Sunday, September 24, 2023

மனித சமுதாயத்தை காப்பாற்ற....!...!

 

அழிவில் இருந்து மனித சமுதாயத்தை காப்பாற்ற

ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்....!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த மர்ஹும் சிராஜுல் மில்லத் .கா..அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வேலூர் ஆர்.என்.பாளையத்தில் இயங்கி வரும் இஸ்லாமிக் சென்டருக்கு சென்ற அவர், அங்குள்ள சிறப்பு விருந்தினர்களின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு, சென்டரின் பணிகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து குறிப்பு எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிராஜுல் மில்லத் உரை:

பின்னர், இஸ்லாமிக் சென்டர் நிர்வாகிகள் சார்பில், சிராஜுல் மில்லத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் வேலூர் நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பின்னர் உரையாற்றிய சிராஜுல் மில்லத், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். வேலூரில் இயங்கி வரும் இஸ்லாமிக் சென்டர் சிறிய அளவில் இருந்தாலும் மிகப்பெரிய பணிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதன் பணிகளை ஏக இறைவன் ஏற்றுக் கொண்டு, மேலும் உற்சாகத்துடன் பணிகளை நிறைவேற்ற நிர்வாகிகளுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் துஆ செய்தார்.

அழிவில் மனித சமுதாயம்:

தொடர்ந்து பேசிய அவர், ஏக இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதித்தூதராக அறிவிப்பதற்கு முன்பு, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பியாவில் இருந்த கொடூர நிலைமைகளை குறிப்பிட்டார். மனித சமுதாயம் மிகவும் கொடுமையான ஒரு சமுதாயமாக இருந்ததாகவும், அட்டூழியங்கள், அட்டகாசங்கள், பாவங்கள் என அனைத்தும் அப்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்து வந்ததாகவும் கூறிய அப்துஸ் ஸமத் அவர்கள், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அரேபியா, ஐரோப்பியா உட்பட முழு உலகமும் அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. இந்த அழிவின் தன்மை மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மனிதர்கள் மத்தியில் தீமைகள் தொடர்ந்து அதிகரித்தன. நன்மைகள் என்ற பேச்சே இருக்கவில்லை. இதனால், உலகம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலை மாற வேண்டும் என அப்போது வாழ்ந்த நல்லவர்கள் சிலர் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருந்தனர். இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் தான், ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

 

ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்:

அந்த அற்புதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் ஏக இறைவன் நடத்திக் காட்டினான். ஆம், அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மனித சமுதாயம் படுபாதாளத்தில் விழ தாயராக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏக இறைவன் இறைத்தூதராக அறிவித்து, அவர்கள் மூலம், மனித சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக மாற்றிக் காட்டினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட பின்பு, அவர் சந்தித்த துன்பங்கள், தொல்லைகள் ஏராளம். எனினும், மிகவும் பொறுமையுடன் செயல்பட்டு, ஏக இறைவனின் கட்டளையை அவர் நிறைவேற்றினார். உலகில் இன்று நாம் முஸ்லிம்களாக மிகப்பெரிய கவுரவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

எனவே, நம்முடைய வாழ்வு இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வாழும் நல்ல பண்புள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த நல்ல ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து நல்ல இஸ்லாமியர்களாக வாழ வேண்டும். நல்ல முஸ்லிம்களாக வாழ்வதே, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாகும். இதன்மூலம், பிறருக்கும் நாம், சிறந்த முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஒவ்வொரு நாளும், திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகளை நாம் படித்து, அதன்படி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் நிலையில் உள்ள உரை:  

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் இஸ்லாமிக் சென்டரில் சிராஜுல் மில்லத் அவர்கள் ஆற்றிய இந்த உரையை கேட்கும் வாய்ப்பு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கும் கிடைத்தது. அழிவில் இருந்து மனித சமுதாயத்தை காப்பாற்ற  ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என சிராஜுல் மில்லத் சொல்லிய அந்த வார்த்தைகள் இன்னும் என் மனதை விட்டு மறையவில்லை. அகலவில்லை. மர்ஹும் சிராஜுல் மில்லத்தை அடிக்கடி நான் நினைக்கும்போது, அவர் இஸ்லாமிக் சென்டரில் ஆற்றிய உரையின் முக்கியத்துவம் எனக்கு நினைவுக்கு வரும்.

ஏக இறைவனால், இறுதித்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படாமல் இருந்திருந்தால், உலகம் எப்படிப்பட்ட அழிவை நோக்கிச் சென்று இருக்கும் என நினைத்து நான் வேதனை அடைவேன். எனவே, மனித சமுதாயத்தை காப்பாற்ற  ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டிய வாழ்வு நெறியை நாமும் பின்பற்றி, ஏக இறைவனுக்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: