Wednesday, August 30, 2023

அஞ்சும் என்.டி.ஏ.....!

இந்தியாவை கண்டு அஞ்சும் என்.டி.ஏ.....!


இந்திய பாரம்பரியம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் குழித்தோண்டி புதைத்துவிட்டு, நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் பாதிப்பு அடையும் வகையில் கடந்த 9 ஆண்டு காலமாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, சமூகங்களுக்கு இடையே வெறுப்பு விதைப்பு என பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்து ஆடும் நிலையில், அதற்கு எந்தவித தீர்வையும் காண பாஜக அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதற்கு மணிப்பூர், அரியானா மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறைகளை உதாரணங்களாக கூறலாம். இத்தகைய சூழ்நிலையில், நாடு மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரூவிலும் நடைபெற்றது. இந்தியா கூட்டணி தலைவர்களின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில்) மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.  இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் 26 கட்சியுடன் மேலும் சில கட்சிகளும் இணைந்து கலந்துகொள்ளும் என சரத்பவார் தெரிவித்துள்ளார். 

பாஜகவிற்கு உருவானது பயம்:

இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தற்போது நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு அச்சம் அடைந்து வருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கு தங்களுக்கு தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை அவர்களின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நன்கு அறிய முடிகிறது. 

இந்தியா கூட்டணி குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தரம் தாழ்ந்த விமர்சனம், இது ஊழல் கூட்டணி, குடும்ப அரசியல் செய்யும் கூட்டணி என பல்வேறு விமர்சனங்களை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன. ஆனால் தங்கள் நிலை குறித்து அவர்கள் மறந்துவிட்டு, இந்தியா கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 

ஊழல் குறித்து பேச தகுதியில்லை:

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது, அதன் தலைவர்கள் மீது ஊழல் குறித்து பேசிய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். சிஏஜி அறிக்கையில் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊழல் பெருகிவிட்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், சுங்கச்சாவடி திட்டம் என 7 திட்டங்களில் ஊழல் நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்து இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சி.ஏ.ஜி. அறிக்கைப்படி ஒன்றிய அரசு துறைகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தகுதியில்லை என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதன்மூலம் ஊழல் குறித்து பேச பாஜகவிற்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது என்றே கூறலாம். 

வாரிசு அரசியல்:

திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் குறித்து பேசும் பிரதமர் மோடி, அக்கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வருவதாக அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார். வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இருந்து வருகிறது என்பதை அவர் மறந்துவிட்டு, விமர்சனம் செய்கிறார். ஏன், தன்னுடைய பாஜக கட்சியில் கூட வாரிசு அரசியல் தொடர்கிறது என்பதை பிரதமர் மறந்துவிடுகிறார். பாஜக தன்னை வாரிசு அரசியல் இல்லாத கட்சி என்று சொல்லிக் கொள்கிறதே தவிர, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர்களில் பலர், தங்களுடைய வாரிசுகளை அரசியல் வாரிசுகளாக்கி அழகு பார்த்து வருகின்றனர். 

பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜ சிந்தியாவின் வாரிசுகள் இன்றுவரை ராஜஸ்தான் அரசியலிலும், மத்தியிலும் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த வாரிசைத் தவிர, முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், பிரேம்குமார் தூமல், சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, வீரேந்திர சக்லேச்சா. ரமண் சிங் ஆகியோரின் வாரிசுகள் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். அதுபோல் தேவேந்திர பட்னாவிஸ், யோகி ஆதித்யநாத், பெமா காண்டு ஆகியோரின் குடும்ப வாரிசுகளும் பாஜகவில் கோலோச்சி வருகின்றனர். இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எனவே இனி வாரிசு அரசியல் என்று கூறி எதிர்க்கட்சிகள் மீது பாஜக விமர்சனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம்:

நாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அண்மையில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளை காண ஒன்றிய பாஜக அரசும் அதன் தலைவர்களும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதை சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. 

தோல்வி பயத்தால் விலை குறைப்பு:

இந்தாண்டு இறுதிக்குள் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும் என முதல்கட்ட கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மக்களின் கோபத்தை குறைக்க வேண்டும் என முடிவு செய்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரை குறைத்து அதை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தோல்வி பயமே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்க முக்கிய காரணம் என விமர்சனம் செய்துள்ளார். இதேபோன்று, கருத்து கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி இரண்டு கூட்டங்களை நடத்திய நிலையில் சிலிண்டர்  விலை குறைக்கப்பட்டு இருப்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். 

ஆயிரத்து 200 ரூபாய் சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டு, வெறும் 200 ரூபாய் வரை குறைத்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்  விமர்சித்துள்ளார். தோல்வி பயத்தால் இனி வரும் நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாக கூட பாஜக வழங்கும் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைத்ததன் மூலம், மக்களின் கோபம் தணியும் என எதிர்பார்த்த பாஜகவிற்கு, அதனால் மக்கள் மேலும் கோபம் அடைந்து பாஜகவையும் ஒன்றிய அரசையும் தாக்கி கருத்து தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக தலைவர்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: 

நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ள பாஜக, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்யாததால், வரும் தேர்தல்களில் அதை மக்களிடம் கூறி வாக்குகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, மத ரீதியாக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து அதன்மூலம், அரசியல் லாபம் அடைய பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்துடன், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என ஆசையுடன் போலியான கருத்துக் கணிப்புகளை தங்களது ஆதரவு ஊடகங்கள் மூலம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், பாஜகவிற்கு எதிரான மக்கள் அலையை இந்தியா கூட்டணி சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய பணிகளையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதலுக்கான வாய்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்கு உணர்ந்துகொண்டு, அதன்படி, தங்களுடைய பணிகளை அமைத்துக் கொண்டு, தொலைநோக்கு செயல்திட்டங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். சுயநலம், ஈகோ ஆகியவற்றை கைவிட்டு விட்டு, நாட்டின் நலன் மற்றும் நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் மீண்டும் மலர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

இந்தியா கூட்டணிக்கு தென்மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வட மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வையும், பெருகிவரும் ஆதரவையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நன்கு உணர்ந்துகொண்டு, அதனை சரியாக மற்றும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இந்தியா கூட்டணி குறித்து மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இதன்மூலம் நிச்சயம் நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்படும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: