Saturday, September 30, 2023

என்ன செய்ய வேண்டும்....?

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள்....!

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்....!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவான பிறகு, நடைபெறும் முதல் பொதுதேர்தல் இதுவாகும். அண்மையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளை கைப்பற்றி, தங்களது வெற்றி கணக்கை தொடங்கின. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின.

நம்பிக்கை தரும் வெற்றி:

இந்தியா கூட்டணி ஏற்பட்ட பிறகு நடந்த இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளது. பணபலம், ஆள் பலம், அதிகார பலம் என பல்வேறு பலங்களுடன் இடைத்தேர்தலில் களம் இறங்கிய பாஜகவிற்கு, இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்:

இடைத்தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மற்றும் தெலுங்கானாவில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இலக்குடன் தன்னுடைய பணிகளை நிறைவேற்றி வருகிறது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சி, அந்த இருமாநில மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.  

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு மற்றும் ஊழல்கள் குறித்த எந்த புகாரும் எழவில்லை. மேலும், மக்கள் நலன்களை அடிப்படையாக கொண்டு, அங்கு காங்கிரஸ் கட்சி நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பாஜக, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. விவசாயிகள் உட்பட அடித்தள மக்களின்  நலனுக்காக எந்த திட்டங்களையும் பாஜக நிறைவேற்றவில்லை. மேலும் பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பாஜக அரசு மீது மத்திய பிரதேச மக்கள் மிகுந்த கோபத்துடன் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக அங்கும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தெலுங்கானா மாநில உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி, புதிய மாநிலம் அமைந்த பிறகு, அங்கு நடந்த இரண்டு சட்டப்பேரவை பொதுதேர்தலிலும், தோல்வியே சந்தித்தது. இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி, இந்த முறையும், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

எனினும், தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், மக்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும், அக்கட்சியைச் சேர்ந்த பலர், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என மிகப்பெரிய இலக்குடன், காங்கிரஸ் கட்சி, 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும், தாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியது போன்று, தெலுங்கானாவிலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 6 வாக்குறுதிகள் உள்ளதால், தெலுங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.  இதேபோன்று, மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. 

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்:

கர்நாடகா மாநிலத்தில் மிக வலிமையாக கருத்தப்பட்ட பாஜக, தனது ஆட்சி காலத்தில், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்பட்டது. இதனால் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்த முஸ்லிம்கள், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களது வாக்குரிமையை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், தங்களது வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் உறுதியாக இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே ஒற்றுமையாக வாக்கு அளித்தனர். அத்துடன் தேர்தல் நேரத்தில் அலட்சியாக இருந்து விடாமல் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். இதன்மூலம், முஸ்லிம்களின் ஆதரவுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது என உறுதியாக கூறலாம். 

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், முந்தைய பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்திவிட்டது. ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, சரியான முறையில் சென்றுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது, அளித்த ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் பெற்றுள்ளது. 

இத்தகையை சூழ்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தங்களது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு தொகுதியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், வலிமையாக இருக்கும் கட்சிக்கு மட்டுமே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். மேலும் பாஜகவா அல்லது காங்கிரசா என்ற கேள்வி வந்தால், தயக்கம் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் வாக்குகள் பிரிந்து போகாது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து போவதால், அதன்மூலம் பலன் அடைந்து பாஜக வெற்றி பெறுகிறது என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. 

கர்நாடகா மாநில முஸ்லிம்கள் கடைப்பிடித்த சரியான பார்முலாவை, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம்கள் கட்டாயம் பின்பற்றினால், நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும். இதன்மூலம், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தடுத்த நிறுத்த முடியும். நாட்டில் அமைதி, அன்பு, சகோதரத்துவம், மகிழ்ச்சி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, ஐந்து மாநில முஸ்லிம்கள் செயல்பட வேண்டும் என்பதே சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 

கடைசியாக, ஐந்து மாநில மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, பல்வேறு நெருக்கடிகள் இந்தியா கூட்டணிக்கு ஏற்படும். இந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, இந்தியா கூட்டணி உறுதியுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இனி வரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் அதன்படி செயல்பட்டால், நாட்டுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: