Sunday, November 2, 2025

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதி....!

 எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லை...!

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற முடிவு சரியானது....!!

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் முழு ஒத்துழைப்பு அளிக்க தயார்....!!!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதி....! 

சென்னை, நவ.03-சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இ.யூ.முஸ்லிம் லீக் வரவேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மொகிதீன் உறுதி அளித்துள்ளார். 

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று (02.11.2025) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

திருத்தம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை :

இந்த சிறப்பான கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் எமது வாழ்த்துகள். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை விவகாரத்திற்கு தீர்வு காணுகின்ற நோக்கத்தில் இந்த சிறப்பான கூட்டத்தை கூட்டியதற்கு,  தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எங்களது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த கூட்டத்தின் நிறைவாக எத்தகைய  முடிவை எடுக்க வேண்டும் என்பதையும் எத்தகைய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவர்கள் மிகவும் தெளிவாக நமக்கு விளக்கி சிறப்பித்த இருக்கிறார்கள். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 

இப்போது தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்பை எதிர்க்கும் வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சரியான முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். விரைவில் தேர்தல் வர இருக்கும் இந்த காலங்களில், இப்படிப்பட்ட திருத்தம் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதை நமக்கு அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

தமிழக அரசே உருவாக்க வேண்டும் :

இந்த நேரத்தில் ஒன்றை நாங்கள் கூறிக் கொள்கிறோம். வாக்காளர் பட்டியலை தமிழக அரசே உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கும் அந்த பட்டியலை சரி செய்து, அந்த பட்டியலை ஒன்றிய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், தமிழக அரசே ஒரு வாக்காளர் பட்டியலை தமிழகத்திற்கு உருவாக்கி கொடுப்பது காலத்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். அப்படி வாக்காளர் பட்டியலை உருவாக்க சட்டத்தில் இடம் இருக்கும் ஒன்றை பயன்படுத்தி, அந்த வாக்காளர் பட்டியலை உருவாக்கி, அதை சரி செய்து ஒழுங்குப்படுத்தி, நாம் நிரந்தரமான ஒரு வாக்காளர் பட்டியலை  உருவாக்கி கொண்டு இருந்தால், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் அது மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை விரைவில் உருவாகும் என்பதையும் இங்கே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இ.யூ.முஸ்லிம் லீக் முழு ஆதரவு :

திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் என்ற முறையிலும், மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உள்ள நாங்கள் முழுமையாக ஆதரித்து அதற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்பதையும் இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறோம். முதலமைச்சர் அவர்கள் சொல்லும் வழியை பின்பற்றி நடப்பதற்கு நாங்கள் (இ.யூ.முஸ்லிம் லீக்) தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: