Friday, August 18, 2023

தென்னகத்தின் அலிகர் வாணியம்பாடி....!

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தொடங்கி வைத்த  புகழ்பெற்ற இஸ்லாமியா நூலகத்துடன் தென்னகத்தின் அலிகராக விளங்கும் வாணியம்பாடி....!

மலைவாசஸ்தலங்களால் சூழப்பட்டு, சென்னை, பெங்களூரு மற்றும் கோலார் தங்க வயல்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் பாதையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரம், தமிழ்நாட்டின் தோல் தொழிலின் மையமாக அறியப்படுகிறது. உர்தூ மொழி மற்றும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு செழித்து வரும் பல கல்வி நிறுவனங்களுடனான அதன் தொடர்பிற்காக இது தென்னத்தின் அலிகர் என்ற நற்பெயரையும் கொண்டுள்ளது.

உர்தூ மொழி:

வாணியம்பாடியில் உள்ள உர்தூ மொழி பேசும் முஸ்லிம்கள், இரண்டு வரலாற்று காலகட்டங்களில் இருந்து தங்கள் வேர்களைக் கண்டறிந்துள்ளனர். 15 மற்றும் 16-வது நூற்றாண்டில் புகழ்பெற்று இருந்த பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்கள் ஆட்சி பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சாவூர், மதுரை மற்றும் இன்றைய தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வாணியம்பாடியை அடைந்த தமிழ் பேசும் புலம்பெயர்ந்தோரும் தங்களுடைய வாழ்க்கை ஓட்டத்திற்காகவும் கவுரவத்திற்காகவும் உர்தூ மொழியை கற்றனர். 

அப்போது முதல் வாணியம்பாடி உர்தூ மொழியின் மையமாக இருந்து வருகிறது. நாட்டின் விடுதலை போரின்போது வட மாநில மக்களுடன் தொடர்பு கொள்ள உர்தூ மொழி மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இதேபோன்று, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாணியம்பாடிக்கு வரும் வணிகர்களுக்கு உர்தூ மொழி தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர்களும் அழகிய அந்த உர்தூ மொழியை கற்றுக் கொண்டு, தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக உர்தூவை மாற்றிக் கொண்டார்கள். 

அரசியல்  நகரம்:

வாணியம்பாடி உர்தூ மொழியுடன் தொடர் கொண்டு இருப்பதை போன்று, அரசியல் களத்திலும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நடத்தி காட்டியுள்ளது.  ஆங்கிலேயர்களுடன் அரசியல் ரீதியான தொடர்புகளை மேற்கொள்ள ஆற்காடு நவாப்புகள், உர்தூ மொழியை பயன்படுத்தினர். இதேபோன்று, கடந்த 1919 முதல் 1922-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிரான நடந்த கிலாபத் இயக்கத்தில் பங்கேற்று இந்த நகரம் நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளது. 

உர்தூ இலக்கியத்திற்கான பங்களிப்பு:

தமிழை தாய் மொழியாக கொண்ட பிரபல கல்வியாளர்கள், கவிஞர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரும், உர்தூ மொழியை தங்கள் மொழியாக மாற்றிக் கொண்டு, இன்று அந்த மொழியை சிறப்பாக பேசி வருகிறார்கள். 

அத்துடன், ஆற்காட்டை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள், உர்தூ மொழியை கற்றுக் கொண்டு உர்தூ இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக, காகா அப்துல் அஜீஸ், லெப்பை கதீப் முகமது ஆஜம், மக்பூல், பங்கி அப்துல் காதீர் தானீஷ் பராசி உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் முஸ்லிம்கள், தென் இந்தியாவின் உர்தூ இலக்கத்திற்காக ஆற்றிய சேவைகள், பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. 

வணிக மற்றும் கல்வி நகரம்:

காலனித்துவ காலத்தில் வாணியம்பாடி, வணிகத்துறையின் தலைநகரமாக திகழ்ந்தது. இங்கு தோல் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாட்டிற்கு அதிகமாக அந்நிய செலவாணி கிடைத்து வருகிறது. 

தோல் உள்ளிட்ட தொழில்களில் சிறப்பான சேவை ஆற்றிய முஸ்லிம் தொழில் அதிபர்கள், அத்துடன் நின்று விடவில்லை. கல்வி சேவையிலும் தங்களது கவனத்தை செலுத்தினர். ஏழை, நடுத்தர முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், விளிம்பு நிலையில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்கினர். 

அதன்படி  மதரசே-இ-முஃபீதி-ஆம் என்ற பெயரில் கடந்த 1887ஆம் ஆண்டில் மதரஸா உருவானது. மேலும் 1901ஆம் ஆண்டில், வாணியம்பாடி கல்வி சங்கம் தொடங்கப்பட்டது. இதேபோன்று, 1903ஆம் ஆண்டில் மதரசே-இ-இஸ்லாமியா மூன்று மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், உர்தூ, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். மேலும் கடந்த 1916ஆம் ஆண்டு, இஸ்லாமியா கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் பன்முகத்தன்மை கொண்ட மதசார்பற்ற முறையில் படிப்புகள் கற்று தரப்படுகின்றன. 

உர்தூ கவியரங்குகள்:

உர்தூ மொழி முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருவதால், அதன் மீதான தாகம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், உர்தூ முஷைரா எனப்படும் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாட்டில் பிரபலமாக இருக்கும் உர்தூ கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.  வாணியம்பாடியில் வாழும் மக்கள், உர்தூ மொழியை பேசினாலும் பலருக்கு அந்த மொழியை எப்படி படிப்பது, எழுதுவது என இன்னும் தெரியவில்லை. வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தேவை என்பதால், அதில் அதிக கவனத்தை வாணியம்பாடி முஸ்லிம் இளைஞர்கள் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். 

காயிதே மில்லத் தொடங்கி வைத்த நூலகம்:


உர்தூ இலக்கிய பாரம்பரியத்துடன் இணைந்துள்ள வாணியம்பாடி நகரத்தில் புகழ்பெற்ற அஞ்சுமன்-இ-குதாம்-உல்-இஸ்லாம் மற்றும் இஸ்லாமியா நூலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.  சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் இஸ்லாமியா நூலகத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் கடந்த 1968-ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள். அப்போது மணிச்சுடர் நிறுவனரும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவருமான மறைந்த சிராஜுல் மில்லத்தும் உடனிருந்தார்.  ஒரு காலத்தில் நூலகத்திற்குள் வாசகர்களின் கூட்டம் அலைமோதி இருந்தாக கூறும் அதன் தலைவர் அப்துல் ரவூப் காலித், தற்போது, 20 வாசர்கள் மட்டுமே வந்து செல்வதாக கூறினார். ஆன்லைன் நூலகம் உள்ளிட்ட அம்சங்களே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த நூலகத்தில் கைகளால் எழுத்தப்பட்ட புகழ்பெற்ற உர்தூ நூல்களின் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நூலகம் டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உர்தூ மொழி மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சில் (NCPUL) 25வது அகில இந்திய உர்தூ  புத்தகக் கண்காட்சியை வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடத்தியது. இந்த புத்தகக் கண்காட்சியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்ததுடன், அரிய வகை புத்தங்களையும் காசு கொடுத்து வாங்கி சென்றனர். 

வாணியம்பாடி பிரியாணி:

வாணியம்பாடிக்கு செல்லும் மக்கள், அங்கு கிடைக்கும் சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடிக்காமல், வரவே மாட்டார்கள். அந்தளவுக்கு வாணியம்பாடி பிரியாணி, தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் புகழ்பெற்றுள்ளது. வாணியம்பாடி பிரியாணியை சாப்பிட மட்டுமே, சிலர் அடிக்கடி அந்த நகரத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். 

- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: