Monday, March 18, 2024

ராகுல் காந்தி மீண்டும் உறுதி....!

ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படும்....!

ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுவழங்கப்படும்..!

உள்ளிட்ட பெண்களுக்கான காங்கிரசின் ஐந்து வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - ராகுல் காந்தி மீண்டும் உறுதி....!

டெல்லி, மார்ச்19- காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் செலுத்தப்படும், ஒன்றிய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட மகளிர் பேரணியில் கலந்துகொண்டு பேசியபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அறிவித்தார்.

பெண்களுக்கான ஐந்து வாக்குறுதிகள்:

அதன்படி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஏழை பெண்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படும்.  ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மதிய உணவு திட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும். பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் பிரச்னைகளுக்காக வாதாடவும் ஒரு பெண் அதிகாரி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நியமிக்கப்படுவார் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

ராகுல் காந்தி உறுதி:


இது குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பெண்களுக்கான தங்களது ஐந்து வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகள் அல்ல என்றும், தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். அதன்படி, ஒவ்வொரு ஏழை பெண்களுக்கும் அவர் தொழிலாளியாகவோ, விவசாயியாகவோ, சிறிய வேலை செய்பவராகவோ இருந்தாலும் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

பொருளாதார புரட்சி:

இந்த உத்தரவாதம் மூலம் நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார புரட்சி ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  நரேந்திர மோடி அரசு மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு 16 கோடி லட்சம் ரூபாயை தர முடியும் எனில், நாங்கள் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிச்சயம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தர முடியும் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

பெண்கள் வரவேற்பு:


ராகுல் காந்தி மூலம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள இந்த ஐந்து வாக்குறுதிகள், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஏழை பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்ப்படும் என்ற அறிவிப்பும், ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பும், பெண்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதன்மூலம் தங்களது வாழ்க்கை மேம்படும் என்று கூறியுள்ள ஏழை பெண்கள், படித்துவிட்டு பணியில் சேர முடியாமல் இருக்கும் தங்களது பெண் குழந்தைகளுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வாய்ப்பு உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: