Saturday, August 19, 2023

என்ஜினியர் பான்கயா சாய்வாலா....!

தேநீர் வியாபாரியாக மாறிய முஸ்லிம் பொறியியல் பட்டதாரி....!

ஓர் சிறப்பு செய்தி....!!

நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள், வேலைவாய்ப்புகளை தேடி அலையும் நிலை நாட்டில் உருவாகியுள்ளது. ஒருசில இளைஞர்களுக்கு பணி செய்யும் வாய்ப்புகள் கிடைத்தாலும், பொதுவாக ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் வாழ்க்கையில் அமைதி இழந்து தவிக்கிறார்கள். 

வேலைவாய்ப்புகள் பெருகவில்லை:

கடந்த ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் அரசு மற்றும் தனியார் துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. அத்துடன் அரசு துறைகளில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால், இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருசில இளைஞர்கள் கிடைக்கும் வேலையில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை வேதனையுடன் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

தேநீர் வணிகம்:

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே, தேநீர் சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேநீர் புதிய உற்சாத்தை தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருப்பதால், தங்களுக்கு விருப்பம் ஏற்படும்போது ஒரு கப் தேநீர் அருந்தி பலர் மகிழ்ச்சி அடைகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் தேநீர் விற்பனை சுடசுட நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் வீதிக்கு வீதி தேநீர் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அதிகாலை முதல் இரவு 12 மணி வரை தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரணமாக நினைக்கும் இந்த தேநீர் கடைகளில் கிடைக்கும் வருமானம் அனைவரையும் ஆச்சரியம் செய்யும் வகையில் இருந்து வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் தேநீர் விற்பனை செய்தே பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். கடின உழைப்பு என்றாலும், தேநீர் கடைகளில் கிடைக்கும் வருமானம் அதிகம். நல்ல லாபம் கிடைப்பதால், பலர் இந்த தொழில் தற்போது இறங்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 

என்ஜினியர் பான்கயா சாய்வாலா:

நாட்டில் தனித்துவமான முறையில் டீ வியாபாரம் செய்பவர்கள் ஏராளம். இத்தொழிலில் தற்போது உயர்கல்வி படித்தவர்கள் இறங்கி நல்ல பெயர் மற்றும் பணம் சம்பாதித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவரும் டீயை பிராண்டாக மாற்றிய இளைஞர்களில் ஒருவர்.

இங்கு வசிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியர் அமீர் சோஹைல், 'என்ஜினியர் பான்கயா சாய்வாலா' (பொறியியல் பட்டதாரி தேநீர் விற்பனையாளராக மாறிவிட்டான்) என்ற கடை நடத்தி வருகிறார். இந்த தனித்துவமான பெயர் மற்றும் அதன் சுவை காரணமாக இந்த கடை தற்போது  பிரபலமாகிவிட்டது  கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நாட்டின் பிற நகரங்களிலும் அதன் கிளைகள் பல பகுதிகளில் திறக்கப்பட்டு வருகின்றன. 

 அமீர் சோஹைலின் போராட்டம்:

என்ஜினியர் பான்கயா சாய்வாலா கடையை நடத்திவரும் அமீர் சோஹைலுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்ததும் ஊருக்கு வெளியே உள்ள டொயோட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அமீர் தனது சம்பளத்தில் திருப்தி அடையாததால், சில மாதங்களில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பினார். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதற்காக அமீர் களத்தில் பணிபுரிந்து சிறுசிறு வேலைகளை செய்து வந்தார். அமீர் ஏதோ ஒரு வேலையாக புனே செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. புனே சென்ற அவர் அங்கு ஒரு கட்டத்தில் தான் விரும்பிய மலைவாலி சாயை சுவைத்து அருந்தினார். 

அதன்பிறகு, புனேவில் சொந்தமாக தேயிலை வியாபாரம் தொடங்கும் எண்ணம் தனக்கு வந்ததாகவும், பாகல்கோட்டில் இதுபோன்ற டீயை விற்றால் மக்கள் வாங்குவார்கள் என உணர்ந்ததாகவும் அமீர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அமீர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி தனது நண்பர்களில் ஒருவரான யாசின் முஹம்மதுவை பங்குதாரராக்கி 'என்ஜினீயர் பான் கயா சாய்வாலா' தொடங்கினார்.

அமீரின் ஸ்டாலில் பால், டீ பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையுடன் சுவையான தேநீர் கிடைப்பதால், இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்த அமீர் சோஹைல், நகரின் நொங்கரா, வித்யாக்ரி, கலகரி ஆகிய இடங்களிலும் 'பொறியாளர் பான்கயா சாய்வாலாவின் கிளைகளை திறந்து மிக நல்ல முறையில் நடத்தி வருகிறார். இந்த கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் தனது நிறுவனத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிலைக்கு அமீர் தற்போது உயர்ந்துள்ளார். 

தன்னம்பிக்கையே வாழ்க்கை:

படித்துவிட்டு, வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்கு அமீர் சோஹைல் ஓர் நல்ல எடுத்துக்காட்டு. சேரும் பணியில் திருப்தி மற்றும் சரியான வருவாய் கிடைக்காவிட்டால், அதில் ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. தைரியமாக வெளியே வந்து புதிய பாதையை தேர்வு செய்ய வேண்டும். ஏக இறைவன் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, தொடங்கும் எந்த நிறுவனமும் நிச்சயம் வளர்ச்சி பெறும். இதற்கு அமீர் சோஹைலில் என்ஜினியர் பான்கயா சாய்வாலா கடையே நல்ல உதாரணமாகும். இந்த கட்டுரையை படித்தும் உங்களுக்கும் டீ கடையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறதா. இனியும் தயக்கம் வேண்டாம். ஏக இறைவனின் மீது நம்பிக்கை வைத்து உடனே நல்ல நிறுவனத்தை ஆரம்பித்து, கடினமாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: