Sunday, September 3, 2023

முஸ்லிம் பெண்மணிகளின் பங்களிப்பு....!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்மணிகளின் மறக்க முடியாத பங்களிப்பு....!

நீண்ட கால தொடர் போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டிஷாரிடம் இருந்து நாடு, கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை பெற்றது. இந்த விடுதலைப் போரில் அனைத்து சமுதாய மக்களும் தங்களை இணைந்துக் கொண்டு பல்வேறு தியாகங்களை செய்தனர். இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள், பங்களிப்புகள் ஏராளமாகும். இதனை குறிப்பிடாமல், இந்திய விடுதலைப் போரின் வரலாறு எப்போதும் நிறைவுபெற முடியாது. ஆனால், நாட்டின் விடுதலைகளுக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறைக்க தற்போது பாசிச அமைப்புகள் முயற்சிகளை செய்து வருகின்றன. வரலாற்றை திரித்து எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களையும் பணிகளையும் நாட்டின் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள், தங்கள் முன்னோர்கள் ஆற்றிய கடமைகளை நினைவுக்கூர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணிகளை ஆற்ற வேண்டும்.

முஸ்லிம்களின் தியாகங்கள்:

இந்திய விடுதலைப் போரின் வரலாறு நீண்ட நெடிய கொண்ட ஒரு கடினமான வரலாறு ஆகும். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முஸ்லிம் மன்னர்களில் முக்கியமானவர் மாவீரன் தீப்பு சுல்தான் என்றால் அது மிகையாகாது. அவரது தந்தை ஹைதர் அலியும் சுதந்திரத்திற்காக போராடி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை திக்குமுக்காட வைத்தார். கடந்த 1780 முதல் 1790 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஹைதர் அலி மற்றும் தீப்பு சுல்தான் ஆகியோர் கடும் நெருக்கடிகளை கொடுத்து சிம்ம சொப்பனமாக இருந்து வந்தனர். இருவரின் மறைவுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள், நாட்டில் தங்களது ஆதிக்கத்தை தீவிரப்படுத்தினர் என்பது என்றும் மறைக்க மற்றும் மறுக்க முடியாது வரலாறு ஆகும். 

முஸ்லிம் பெண்மணிகளின் பங்களிப்பு:

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம் பெண்மணிகளும் பல்வேறு தியாகங்களையும், பணிகளையும் செய்து இருப்பதை நாம் அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, அனைத்து சமுதாய மக்களும், முஸ்லிம் பெண்களின் தியாகங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். 

இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றி, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்டவரில் ஒருவர்தான்  பேகம் ஹஸ்ரத் மஹால் என்ற முஸ்லிம் பெண்மணி. இவர் கடந்த 1857ஆம் ஆண்டு சின்ஹட் என்ற பகுதியில் நடந்த போரில் பிரிட்டிஷ் அதிகாரி சர் ஹென்றி லாரன்ஸ்-சை சுட்டு வீழ்த்தி, அவர்களின் கனவுகளை சிதைத்தார். 

இதேபோன்று, ஏராளமான முஸ்லிம் பெண்மணிகள், நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை செய்தனர். குறிப்பாக, ஆபிதி பானு பேகம் எனும் பி அம்மாவின் தியாகங்களையும், பணிகளையும் என்றும் மறக்க முடியாது. கிலாபத் இயக்கத்தில் பங்கேற்ற இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தொடர்ந்து சேவை ஆற்றினார். மகாத்மா காந்தியின் ஆலோசனையை ஏற்று, நாட்டின் விடுதலையில் அனைத்து தரப்பு பெண்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தி விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பி அம்மா, சுதேசி இயக்கத்திற்காகவும், தனது பங்களிப்பை அளித்து மிகச் சிறந்த முறையில் சேவை ஆற்றினார்.  அலி சகோதரர்கள் என அன்பாக அழைக்கப்படும் முஹம்மது அலி மற்றும் சவுகத் அலி ஆகியோரின் தாய்தான் பி அம்மா.  இளம் வயதில் தனது கணவர் காலமானபோதும்,  இவர், நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து போராடினார். பி அம்மாவின் மகளான அம்ஜாதி பேகம், சுதந்திரத்திற்காக ஆற்றிய பங்களிப்பை கண்டு மகாத்மா காந்தி, அம்ஜாதி பேகத்தை துணிச்சலான மற்றும் தைரியமான பெண்மணி என புகழாரம் சூட்டினார். 

சுதந்திரப் போரில் துணிச்சலுடன் போராடிய மற்றொரு முஸ்லிம் பெண்மணி அஸ்கரி பேகத்தின் பணிகளை நாடு மறந்துவிட்டது. கடந்த 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு நடந்த போரில் கலந்துகொண்ட இவர், அவர்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டு தனது உயிரை தியாகம் செய்தார். 

ஹபிபா என்னும் மற்றொரு முஸ்லிம் பெண்மணி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 1857ஆம் ஆண்டு நடந்த போரில் கலந்துகொண்டார். ஆனால், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒரே காரணத்திற்காக தூக்கிலிடப்பட்டார். 

ஜெய் ஹிந்த முழக்கம்:

நாட்டின் விடுதலையில் முக்கிய முழக்கமாக இருந்த ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை முதன்முதலில் கூறி நாட்டிற்கு அறிமுகம் செய்தவர் ஜைனுல் ஆபிதீன் ஹசன் என்ற ஒரு முஸ்லிம் என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பின்னர், இந்த முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தனது விடுதலை படைக்கான முழக்கமாக பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியதால் தனது 27 வயதில் ஷாயித் அஷ்பகுல்லா கான் என்ற முஸ்லிம், கடந்த 1927ஆம் ஆண்டு டிசம்பம் 19ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். 

முஸ்லிம் தலைவர்கள்:

எல்லை காந்தி என அன்பாக அழைக்கப்பட்ட கப்பார் கான், நீதிபதி அப்பாஸ் தையிபி, மவுலானா அபுல் கலாம் ஆசாத், முஹம்மது அலி ஜௌஹர், சவுகத் அலி, டாக்டர் முக்தார் அன்சாரி, ஹக்கீம் அஜ்மல் கான், மவுலானா மாஹமூத் அசன் என  நாட்டின் விடுதலைக்காக சேவைகளையும் தியாகங்களையும் செய்த முஸ்லிம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

வரலாற்றை மறைக்க முயற்சி:

இந்திய விடுதலைக்காக முஸ்லிம் சமுதாயம் ஆற்றிய பணிகளைப் போன்று வேறு எந்த சமுதாயம் ஆற்றி இருக்க முடியாது என்பது உண்மையான வரலாறு ஆகும். ஆனால், முஸ்லிம்களின் உயிர் தியாகங்களையும், பணிகளையும், மறைக்க பாசிச அமைப்புகள் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வரலாற்றை திரித்து எழுத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விடுதலைக்காக முஸ்லிம்கள் ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில், நாட்டில் தற்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, முஸ்லிம்களின் பணிகளையும் தியாகங்களையும், முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் முஸ்லிம்கள் தங்களது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். 

- நன்றி : டாக்டர் பி.நசீர் அகமது, ஓமியாட் ஜெர்னல் மாத இதழ்

- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: