Tuesday, August 29, 2023

அரியானாவில் வெறுப்பு பிரச்சாரம்...!

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம்....!

அரியானா மாநிலம் நூஹ்வில் கடந்த ஜுலை 31ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த திட்டமிட்ட வன்முறையை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பாசிச அமைப்புகள் தாக்குல்களை நடத்தின. மேலும் முஸ்லிம்களின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பாசிச அமைப்புகள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்குப் பிறகு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து, அவர்களின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளியது. இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு, இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால், பாசிச அமைப்புகளின் வெறுப்பு பேச்சுகள், பிரச்சாரங்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பீதியும், அச்சமும் இன்னும் நீங்கவில்லை. 

அச்சத்தால் வெளியேறும் முஸ்லிம்கள்:

அரியானா மாநிலத்தில் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் அவர்களை இப்போது பாசிச அமைப்புகள் குறிவைத்து மிரட்டி வருகின்றன. புலம்பெயர்ந்த முஸ்லிம் தொழிலாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக வெறுப்பு பரப்பப்படுகிறது. இதனால் அரியானாவில் உள்ள வெளிமாநில முஸ்லிம் தொழிலாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். 

பாசிச அமைப்புகளின் மிரட்டல் காரணமாக, பீதி அடைந்துள்ள பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் இம்ரான் அலி, எனது குடும்பத்திற்கு பணம் தேவையில்லை. நான் பாதுகாப்புடன் கிராமத்திற்கு திரும்பினால் போது என்று குடும்பத்தினர் விரும்புகிறார்கள். எனவே, நான் குருகிராமில் இருந்து தப்பி சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார். வன்முறை நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குருகிராமமுக்குத் திரும்பி வந்து தனது உடைமைகளை சேகரித்து, மீண்டும் சொந்த ஊருக்கு அலி புறப்பட்டார். இதேபோன்று ஏராளமான முஸ்லிம்கள், அரியானாவில் இருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பாஜக மீது குற்றச்சாட்டு:

நூஹ்வில் வசிக்கும் ஒரு முஸ்லிம், பாஜகவினர் தங்கள் பகுதிகளில் முஸ்லிம்களைக் குறிவைத்து கலவரங்களை ஏற்படுத்தும் என தான் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்ததாக கூறியுள்ளார். அது இப்போது உண்மையாகி இருப்பதாகவும், இதன்மூலம் முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

நூஹ்வில் வசிக்கும் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ள அந்த முஸ்லிம் முதியவர், வெளியாட்களை கொண்டு வந்து, பேரணியின்போது, முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான வார்த்தையும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதனால், நூஹ் வன்முறை குருகிராம் வரை பரவியது என்றும் வன்முறை கும்பல் தெருக்களில் புகுந்து, பாசிச முழக்கங்களை எழுப்பி, முஸ்லீம் குடிசைகள் மற்றும் வணிகங்களை குறிவைத்தது என்றும் முஸ்லிம்கள் கூறியுள்ளனர். ஆனால் கலவரத்தை தடுக்க குருகிராம் போலீசார் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தொடரும் வெறுப்பு பிரச்சாரம்:

இந்த கலவரத்திற்குப் பிறகு, இந்து அமைப்புகள் தங்களுக்கு எதிராக பகிரங்கமாக வெறுப்பை பரப்பி வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும் என இந்துக் குழுக்கள் மிரட்டி வருகின்றன. முஸ்லிம் கடைகளில் எதையும் வாங்குவதில்லை என்றும், வீடுகளை வாடகைக்கு விடுவதில்லை என்றும் பாசிச அமைப்புகள் வெறுப்பை பரப்பி வருகின்றன. 

ஆனால், அரியானா காவல்துறையும் நிர்வாகமும் முஸ்லீம்களை பாதுகாக்க தவறி விட்டன என அச்சம் காரணமாக நூஹ்வில் இருந்து வெளியேறிய பீகாரை சேர்ந்த அகமது கான் வேதனை தெரிவித்துள்ளர். இந்த நாட்டில் உள்ள அனைத்தும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று இந்து பாசிச அமைப்புகள் நினைக்கிறார்கள் என்றும்,  காவல்துறையும், நிர்வாகமும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதால்,  முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்பது போல உள்ளது என்றும் அகமது கான் கூறியுள்ளார். 

இந்நிலையில், ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் நடத்திய ஆய்வில், அஞ்சுமன் இஸ்லாம் மஸ்ஜித் குருகிராம், மௌல்வி ஜமீல் வாலி மஸ்ஜித் சோஹ்னா, ஷாஹி ஜாமி மஸ்ஜித் பாரா கம்பா சோஹ்னா(, லக்கட்ஷா மஸ்ஜித் சோஹ்னா,  பஜார் வாலி மஸ்ஜித் ஹோடல், ஈத்கா மஸ்ஜித் ஹோடல், மதரஸா வாலி மஸ்ஜி பல்வால், பீர் கலி வாலி மஸ்ஜித் பல்வால், குப்தகஞ்ச் வாலி மஸ்ஜித் பல்வால்,  காளி மஸ்ஜித் பல்வால், ஹாஜி நிஜாம் வாலி மஸ்ஜித் பஸ் ஸ்டாண்ட் புல்வால், ரசூல்பூர் காவ்வால் வாலி மசூதி ஆகிய 13 மசூதிகள் மீது பாசிச அமைப்புகள் தாக்குதல் நடத்தி கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அறிய முடிந்தது. 

விவசாய அமைப்புகள் எச்சரிக்கை:

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை தொடர்ந்து இந்து, சீக்கிய மற்றும் முஸ்லிம் விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பேசிய அனைத்து அமைப்புகளை சேர்ந்த விவசாயிகளும், முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள், இந்த நாட்டிற்கு சொந்தமானவர்கள், அவர்கள் மீது இனி தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அப்படி பாசிச அமைப்புகள் செய்தால், விவசாயிகள் இனி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.  பாசிச அமைப்புகளின் மிரட்டல்களால் அச்சம் அடைந்துள்ள அரியானா முஸ்லிம்களுக்கு, விவசாயிகளின் ஆதரவு கொஞ்சம் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது என கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: