Monday, March 25, 2024

மகிழ்ச்சியான வாழ்க்கை....!

 மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உங்களுக்கு விருப்பமா!


-  ஜாவீத்  -

மனிதர்களில் மகிழ்ச்சியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மனிதன் அப்படி இருக்கவே முடியாது. தங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் மனிதனின் இயல்பு. இப்படி நினைப்பதில் எந்தவித தவறும் இல்லை. ஏக இறைவன் கூட, மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறான். திருமறையாம் திருக்குர்ஆனை நாம் அரபி மூலத்துடன், நமது தாய் மொழியில் அர்த்தம் அறிந்து வாசிக்கும்போது, மனிதனின் வாழ்க்கை, உன்னத வாழ்க்கையாக அமைய வேண்டும் என ஏக இறைவன் விரும்புவது தெரியவரும். அதற்காக, பல்வேறு சிறந்த வழிமுறைகளையும் ஏக இறைவன் மிக அழகாக நமக்கு சொல்லிக் காட்டியுள்ளான். இப்படி, ஏக இறைவன் காட்டிய வழியில் நாம் பயணித்தால் நிச்சயம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். 

நல்ல பழக்கங்கள் அவசியம்:

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், அவன் முதலில் நல்ல பழக்கங்களை தத்தெடுக்க வேண்டும். இப்படி, தத்தெடுக்கும் நல்ல பழக்கங்களை, தனது வழக்கமான பழக்கங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதனின் அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் எதிராக இருப்பது, அவனது சோம்பல் மற்றும் கெட்டப் பழக்கங்கள் தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன், வாழ்க்கையில் சில பழக்கங்களை அவசியம் நாம் கடைபிடித்தால், நம்மை எல்லோரும் விரும்புவார்கள். அதுகுறித்த ஒருசில முக்கிய அம்சங்களை நாம் அவசியம் அறிந்துகொள்வது நமக்கு நன்மை அளிக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள அந்த அம்சங்கள் உதவியாக இருக்கும். இதனை நாம் எளிதாக செய்ய முடியும். இதன் விளைவாக, நாம் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் வாழ்க்கையை வாழ முடியும். 

தகவல்தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்:

வீட்டில் உள்ளவர்களுடன் மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் என அனைத்து தரப்பு மக்களுடன் நாம் நமது தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள், அன்பான அண்டை வீட்டார், நமது உறவினர்கள், அலுவலக தோழர்கள் என இவர்கள் அனைவரிடமும் நல்ல தொடர்புகளை நாம் கடைப்பிடிப்பதன் மூலம், பல்வேறு நல்ல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். நம்மீது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். இது உண்மையிலேயே நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

எப்போதும் நேர்மை அவசியம்:

வாழ்க்கையில் நாம் எப்போதும் நேர்மையாக இருப்பது, நம்மீது மற்றவர்களுக்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக, அவர்கள் எல்லோரும் நம்மை நேசிப்பார்கள். விரும்புவார்கள். நமது நலனில் அக்கறை செலுத்துவர்கள். மற்றவர்கள் நமது நலனில் அக்கறை செலுத்தினால், அதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய நல்ல பரிசு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், நமது வாழ்க்கை ஆனந்த வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.  

சிறிய விஷயங்களை மகிழ்ச்சியாக செய்ய முயற்சி செய்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மெல்ல மெல்ல உங்கள் வீட்டுக் கதவை தட்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாக செய்யும் சின்னச் சின்ன செயல்கள், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஒரு வழி என்பதையும், வாழ்க்கையில் சில மாற்றங்கள் கூட, பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.  எனவே உங்கள் விருப்பப்படி நல்ல மாற்றங்களை செய்யுங்கள்.

தேவையற்ற பணிகளில் ஆற்றலை வீணடிப்பதில் நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். இது மகிழ்ச்சிக்கு பதிலாக, துன்பத்தை தான் தரும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தைரியமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டால் மட்டுமே, நமது இலட்சியம் நிறைவேறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்க்கை ஏதாவது எடுத்துகொண்டு, ஏதாவது கொடுக்கிறது. எனவே இந்த உண்மையை புரிந்துகொண்டு, வாழ ஆரம்பித்தால், வேதனைகள், துன்பங்கள் நம்மை பின் தொடர வாய்ப்பே இல்லை. மிகவும் எதிர்பார்க்காத விசயங்களை செய்யாமல் இருப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என மனநல வல்லுநர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

நமது கடமைகளை நிறைவேற்றும்போது, பல்வேறு தவறுகள் ஏற்படலாம். அந்த தவறுளை நிவர்த்திச் செய்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். இதன்மூலம், நாம் செய்யும் ஒவ்வொரு பணியிலும் நம்மால் நல்ல கவனம் செலுத்த முடியும். 

மன அழுத்தம் வேண்டாம்:

மனிதர்களில் பலர் எப்போதும் பதற்றத்துடன் இருப்பதை நாம் காண முடிகிறது. வாழ்க்கை குறித்து ஒருவித பயம், ஒருவித அச்சம், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல் இருப்பதே வாழ்க்கையில் இதுபோன்ற அச்சம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். இதனால் பதற்றம் ஏற்பட்டு, மன அழுத்தம் உருவாகி, மனிதனின் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகிறது. எனவே, மன அழுத்தம் தரும் விஷங்களில் நாம் ஒருபோதும் கவனம் செலுத்துக் கூடாது. எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருந்தால், பதற்றம் ஏற்படாது. வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். 

பொறுப்பு உள்ளவராக இருக்க வேண்டும்:

மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகளை ஏக இறைவன் வழங்கியுள்ளான். அந்த பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, பின்னர், பிற மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். இப்படி ஒருவர் பொறுப்பு உள்ளவராக இருந்தால், பின்னர் அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. 

பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்:

எந்தவொரு பிரச்சினையையும் தள்ளி போடாமல் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அப்போது தான் பிரச்சினைகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க முடியும். குறிப்பிட்ட பிரச்சினையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், நமது மனதில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்:


நமது இலட்சியங்கள், இலக்குகளை எளிதாக அடைய நம்மிடம் சுறுசுறுப்பாக செயல்படும் பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதித்தவர்கள் அனைவரும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி, அதன்மூலம் வெற்றிகளை குவித்து இருப்பதை நாம் அறிய முடிகிறது. எனவே சுறுசுறுப்பு என்ற பழக்கத்தை நமது வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பாக பணி செய்பவர்களை எல்லோரும் விரும்பி, அன்பை செலுத்துவார்கள் என்பதையும் நாம், நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

நேர்மறை சிந்தனை அவசியம்:

வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால், எதிர்மறை சிந்தனை, எண்ணங்களை நாம் கட்டாயம் கைவிட வேண்டும். எப்போதும் நேர்முறை சிந்தனைகள் நம்மிடம் இருக்க வேண்டும். நேர்மறை சிந்தனை, நமக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி, நமது பணிகளில் வேகத்தை ஏற்படுத்தி, குறுகிய காலத்தில் நமது இலக்கை எட்ட உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது. நேர்மறை சிந்தனை நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

நமது வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், தனித்தன்மையுடன் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால், நமது எண்ணங்கள் தூய்மையாக மாறும். அத்துடன், நம்மிடையே நேர்மறை சிந்தனைகள் வளர்ந்துகொண்டே வரும். இது வாழ்க்கையை மகிழ்ச்சி பாதையில் பயணிக்க பெரிதும் உதவி அளிக்கும். அதன்மூலம், நாம் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, செயல்படும் ஒரு மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாவும் வாழ்வான். வெற்றிகளை குவித்துக் கொண்டே இருப்பான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

===================== 


No comments: