Saturday, March 30, 2024

திருக்குர்ஆன் எனும் ஒளி...!

திருக்குர்ஆன் எனும் ஒளி....!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே. அல்லாஹ்வின் துணைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில், ஏக இறைவனின் திருவாக்கான, திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வாசிப்பதை நான் எப்போதும் வழக்கமாக கொண்டு இருக்கிறேன். அதன்படி, இந்தாண்டும், புனித ரமலான் மாத நோன்பு தொடங்கிய நாள் முதல், தொடர்ந்து திருக்குர்ஆனை வாசித்து, அதை முடிந்த அளவுக்கு உள்வாங்கி, செயல்புரிய முயற்சி செய்து வருகிறேன். 

திருக்குர்ஆனில் மனிதனின் நன்மைக்காக ஏக இறைவன் என்ன சொல்லி இருக்கிறான்? மனித வாழ்விற்காக அவன் காட்டும் அழகிய வழி என்ன? மனிதன் அமைதியாக, ஆனந்தமாக, சிறப்பாக வாழ, ஏக இறைவன் என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சொல்லிக் காட்டுகின்றான்? ஓர் இறைக் கொள்கையின் முக்கியத்துவம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு திருக்குர்ஆனில் நமக்கு மிகச் சிறப்பாக விளக்கங்கள் கிடைக்கின்றன. 

ஓர் இறைக் கொள்கை:

இஸ்லாமிய இறைக் கொள்கையின் அடிப்படையாக இருப்பது, ஓரே இறைவனாகிய அல்லாஹ் மட்டுமே, வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் என நம்பிக்கை கொள்வதாகும். இதேபோன்று, ஏக இறைவனால் படைக்கப்பட்டுள்ள வானவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏக இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும். மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கிறது என நம்பிக்கை கொள்ள வேண்டும். 

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, நாம் மேலே குறிப்பிட்ட இந்த 6 அம்சங்கள் நமக்கு மிக அழகிய முறையில் எடுத்துரைக்கப்படுகின்றன. திருக்குர்ஆனை திரும்ப, திரும்ப வாசிக்கும்போது, ஓர் இறைக் கொள்கையில் மனிதன் எந்தளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதையும், ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருப்பதன் மூலம், மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. 

ஓர் இறைக் கொள்கை குறித்து திருக்குர்ஆன் முழுவதும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும், ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக ஓர் இறைக் கொள்கைக்கு திருக்குர்ஆன் விளக்கங்களை அளிக்கிறது. பூமி, வானம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், மலைகள், கடல்கள், செடி, மரம், கொடி, விலங்குகள் என அனைத்தும் எப்படி படைக்கப்பட்டிருக்கிறது? என கேள்வி எழுப்பி, அதுகுறித்து சிந்திக்கும்படி, ஏக இறைவன் மனிதனை கேட்டுக் கொள்கிறான். 

அத்துடன், மனித இனம் படைக்கப்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி, ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும்படியும் நிலைத்து நிற்கும்படியும், மனிதனுக்கு ஏக இறைவன் அறிவுறுத்துகிறான். மேலும், மனிதன் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான். 

பல தெய்வக் கொள்கைக்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைவருமே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், மனிதன் தனக்கு விரும்பும் வகையில் தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்வதையும், அவற்றை வணங்குவதையும், ஏக இறைவன் கண்டிக்கின்றான். அதை ஏற்றக் கொள்ள மறுக்கிறான். எந்த குற்றத்தையும் மன்னிக்க தயாராக உள்ள இறைவன், பல தெய்வக் கொள்கையை மன்னிக்கவே முடியாது என மிகவும் திட்டவட்டமாகவும், உறுதியாகவும் கூறுகிறான். 

திருக்குர்ஆனை வாசித்துவிட்டு, நாம் கொஞ்சம் ஆழமாக, அமைதியாக, திறந்த மனதுடன் சிந்தித்தால், ஓர் இறைக் கொள்கையே உன்னத கொள்கை என்பதை அறிந்துகொள்ள முடியும். ஓர் இறைக் கொள்கையே மனிதனை நல்வாழ்விற்கு அழைத்துச் செல்லும் சிறந்த வாழ்க்கை நெறி என்பதை புரிந்துகொள்ள முடியும். ஓர் இறைக் கொள்கையே, மனிதனிடம் நல்ல பண்புகளையும், நல்ல ஒழுக்கத்தையும் எற்படுத்தும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். 

வாழ்க்கை நெறிகள்:

திருக்குர்ஆனினில் இறைத்தூதர்களின் வரலாறுகள், மனிதன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்? தாய் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? உற்றார் உறவினர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? ஏழை, எளிய மக்களிடம் எப்படி அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்? அனைத்து மக்களிடமூம் எப்படி அன்பு செலுத்த வேண்டும்? வட்டியை ஏன் வாங்கக் கூடாது? ஜகாத் எனும் ஏழை வரியை ஏன் செலுத்த வேண்டும்? அதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் என்ன? ஜகாத் மூலம், ஏழைகளின் வாழ்வில் எப்படி ஒளி ஏற்படுகிறது? பெண்களின் உரிமைகள் என்ன? பெண்களிடம் எப்படி கண்ணியமாக முறையில் நடந்துகொள்ள வேண்டும்? இப்படி நிறைய விஷயங்கள், வாழ்க்கைக்கு தேவையான அழ்கிய நெறிமுறைகள் நமக்கு கிடைக்கின்றன. 

அத்துடன், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சமூக ஒழுக்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் மிக அழகிய முறையில் கற்றுக் கொடுக்கிறது. தாய், தந்தைக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களைப் புண்படுத்தக் கூடாது. உறவினர்களின் உறவைத் துண்டிக்காமல் சேர்ந்து வாழ வேண்டும். அநாதைகளை ஆதரிக்க வேண்டும். ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும், நிதியுதவி செய்ய வேண்டும். விதவைகளுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும். அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். பேச்சிலும், செயலிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். 

பெண்களைத் தீய பார்வையால் பார்க்கக் கூடாது. பிறர் நலம் பேண வேண்டும். நோயாளிகளை நலம் விசாரிக்க வேண்டும். விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். இப்படி ஏராளமான நற்பண்புகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

திருக்குர்ஆனை ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது, ஏக இறைவன் மனிதன் மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டு இருக்கிறான் என்பதையும், மனிதன் அழகிய, அற்புத வாழ்வு வாழ வேண்டும் என ஏக இறைவன் விரும்புகிறான் என்பதையும், நாம் அறிந்துகொள்ள முடிகிறது. மனிதன் இம்மையில் மட்டுமல்ல, தன்னுடைய அழகிய செயல்கள், பண்புகள், ஒழுக்கங்கள் மூலம் மறுமையிலும் அற்புதமான, அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான். அதற்காக பல அழகிய நல்ல நெறிகளை பின்பற்ற வேண்டும் என அவன் மனிதனை அறிவுறுத்துகிறான். 

மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறான். ஒவ்வொரு நன்மை, தீமைக்கு தக்கப்படி, மனிதனுக்கு கண்டிப்பாக வெகுமதிகள் வழங்கப்படும். தீமைக்கு தண்டனையும், நன்மைக்கு வெகுமதியும் அளிக்கப்படும். எனவே, மனிதன் தன்னுடைய செயல்களை சீர்படுத்திக் கொண்டு, ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்து நின்று, உலகில் அழகிய வாழ்வு வாழ வேண்டும். தன்னுடைய தவறுளை திருத்திக் கொண்டு, ஏக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நன்மையின் பக்கம் செல்லும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நன்மையின் பக்கம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும். 

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, நாம் மேலே குறிப்பிட்ட இந்த முக்கிய  அம்சங்கள் தான் நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. மனிதன் அழகிய வாழ்வு வாழ்வதே, அவனது மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் நன்மையாக இருக்கும்.

திருக்குர்ஆனின் அத்தியாயம் 103-ல் வரும், மூன்று அற்புதமான வசனங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  

“காலத்தின் மீது சத்தியமாக!

மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.

ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்,

நற்செயல்கள் புரிந்துகொண்டும், மேலும்,

ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,

பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் 

கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர”

திருக்குர்ஆன் இஸ்லாமியர்களுக்கான வேதம் மட்டுமல்ல, அது உலக மக்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை நெறியை போதிக்கும் வேதமாகும். எனவே தான் ஏக இறைவன் திருமுறையில் இப்படி கூறி இருக்கிறான். 

“இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை” (81:27)

கடைசியாக, ஒவ்வொரு ஆண்டும், திருக்குர்ஆனை வாசிக்க வாய்ப்பு அளிக்கும் ஏக இறைவனுக்கு என்னுடைய நன்றியை கூறிக் கொள்வதுடன், திருக்குர்ஆனின் ஒளி, எப்போதும் என்னுடைய மனதிலும் வாழ்க்கையிலும் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அற்புத ஒளியின் மூலம் நான் இம்மை, மறுமையின் பலன்களை பெற வேண்டும் என ஏக இறைவனிடம் துஆ செய்கிறேன். நீங்களும், துஆ செய்யுங்கள், அத்துடன், திருக்குர்ஆனின் ஒளியை பெற நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: