"கலைப் பாதுகாப்பு துறையில் சாதிக்கும் முஸ்லிம் பெண் மைமுனா நர்கிஸ்"
கலை பாதுகாப்பு என்பது கலைப்பொருட்களைப் பாதுகாப்பதை விட அதிகம். இது கதைகள், நினைவுகள் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதாகும். இந்த முக்கிய துறையில் ஆண்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சக்திவாய்ந்த கலை பாதுகாப்பு துறையில் ஒரு முஸ்லிம் பெண்மணி ஈடுபட்டு சாதனை புரிந்து வருகிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தை பொறுமை மற்றும் திறமையுடன் புதுப்பிக்கும் அதேவேளையில் தடைகளையும் அவர் உடைத்துள்ளார்.
ஓவியக் கலை பாதுகாப்பு என்பது வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தலைமுறைகளை நமது பாரம்பரியத்துடன் இணைக்கும் ஒரு துறையாகும். முஸ்லிம் பெண் மைமுனா நர்கிஸ் இந்தத் துறையில் ஒரு தனித்துவமான பெயர் பெற்று, கலைப் பாதுகாவலர் என்ற தனித்துவமான அடையாளத்தை செதுக்கிக் கொண்டுள்ளார். அவரது கதை தொழில்முறை வெற்றி மட்டுமல்ல, வரலாற்றின் உடைந்த துண்டுகளை மீட்டெடுத்த ஆர்வம், போராட்டம் மற்றும் உறுதிப்பாடு ஆகும்.
உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பஹ்ஜோயில் பிறந்த மைமுனா, குடும்பத்தின் அன்பான ஆதரவுடன் வளர்ந்தார். அவரது தந்தை, ஒரு காவல்துறை அதிகாரி. அவரது தாயார் கலை மீதான தனது மகளின் ஆர்வத்தை புரிந்துகொண்டு ஆரம்பகால அன்பின் மூலம் அவரை வளர்த்தார். அவருக்கு சிறுவயதிலிருந்தே ஓவியக் கலை மீது ஆர்வம் இருந்தது. அது பின்னர் அவரது ஒரே பாதையாக மாறியது. பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நுண்கலைகளைப் படிக்கத் தொடங்கியபோது, அவருக்குள் இருந்த கலைஞர் முன்னணிக்கு வந்தார். ஆனால் நுண்கலை முதுகலைப் படிப்பு கடினமாக இருந்தது. எனவே அவர் அருங்காட்சியகத்தில் ஒரு வருட டிப்ளமோவைத் தேர்ந்தெடுத்தார். அது அவரது வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்தது.
இந்தப் படிப்பு அவரை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவருக்கு மூன்று மாதங்கள் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவம் தனக்கு ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போன்றது என்று மைமுனா கூறுகிறார். மேலும் வெறும் புத்தகங்களுக்கு அப்பால் வரலாற்றைத் தொட ஒரு வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு, ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜெய்கர் கோட்டையில் கியூரேட்டராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கிருந்து அவரது கலைப் பாதுகாப்புப் பயணம் தொடங்கியது.
பாதை எளிதானது அல்ல :
இந்தப் பாதை எளிதானது அல்ல. அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்புப் படிப்பிற்காக அவர் டெல்லிக்குச் சென்றபோது, மக்கள் அவரைக் கேலி செய்தனர். எல்லோரும் அலிகர் பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். நீங்கள் அங்கிருந்து டெல்லிக்குச் செல்கிறீர்களா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அருங்காட்சியகம் மற்றும் கலைப் பாதுகாப்பு போன்ற பாடங்கள் இன்னும் சமூகத்திற்குத் தெரியாதவை. ஆனால் அவருடைய பெற்றோர் தங்கள் மகளின் கனவுகளை நம்பினர். மேலும் அவரை போதுமான அளவுக்கு நம்பினர். அவர் தேர்வு எழுதச் செல்லும்போது அவருடைய தாயார் கூட அவருடன் டெல்லிக்குச் சென்றார்.
மைமுனா, 2002 இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்கர் கோட்டையில் ஒரு கண்காணிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது. அவர் ஹிஜாப் அணிந்திருந்ததால், வாடிக்கையாளர்களுக்கு அவருடைய திறன்கள் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. திட்டம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகும், அவர் ஹிஜாப் அணிந்திருந்ததால் ஒரு வாடிக்கையாளர் அவரைத் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டார். பல முறை, அவருக்கு ஃப்ரீலான்ஸ் திட்டங்களுக்கு பணம் கூட கிடைக்கவில்லை. குடும்பத்தினர் இதைப் பற்றி புகார் செய்யுமாறு அறிவுறுத்தியபோது, "இது எனக்கு ஒரு பாடம், இழப்பு அல்ல" என்று அவர் சொன்னார். இதன்மூலம் மைமுனா நர்கிஸின் உண்மையான மந்திரம் அவருடைய திட்டங்களில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
அஜ்மீர் அக்பர் கோட்டை :
ஜெய்சால்மரின் லுதர்வா ஜெயின் ஆலயத்தின் 400 ஆண்டுகள் பழமையான மரத் தேர், கரையான்களால் சேற்றால் சிதைந்து போனது. அதை அவர் எந்த தச்சரின் உதவியும் இல்லாமல் அதே பாரம்பரியப் பொருளைப் பயன்படுத்தி மீண்டும் கட்டினார். அந்த தேர் இப்போது பயன்பாட்டில் உள்ளது. அஜ்மீரின் அக்பர் கோட்டையில் 6 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை உடைந்த சிலைகளை மூட்டுகள் தெரியாத வகையில் அவர் இணைத்தார். கோட்டா அருங்காட்சியகத்தில் தங்கம் மற்றும் மையால் எழுதப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத கையெழுத்துப் பிரதியின் சிறிய துண்டுகளை அவர் இணைத்து அதற்கு உயிர் கொடுத்தார்.
ஜாலாவரின் கர் அரண்மனையில் உள்ள 11 அறைகளின் கூரைகளில் வண்ணமயமான ஓவியங்களை மீட்டெடுப்பது அவரது மிகவும் கடினமான பணியாகும். மூன்று அறைகளின் கூரைகளை ஒரு துண்டையும் அகற்றாமல், எந்த சேதமும் ஏற்படாமல் அவர் காப்பாற்றினார். ஜெய்ப்பூர் மற்றும் மும்பாய் விமான நிலையங்களில் அவர் செய்த பணியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பாய் விமான நிலையத்தில், மராட்டிய வரலாற்றைப் பற்றிய 5 ஆயிரம் சதுர அடி கேன்வாஸ் ஓவியத்தில் உள்ள மடிப்புகள் மற்றும் குமிழ்களை அவர் அகற்றினார். இதனால் அது இன்றும் அப்படியே தெரிகிறது. டெல்லி குடிரயசுத் தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவனில்) தனது பயிற்சியின் போது, மரக் கதவுகளில் உள்ள வரலாற்று ஓவியங்களை அவர் சேமித்தார்.
வரலாற்று புத்தகங்கள் மீட்டெடுப்பு :
தேசிய அருங்காட்சியகத்தில், பாபர்நாமா, அக்பர்நாமா, ஷாஜஹான்நாமா மற்றும் ஜஹாங்கிர்நாமா போன்ற வரலாற்று புத்தகங்களை அவர் மீட்டெடுத்தார். மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களின் ஆடைகளுக்கும், ஆல்பர்ட் ஹாலில் சேதமடைந்த பிச்வாய் ஓவியத்திற்கும் அவர் புதிய உயிர் கொடுத்தார். வரலாற்றுடன், மைமுனாவின் பணிகள் சுற்றுச்சூழலுக்கு உணர்திறன் கொண்டது. சிமெண்டின் ஆயுட்காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே என்றும், சுர்கி மற்றும் சுண்ணாம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இந்திய பிளாஸ்டர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அவர் கூறுகிறார். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மலிவானது மற்றும் நீடித்தது. டேராடூனில், 400 ஆண்டுகள் பழமையான ஹவேலி மற்றும் குருகிராமில் உள்ள ஒரு நவீன பண்ணை வீட்டின் வரைபடங்களின் அடிப்படையில் ஒரு கட்டிடத்தை அவர் கட்டினார். இரண்டும் பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கினார்.
விருதுகள் குவிப்பு :
மூன்று தேசிய மற்றும் 28 மாநில அளவிலான விருதுகளை மைமுனா நர்கீஸ் பெற்றுள்ளார். ஹரியானாவின் குருக்ஷேத்ரா, ஜம்மு பல்கலைக்கழகம் மற்றும் ஜம்மு எஃப்.ஐ.சி.சி.ஐ. போன்ற நிறுவனங்களிடமிருந்து கௌரவங்களைப் பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் மண் மற்றும் பாரம்பரிய பாணியால் ஆன ஒரு பாரம்பரிய ரிசார்ட்டைக் கட்டுவதும், மதுராவில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலை மீண்டும் அலங்கரிப்பதும் அவரது கனவாக உள்ளது. இந்தியா அதன் கலாச்சார வேர்கள், பாரம்பரிய கட்டுமானப் பொருட்கள் மற்றும் கலையை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அடுத்த தலைமுறை ஆர்வம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் என்ன சாதிக்க முடியும் என்பதை அறியும் வகையில் தனது பயணத்தை ஒரு புத்தகத்தில் பதிவு செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
மைமுனா நர்கீஸ் இன்னும் தனது துறையில் உள்ள தொழிலாளர்களுடன் நிற்கிறார். சுண்ணாம்பு கலந்து, சுவர்களில் பூச்சு பூசுகிறார். அவரது பணிவான அணுகுமுறைதான் அவரது உண்மையான பலம். "இந்தியாவில் உள்ள ஒரே ஷியா முஸ்லிம் பெண் கலைப் பாதுகாவலர் நான். இதுவே எனது அடையாளம்" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார். தற்போது ஜெய்ப்பூரில் வசிக்கிக்கும் அவர், தடைகளை உடைத்து பாரம்பரியத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment