" இஸ்லாமிய உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த எண்பத்து நான்கு ஈரானிய பல்கலைக்கழகங்கள்"
இஸ்லாமிய உலக அறிவியல் மேற்கோள் மையத்தின் (ஐ.எஸ்.சி.) சமீபத்திய அறிக்கையின்படி, 35 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 552 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் துருக்கி 138 பல்கலைக்கழகங்களையும், ஈரான் 84 பல்கலைக்கழகங்களையும், பாகிஸ்தான் 50 பல்கலைக்கழகங்களையும் கொண்டு முதல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. தெஹ்ரான் பல்கலைக்கழகம் இஸ்லாமிய நாடுகளின் முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஈரானில் இந்தப் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
ஈரானின் முதல் பத்து பல்கலைக்கழகங்கள் :
தெஹ்ரான் பல்கலைக்கழகம் 6வது இடத்தையும் தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 11 வது இடத்தையும், ஷெரீஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 17 வது இடத்தையும், தர்பியாத் மொடரேஸ் பல்கலைக்கழகம் 21 வது இடத்தையும், ஷாஹித் பெஹெஷ்டி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 31 வது இடத்தையும், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 37 வது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோன்று, இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 40 வது இடத்தையும், ஈரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 47 வது இடத்தையும், தப்ரிஸ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 50 வது இடத்தையும், மஷாத் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 53 வது இடத்தையும், மற்றும் தப்ரிஸ் பல்கலைக்கழகம் 54 வது இடத்தையும் பிடித்து ஈரானில் இரண்டாவது முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 501 புள்ளிகளுடன் ஈரான் இஸ்லாமிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகளவில் 17வது இடம் :
பல்கலைக்கழகங்களின் தரவரிசையில், ஈரான் உலகளவில் 17வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கியுள்ளது. துருக்கி 82 ஆயிரத்து 150 புள்ளிகளுடனும் மற்றும் சவுதி அரேபியா 72 ஆயிரத்து 167 புள்ளிகளுடனும் முறையே முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஐ.எஸ்.சி. அறிக்கையின்படி, மேற்கோள்களின் அடிப்படையில் (89 ஆயிரத்து 492 புள்ளிகளுடன்), ஈரான் பிராந்தியத்திலும் உலகிலும் முறையே இரண்டாவது மற்றும் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் உலகளாவிய தரவரிசை 19 இலிருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் துருக்கி, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 838 மற்றும் 81 ஆயிரத்து 106 மேற்கோள்களுடன், முறையே முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
தெஹ்ரான் பல்கலைக்கழகம் சாதனை :
குயிக்ர்லி சைமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட சமீபத்திய உலக பல்கலைக்கழக தரவரிசையில் தெஹ்ரான் பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதலிடத்திலும் உலகில் 322வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய க்யூஎஸ் தரவரிசையில், தெஹ்ரான் பல்கலைக்கழகம் 46 இடங்கள் முன்னேறி சர்வதேச அளவில் 322வது இடத்தைப் பிடித்து ஈரானில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தப் பட்டியலில், ஷெரீஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டாவது முதல் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.
தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை :
இஸ்லாமிய உலக அறிவியல் மேற்கோள் மையம் அக்டோபர் 2025 இல் வெளியிட்ட இஸ்லாமிய உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி, 2023 ஆண்டு தரவரிசையில் இடம்பெற்ற 80 ஈரானிய பல்கலைக்கழகங்களை விட தற்போது அதன் எண்ணிக்கை அதிகமாகும். இது ஈரானிய உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்திறன் மற்றும் உலகளாவிய இருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஈரானின் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்திறன், எழுத்தறிவு விகிதம் அதிகரித்தல், மற்றும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் உயர்கல்வி அணுகல் ஆகியவை நேர்மறையான அம்சங்களாகும். இருப்பினும், கட்டமைப்புச் சிக்கல்கள், மாணவர்களின் வெளியேற்றம், மற்றும் பட்டப்படிப்புப் பற்றாக்குறை போன்ற சவால்களும் உள்ளன. ஈரானின் வயது வந்தோரில் 85 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது பிராந்திய சராசரியான 62 சதவீதத்தை விட அதிகமாகும்.
கல்வித்துறையில் சந்திக்கும் சவால்கள் :
ஈரானில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கன்கூர்) மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் தகுதி பெற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் சமீப காலங்களில் வெளிச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு மக்கள்தொகை அழுத்தம், இளைஞர்களின் அதிக வேலையின்மை, மற்றும் உயர்கல்வி அமைப்பில் உள்ள கட்டமைப்புச் சிக்கல்கள் ஆகியவை காரணமாகும்.
ஒருபுறம் கல்வித்துறையில் ஈரான் சாதித்து வந்தாலும், மற்றொரு புறம், உயர்கல்வி மற்றும் போலி பட்டங்களின் பிரச்சனையும் ஈரானில் உள்ளது. வகுப்பறை வளங்கள், விளக்குகள், மற்றும் இசை போன்ற மேம்பட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்களில் ஈரான் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதேபோன்று, தேர்வு சார்ந்த கவலை மாணவர்களின் செயல்திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உலகளவில் மிகச்சிறந்த பல்லைக்கழகங்கள் ஈரானில் இருப்பதால், இந்திய மாணவர்களிடையே அவை பிரபலமாக இருந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து, குறிப்பாக காஷ்மீரில் இருந்து, ஏராளமான மாணவர்கள் உயர்கல்விக்காக ஈரானுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் உயர்கல்வி பெற மாணவர்கள் ஈரானுக்கு செல்வது அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment