியான ஜனநாயகம்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போது ஜனநாயக மாண்புகள் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் இல்லை என்றே கூறலாம். ஜனநாயக நெறிகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்காமல், செயல்படும் அரசாக, மோடி தலைமையிலான பாஜக அரசு இருந்து வருகிறது. 

கடந்த பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை ஒழிக்கவும், மாநில அரசுகளை கவிழ்த்து, பாஜக அரசுகளை அமைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏராளாம். இதன்மூலம், உலகில் புகழ்பெற்று இருந்த இந்திய ஜனநாயகம், தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. நாட்டில் தற்போது சர்வாதிகார போக்கு இருந்து வருகிறது. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு நிதி பெற்ற பாஜக, அந்த நிதியை பெற பல்வேறு தனியார் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மிரட்டி, நிதியை வசூல் செய்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊழலை ஒழிப்பேன் என கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த மோடி, தற்போது தேர்தல் பத்தரங்கள் மூலம் மெகா ஊழலை செய்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கான ஆதாரங்களையும் அவை வெளியிட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களில் கூட, இதுதொடர்பான தகவல்கள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. 

கைது நடவடிக்கைகள்:

அத்துடன், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை மிரட்டி, அவர்களை பாஜகவில் இணைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய மிரட்டல்களுக்கு பணியாதவர்கள் மீது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு பயந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவரில் சிலர் பாஜகவில் ஐக்கியமாகி விடுகிறார்கள். 

எதிர்க்கட்சிகள் முதலமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை பாஜக ஆட்சியாளர்கள் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா அண்மையில் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலின் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட நாடு முழுவதும் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததை நாம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

இதேபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம், இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகளை, பண்புகளை, மாண்புகளை குழித்தோண்டி புதைத்துவிட பாஜக முயற்சி செய்து வருகிறது. ஏன் குழித்தோண்டி புதைத்துவிட்டது என்றே கூறலாம். 

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்:

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வந்த 14 லட்சத்து 40 ஆயிரம் ரூயாக்கு கணக்கு காட்டததால் 285 கோடி நிதியை வருமானவரித்துறை முடக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கட்சியின் 11 கணக்குகளில் 8 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரசை ஒழிப்பேன். காங்கிரசை அழிப்பேன். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன் என தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கூறிவரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது, காங்கிரஸ் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் வெறுப்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசின் செயல்பாடுகளை முடக்க பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம், நாட்டில் ஜனநாயக செயல்பாடுகள் சிறிதும் இருக்கவே கூடாது என்ற எண்ணத்தில் பாஜக இருப்பது நன்கு தெரிய வருகிறது. 

மோடியின் பொய்கள்:

பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெற்று முழக்கங்களை மட்டுமே கூறி வருபவர் என்பது நாட்டு மக்கள் அனைவரும் நன்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் அவர் கூறிய பொய்கள், வெற்று முழக்கங்கள் குறித்து "மோடி சொன்ன பொய்கள்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.  அதில், 5 ஆயிரத்து 827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை எல்லாம் சேகரித்து வெளியிடப்பட்டுள்ளன. "நாட்டை மீட்பதற்காக கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்''  என்று சொன்ன மோடி, தான் சொன்னப்படி இந்தியாவில் மாற்றங்களை செய்துவிட்டாரா, அல்லது மாற்றம் நடந்ததா என்றால், அதற்கு இல்லை என்றே பதில் வருகிறது. அதற்கு சாட்சியாக இந்த புத்தகம் இருந்து வருகிறது. 

"ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’  "கொரோனாவை ஒழிக்க கை தட்டுதல், விளக்கேற்றுதல், இந்திய ஒன்றியத்தை வல்லரசாக்கி விடுவேன், இந்திய ஒன்றியம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவடையும்" என வாய்க்கு வந்தபடி உளறிய மோடி, அதை இதுவரை செய்யவில்லை. உளறுவதில் கின்னஸ் சாதனை வைத்தால் மோடியை அடிக்க ஆளில்லை என்ற நிலைமைதான் இருக்கிறது. தற்போது கூட, மக்களை குழப்ப தொடர்ந்து பொய் பரப்புரைகளை மோடி செய்து வருகிறார். 

தோல்வி பயத்தால் அதிகரிக்கும் தவறுகள்:

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டில் உண்மையான வளர்ச்சியும், முன்னேற்றமும் சிறிதும் ஏற்படவில்லை. மாறாக, மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறவே பாஜக முயற்சிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். வட மாநில மக்கள் மத்தியிலும் மோடி மற்றும் பாஜகவின் உண்மை முகம் தற்போது மக்களுக்கு தெரியவந்துவிட்டது. எனவே அவர்கள் விழிப்புணர்வு அடைந்து தேர்தலில் மோடிக்கு தக்க பாடம் கற்பிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 

மக்களின் இந்த மன மாற்றங்கள் மூலம் எங்கே தங்களுக்கு தோல்வி ஏற்பட்டு விடுமோ என மோடி மற்றம் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பயம் மற்றும் பதற்றத்தின்  காரணமாக, பல்வேறு தவறுகளை பாஜக அரங்கேற்றி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் இப்படி பல அதிரடி நடவடிக்களை எடுத்து, பாஜக தற்போது தோல்வி பயத்தால் தொடர்ந்து தவறுகளை செய்து வருகிறது. பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தோல்வி பயம் காரணமாக பாஜக, மேலும் பல சதி வேலைகளில் ஈடுபடும் என்ற அச்சமும் இருந்து வருகிறது. 

சத்யபால் மாலிக் எச்சரிக்கை:

ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக மற்றும் பாசிச அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்லும் என ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். தற்போதும் அவர் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாஜகவின் தற்போதைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை கவனித்தால், சத்யபால் மாலிகின் கூற்றில் உண்மை இருப்பதாக தெரிகிறது. 

தேர்தல் காலம் நெருங்க, நெருங்க, மேலும் பல சதி விளையாட்டுகளில் பாஜகவும், பாசிச அமைப்புளும் ஈடுபடும் என்பதால் நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்ச்சியை அடைய வேண்டும். அப்படி அடையாவிட்டால், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் சிறிதும் இருக்காது என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். 

தற்போதைய பாஜக மற்றும் பாசிச அமைப்புகளில் செயல்பாடுகளை கவனிக்கும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வி அடைவது உறுதி என்றே தெளிவாக தெரியவருகிறது. இதன் காரணமாகத்தான், மக்களை திசை திருப்பும் நடவடிக்களில் பாசிச அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என்பதால் நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் பேணி காக்கவும், வரும் தேர்தலில் "இந்தியா கூட்டணிக்கு" தங்களது வாக்குகளை அளிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: