Tuesday, August 29, 2023

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு....!

ஒன்றிய பாஜக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் 65 சதவீதம் உயர்வு....!

ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியீடு....!

ஒன்றியதில் பாஜக ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக கூறிக் கொள்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட நிலை நாட்டில் இல்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அனைத்து வகையான அத்தியாவசி உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள், நகர்புற, கிராமப்புற ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை குறித்து ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய தோட்டக்கலை வாரியம், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உணவின் விலை 65 சதவீதம் உயர்வு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் வீட்டு உபபோயத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக, துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், உப்பு, எண்ணெய் வகைகள், வெங்காயம், இஞ்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள், கோதுமை மற்றும் மைதா மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலைகளும் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அளவு சாப்பாடு தற்போது நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, எட்டு ரூபாய் முதல் 10 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த தேநீர், தற்போது 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிற உணவு வகைகளின் விலைகளும் அதிரடியாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. ஆனால் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

ஊதிய உயர்வு 37 சதவீதம் மட்டுமே:

கடந்த ஐந்து ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்த அளவுக்கு, மக்களின் வருவாய் அதிகரிக்கவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரப்புற மற்றும் கிராமப்புற ஊழியர்களின் ஊதியம் வெறும் 37 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இதேபோன்று, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் ஊதியம் கடந்த 5 ஆண்டுகளில் 28 சதவீதம் அளவுக்கு மட்டும் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதியம் உயர்த்தப்படாததால், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தங்களுடைய அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திகைத்து வருகிறார்கள். 

குறைந்த வருமானம் காரணமாக நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், சமநிலையான அல்லது ஆரோக்கியமான உணவை உண்ண முடியாத நிலையில் இருந்து வருகின்றன. பல குடும்பங்கள் நாள்தோறும் மூன்று வேளை உணவை உண்ணும் நிலையில் இல்லை என்பதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது. 

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்:

தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியால் பெரும் பாதிக்கப்பட்டு இருப்பது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் என்பது இந்த தரவுகள் மூலம் உறுதியாக தெரியவருகிறது. உயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். அத்துடன், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் நகர்புற, கிராமப்புற ஊழியர்கள் மற்றும் மாத சம்பளம் பெறும் பணியாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஊதிய உயர்வு இல்லையென்றாலும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 

(குறிப்பு: தி இந்து ஆங்கில நாளிதழில் வந்த டேடா பாயிண்ட்யை (தரவு புள்ளி)அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது)

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: