Sunday, August 13, 2023

அரியானாவில் நடந்த கொடுமைகள்....!

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள்....!


தலைநகர் டெல்லிக்கு  அருகில் உள்ள அரியானா மாநிலத்தில், கடந்த மாதம் 31ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து கலவரம் உருவானது. இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஏராளமான முஸ்லிம்களின் வீடுகள் மட்டும்,  அரியானா பாஜக அரசால் புல்டோசரால் இடிக்கப்பட்டன. 

வணிக நிறுவனங்களில் முஸ்லிம்கள் யாரையும் பணிக்கு வைக்கக் கூடாது என்றும், முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர்கள், அவர்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் பாசிச அமைப்புகள் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தன. தற்போதும் மிரட்டல் விடுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அரியானா போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் முஸ்லிம்கள் மத்தியல் இன்னும் பீதியும் பயமும் இருந்து வருகிறது. 

இ.யூ.முஸ்லிம் லீக் ஆறுதல்:

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.. இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகப் பகுதியில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு செயலாளர் இ.டி.முகம்மது பஷீர் தலைமையிலான குழு ஒன்று, அரியானாவிற்கு சென்று, நூஹ், மேவாட் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலைமையை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அடிப்படை வசதியின்றி வாழும் முஸ்லிம்களின் நிலையை கண்டு வேதனை அடைந்தது. போலீசார் கட்டாயமாக அழைத்து சென்ற 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறுவர்களின் நிலை குறித்தும் கேட்டறிந்த முகம்மது பஷீர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இ.யூ.முஸ்லிம் லீக் நிச்சயம் செய்யும் என தெரிவித்தார். 

முஸ்லிம் அமைப்புகள் ஆய்வு:


இதேபோன்று, ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அரியானாவிற்கு சென்று ஆய்வுகளை செய்தன. நிவாரணம் வழங்குதல், ஆய்வுகள் நடத்துதல், சட்டப்பூர்வ தீர்வுகளை மேற்கொள்வது மற்றும் மசூதிகளைப் புனரமைத்தல் போன்ற பணிகளை ஜமாத் முன்னெடுத்துள்ளது. அமைப்பின் பன்முக அணுகுமுறை நிலைமையை நிவர்த்தி செய்வதையும், பாதிக்கப்பட்ட சமூகங்களை குணப்படுத்துவதையும், நீதியை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், பிரத்யேக நிவாரணக் குழு, சட்டப் பிரிவு மற்றும் ஆய்வுக் குழுக்களை நிறுவி, ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் துயர சம்பவங்களின் பின்விளைவுகளைத் தணிக்க விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை வகுப்புவாத சக்திகள் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன, திருக்குர்ஆன் உள்ளிட்ட நூல்கள் எரிக்கப்பட்டன, தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

13 மசூதிகள் மீது தாக்குதல்:


ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் நடத்திய ஆய்வில், அஞ்சுமன் இஸ்லாம் மஸ்ஜித் குருகிராம், மௌல்வி ஜமீல் வாலி மஸ்ஜித் சோஹ்னா, ஷாஹி ஜாமி மஸ்ஜித் பாரா கம்பா சோஹ்னா(, லக்கட்ஷா மஸ்ஜித் சோஹ்னா,  பஜார் வாலி மஸ்ஜித் ஹோடல், ஈத்கா மஸ்ஜித் ஹோடல், மதரஸா வாலி மஸ்ஜி பல்வால், பீர் கலி வாலி மஸ்ஜித் பல்வால், குப்தகஞ்ச் வாலி மஸ்ஜித் பல்வால்,  காளி மஸ்ஜித் பல்வால், ஹாஜி நிஜாம் வாலி மஸ்ஜித் பஸ் ஸ்டாண்ட் புல்வால், ரசூல்பூர் காவ்வால் வாலி மசூதி ஆகிய 13 மசூதிகள் மீது பாசிச அமைப்புகள் தாக்குதல் நடத்தி கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அறிய முடிந்தது. அத்துடன் குருகிராமில் பணிபுரிந்து வந்த ஒரு இமாம் கொல்லப்பட்டார். 

முஸ்லிம் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், புனித குர்ஆன் அவமதிப்பு, மசூதி இமாம்கள் மற்றும் தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் இன்னும் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்கவில்லை. .குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அரியானா போலீசார் கண்டும் காணாமல் இருக்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. 

தொடரும் அமைதியின்மை:


மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப அரசு மற்றும் பிற சமூக அமைப்புகள் தீவிரமாக முயற்சிகள் செய்து வந்தாலும், அரியானாவில் அமைதியின்மையின் தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.  ஒரு காலத்தில் சகோதர உணர்வுடன் செழித்துக்கொண்டிருந்த இந்த சமூக மையங்கள், இப்போது பாசிச குழுவாத பதட்டங்களின் வடுக்களை தாங்கி நிற்கின்றன. தொடர்ந்து முஸ்லிம்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால், அவர்கள் சமூக மற்றும் பொருளதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் ஆகியோர் வீடுகள் இல்லாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். முஸ்லிம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாமல், முஸ்லிம் குடும்பங்கள் பசியும் பட்டினியும் சந்தித்து வருகின்றன. 

அரியானாவில் மீண்டும் முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அமைதியான சூழலை கட்டியெழுப்புவதற்கும் குணப்படுத்துவதற்கும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது. இதன்மூலம் மட்டுமே, அரியானா முஸ்லிம்கள் தற்போது அனுபவித்து வரும் வலிகளையும், வேதனைகளையும் ஓரளவுக்கு குறைக்க முடியும். \

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: