Wednesday, March 20, 2024

எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும்....!

 "எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும்"

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, தேர்தல் களம் விறுப்பு விறுப்பு அடைந்துள்ளது. 18வது மக்களவைத் தேர்தல், மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, தேர்தலை சந்திக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இந்த தேர்தலில் காங்கிரஸ், மற்றும் திமுக உள்ளிட்ட  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும், நிச்சயம் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வருகின்றன. 

மக்களை கவரும் காங்கிரசின் 25 வாக்குறுதிகள்:

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 25 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. விவசாயிகளுக்காக ஐந்து வாக்குறுதிகள், தொழிலாளர்களுக்காக ஐந்து வாக்குறுதிகள், இளைஞர்களுக்காக ஐந்து வாக்குறுதிகள், பெண்களுக்காக ஐந்து வாக்குறுதிகள், நாட்டில் நீதியை நிலைநாட்ட எடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஐந்து வாக்குறுதிகள் என மொத்தம் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

இந்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் படித்து பார்த்தால், அனைத்து வாக்குறுதிகளும் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளாக இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த வாக்குறுதிகளாக உள்ளன. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் சார்ந்த வாக்குறுதிகளாக இவை உள்ளன. இதன்மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சி,  சமூக நீதியுடன் மேம்படும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாஜக அதிர்ச்சி:

கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியில் ஆட்சியில் இருந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வழங்கியுள்ள வாக்குறுதிகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது என்றே தெரிகிறது. கடந்த 10 ஆண்டு காலம் வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே, நாட்டு மக்களுக்கு பாஜக ஆட்சியாளர்கள் பரிசாக தந்தனர். அத்துடன், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்று நினைத்து, அதை செயல்படுத்தி வந்தார்கள். இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வேதனையை சுமக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இத்தகைய சூழ்நிலையிலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், தொடர்ந்து பிரித்தாளும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் அரசியல் பேச்சுகள் அனைத்தும் அத்தகைய வகையில் அமைந்துள்ளன. ஜனநாயக நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துவிடுவேன், காங்கிரஸ் காணாமல் போகும். காங்கிரஸ் இல்லாத இந்தியாயை உருவாக்குவோம். திமுகவை சும்மா விட மாட்டேன். திமுக என்னைக் கண்டு பயந்துவிட்டது. திமுகவின் தூக்கம் போய்விட்டது. இப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார். பாஜகவிலும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் வாரிசு அரசியல் செய்பவர்களை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது அவர்கள் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்து வருகிறார். 

இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக தெரியவருகிறது. வரும் 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோல்வி அடைவது உறுதி. அதன் காரணமாக பதற்றம் அடைந்துள்ள பாசிச அமைப்புகள், போலி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார்கள். அத்துடன் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்கள். 

பாஜக அமைச்சர் மற்றும் எம்.பி. சர்ச்சை கருத்து:

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.  இத்தகைய சூழ்நிலையில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார். மத்திய இணையமைச்சரின் இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கோரினார். 

இதேபோன்று, மதக் கலவரத்தை தூண்டியதாக பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள செல்போன் கடை உரிமையாளார் ஒருவர் அனுமான் பாடல்களை ஒலித்ததாகவும் அதை சிலர் தடுத்து நிறுத்தி அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், புகார் எழுந்தது. இதையடுத்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியா, செல்போன் கடை உரிமையாளர்களை தாக்கியவர்கள் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மத ரீதியான வெறுப்பு பேசிய தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், அனுமன் பாடல் தொடர்பாக பிரச்சினை எழவில்லை என்றும், கடை உரிமையாளரை முஸ்லிம்கள் யாரும் தாக்கவில்லை என்றும் தங்களது விசாரணை மூலம் அறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த சம்பங்களின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத ரீதியாக பிரச்சினையை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறலாம் என பாஜக நினைக்கிறது என்பது உறுதியாக கூறலாம். இதை தான், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. 

எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும்:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மிகவும், எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ரமலான் மாதம் தொடங்கி நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியது. அதன்மூலம் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் கோபம் அடைந்து வெகுண்டு எழுவார்கள், போராட்டங்கள் வெடிக்கும், அதை வைத்துக் கொண்டு, அரசியல் இலாபம் பெறலாம் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச அமைப்புகள் திட்டம் போட்டன. 

ஆனால், இந்திய முஸ்லிம் தலைவர்களும், இஸ்லாமிய அறிஞர் பெருமக்களும், ஆலிம் பெருமக்களும், மிகவும் எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு, ரமலான் காலத்தில் முஸ்லிம்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. புனித ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் கண்ணியத்தை பேண வேண்டும். ஏக இறைவன் மீது உறுதியாக நம்பிக்கை வைத்து, அவனிடம் மனம் உருகி துஆ கேட்க வேண்டும். தேர்தல் சமயத்தில் இந்திய முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிகையுடனும், பொறுமையாகவும் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

இந்திய முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள், ஆலிம்கள் ஆகியோரின் இந்த வேண்டுகோளின்படி, நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டங்களில் இறங்காமல் அமைதி காத்து வருகிறார்கள். இது ஒரு சிறந்த செயல்பாடு. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்தபிறகும், முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். 

கடைசியாக, வரும் நாடாளுமன்றத் தேர்தல் சர்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் என்பதை இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, முஸ்லிம்கள் தங்களது வாக்குரிமையை, ஜனநாயகக் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிப்பது இல்லை என்ற புகார் இருந்து வருகிறது. இந்த முறை தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி முஸ்லிம் தங்கள் மீதான அந்த புகாரை உடைக்க வேண்டும். துடைத்து எறிய வேண்டும். வாக்கு அளிப்பதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாக நினைக்க வேண்டும். மேலும், தற்போதைய நிலையில் எச்சரிகையும் பொறுமையும்  முஸ்லிம்களுக்கு மிகமிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: