Tuesday, September 5, 2023

புதிய சர்ச்சைகள்....!

புதிய சர்ச்சைகளால் நாட்டு மக்களை குழப்பம் பாஜக....!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இன்னும் 7 மாதங்களில் பாஜகவின் ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில்  முழுவீச்சியில் இறங்கியுள்ளன. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கியுள்ளன. 

இந்தியா கூட்டணியால் அச்சம்:

நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அத்துடன் பல்வேறு குழுக்களை அமைத்து நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை இந்தியா கூட்டணி தொடங்கியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு தற்போது நாடு முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாஜக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் பெற நினைத்தாலும், தற்போது வலுவான இந்தியா கூட்டணி ஏற்பட்டுள்ளதால், நாட்டு மக்களுக்கு ஓர் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை காப்பாற்ற, அனைத்து தரப்பு மக்களும், இணைந்து அமைதியாக வாழ வேண்டும், தேசத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இந்தியா கூட்டணி செயல்படுவதால், இந்த கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. 

இந்தியா கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. பாஜகவின் துணை அமைப்புகளான பாசிச அமைப்புகளும் கவலை அடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா கூட்டணியின் பலத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தனது வழக்கமான பாணியை தற்போது கையில் எடுத்து காரியங்களை செய்து புதிய புதிய சர்ச்சைகளை உருவாக்கி நாட்டு மக்களை குழப்பம் செய்து வருகிறது. 

ஒரே நாடு ஒரே தேர்தல்:

நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பல்வேறு மாநிலங்களில் இரு சமூக மக்களிடையே மோதல் என ஏராளமான விவகாரங்கள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிய பாஜக அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக மக்களை குழப்பம் வகையில் புதிய புதிய சர்ச்சைகளை அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது. 

இத்தகைய சர்ச்சைகளில் ஒன்றுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமாகும். தற்போதைய சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின்பேரில், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. 

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராட்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் பாஜக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

பாரதம் என பெயர் மாற்ற திட்டமா:

ஒரே நாடு ஒரே தேர்தல் சர்ச்சை தொடரும் நிலையில், தற்போது, இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி-20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு வரும் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார். அதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்ப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக முடிவு செய்துவிட்டதாக நாடு முழுவதும் பரபரப்பு உருவாகி புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள் சாடல்:

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்தியா, பாரத் என்ற இரண்டுமே தங்களுக்கு சமம்தான் என்றும், ஆனால், இந்தியா என்ற பெயர் பாஜகவுக்கு அச்சத்தை உண்டாக்குவதால் மலிவான அரசியலில் ஈடுபடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சாசனத்தில் இந்தியா என்றே குறிப்பிட்டு இருப்பதாக மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

இதேபோன்று, உலகத்திற்கு இந்தியா என்ற பெயர்தான் தெரியும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குறிப்பிட்டுள்ளார்.  அரண்வர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல, இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது என கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா என்ற பெயரை மட்டுமே மாற்ற முடிந்து இருக்கிறது என சாடியுள்ளார். 

இந்தியா கூட்டணி தனது பெயரை பாரத் என்று மாற்றிக் கொண்டால் பாரத் என்ற பெயரையும் ஒன்றிய அரசு மாற்றிவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இது தேசத்துரோகம் என கூறியுள்ளார்.  நாட்டின் பெயரை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது என தேசியவாத சாங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெயர் மாற்றத்துக்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல என்றும் தேர்தல் பயம் தான் என்றும் இடதுசாரி கட்சிகள் சாடியுள்ளன. இதேபோன்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் நாட்டின் பெயரை மாற்றுவதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. 

வளர்ச்சியில் அக்கறை இல்லை:

நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பாஜகவிற்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது அதன் செயல்பாடுகள் மூலம் நன்கு தெரியவருகிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்ற நோக்கில் பாஜக தனது பணிகளை செய்துவருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. வெற்று முழக்கங்கள் தான் அடிக்கடி வெளியாகி வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சிப் பணிகளை கூறி மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்கும் நிலையில் பாஜக இல்லை என்பது நன்கு தெரியவருகிறது.  இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயர் மாற்றம் போன்ற சர்ச்சைகளை உருவாக்கி, நாட்டு மக்களை பாஜக குழப்பம் செய்து வருகிறது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பம் நடவடிக்கைகள் இது என்பது உறுதியாக கூறலாம். தேர்தல் காலம் நெருங்க, நெருங்க இதுபோன்ற புதிய புதிய சர்ச்சைகள் மேலும் உருவாகலாம். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: