Tuesday, August 29, 2023

டெல்லி பள்ளியிலும்.....!

டெல்லி பள்ளியிலும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு....!

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும்  கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தாம் தவறு செய்ததாக அந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள்,  தலைநகர் டெல்லியிலும் முஸ்லிம் மாணவர்களை மதத்தின் அடிப்படையில் குறிவைக்கும்  சம்பவம் அரங்கேறியுள்ளது. 

டெல்லி அரசு பள்ளியில் நடந்த சம்பவம்:

கிழக்கு டெல்லியின் காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கைலாஷ் நகரில் உள்ள சரோத்யா பால் வித்யாலயாவில், கடந்த 23ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலவில் சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கிய சந்தர்ப்பத்தில், பள்ளி ஆசிரியை ஹேமா குலாட்டி, முஸ்லிம் மாணவர்களை மதத்தின் அடிப்படையில் குறிவைத்து பேசியுள்ளார். மேலும், இஸ்லாத்தைப் பற்றி தவறாகப் பேசிய அவர், "நீங்கள் முஸ்லீம்கள் இல்லை, நீங்கள் இந்தியர்கள் அல்ல, சுதந்திரப் போரில் நீங்கள் எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை, நாடு விடுதலை அடைந்தபிறகும்  முஸ்லிம்கள் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை, மனிதர்களாகிய நீங்கள் மிருகங்களை கொடூரமாக கொல்கிறீர்கள்" என சரமாரியாக தாக்கி பேசியது மாணவர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. 

மாணவர்கள் வேதனை:

ஆசிரியையின் இந்த செயல் குறித்து பேசிய 9ம் வகுப்பு மாணவர் ஃபர்ஹான், “ இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் குறித்தும் ஆசிரியர் கெட்ட வார்த்தைகளை கூறியதாக தெரிவித்துள்ளார்.  இதனை சக மாணவர் இஷ்ராக்கும் உறுதிபடுத்தியுள்ளார். 

ஆசிரியையின் நடவடிக்கையால் கோபம் அடைந்துள்ள ஃபர்ஹானின் தந்தை முஹம்மது ஹாஷிம்,  "எங்கள் குழந்தைகளை நல்ல மனிதராக உருவாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நாங்கள் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் இதுபோன்ற கல்வியை பள்ளியில் கொடுத்தால், குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

பெற்றோர்கள் கண்டனம்:

இதேபோன்று, பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியின் தாயான கௌசர், “எனது இரண்டு குழந்தைகள் அந்த பள்ளியில் படிக்கின்றனர். ஆசிரியையின் செயலைக் கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். எங்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி அவர் அவதூறாக  பேசுவார் என்றும், எங்கள் மத நூல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து அவர் தவறான கருத்து தெரிவித்து இருப்பதால் நாங்கள் காயப்பட்டுள்ளோம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியை தண்டிக்கப்படாமல் போனால், மற்ற ஆசிரியர்களும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்களிடையே வேறுபாடுகளை உருவாக்கும் ஆசிரியரால் எந்தப் பயனும் இல்லை என்றும் கௌசர் வேதனை தெரிவித்துள்ளார். 

பெற்றோர்கள் போராட்டம்:

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் தலைவர் ஹசீபுல் ஹசனுடன் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தி ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காந்திநகர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அதன் பிறகு பள்ளி ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 ஏ (மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ஏ (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் வகையில் திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் ஹேமா குலாதி மீது வழக்குப் பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். சட்டப்பிரிவு 298 கீழ் (மத நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரித்தல் போன்றவை) ஆசிரியர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்:

வகுப்பில் முஸ்லிம்கள் குறித்து ஆசிரியையால் சொல்லப்பட்ட விஷயங்கள் பயங்கரமானவை என்றும்  அர்த்தமற்றவை என்றும்  ஜமியத் உலமா டெல்லி மாநில தலைவரான மௌலானா அபித் காஸ்மி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்று முஸ்லிம் மாணவர்களிடம் கூறிய அந்த ஆசிரியை கைது செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆசிரியையை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஆசிரியை ஹேமா குலாட்டி எந்தப் பள்ளியிலும் பணியில் சேர அனுமதிக்க கூடாது, அப்படி அனுமதித்தால், அந்த பள்ளியிலும் இதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை கூறும் செயலில் அந்த  ஆசிரியை ஈடுபடுவார்  என்றும் என்றும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: