Friday, September 8, 2023

வெற்றிக் கணக்கு தொடக்கம்...!

வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா கூட்டணி....!

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.  28 கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி சந்தித்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு புதிய நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது. பாஜக மீது இருந்து கோபம், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சாதகமாக அமைந்து இருந்ததை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

வெற்றிக் கணக்கு தொடக்கம்:

இடைத்தேர்தல் நடந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 4 புள்ளி 3 என்ற கணக்கில் இந்தியா கூட்டணி தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின. ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி இடையிலான முதல் முக்கிய தேர்தல் மோதலாக கருதப்பட்ட இந்த இடைத்தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணிக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் ஓர் புதிய நம்பிக்கையை தந்துள்ளது. 

அதிக வாக்குகள் பெற்று வெற்றி:

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்களும் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் கோசி தொகுதியில் போட்டியிட்ட  சமாஜ்வாடி கட்சி  வேட்பாளர் சுதாகர் சிங், பாஜகவின் தாராசிங் சவுகானை 42 ஆயிரத்து 759 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 

கேரளாவில் முன்னாள் முதலமைச்சர்  உம்மன் சாண்டியின் மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான சாண்டி உம்மன் 37 ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றார்.  இதேபோன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தும்ரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பெபி தேவி 17 ஆயிரத்து 100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

மேற்கு வங்க மாநிலம் துப்குரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் பாஜக. வேட்பாளர் தபசி ராயை 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பாஜக வசமிருந்த இந்த தொகுதியை திரிணாமுல் கைப்பற்றியுள்ளது. 

ஆனால், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள். 

நம்பிக்கை தரும் வெற்றி:

இந்தியா கூட்டணி ஏற்பட்ட பிறகு நடந்த இந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளது. பணபலம், ஆள் பலம், அதிகார பலம் என பல்வேறு பலங்களுடன் இடைத்தேர்தலில் களம் இறங்கிய பாஜகவிற்கு, இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். 

இடைத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜகவின் தோல்வி தொடங்கிவிட்டதாகவும், இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் கூறியுள்ளார். 

இதேபோன்று, கருத்து கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி முதல் வெற்றியை பதிவு செய்து இருப்பதாகவும், இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், இந்தியா கூட்டணி 4 புள்ளி 3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருப்பதாகவும், இந்த வெற்றி இனி தொடரும் என்றும் கூறியுள்ளார். 

வெற்றி தொடர என்ன செய்ய வேண்டும்:

6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி, இந்த வெற்றி இனி தொடர வேண்டுமானால், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுடன் ஒற்றுமையாக இயங்குவது மிகவும் அவசியம். இடைத்தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, இந்தியா கூட்டணியை சிதைக்க, உடைக்க பல்வேறு தில்லுமுல்லுகளை செய்யும் என்பது உறுதி. எனவே, நாட்டு நலனில் அக்கறையுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, பல்வேறு நெருக்கடிகள் இந்தியா கூட்டணிக்கு ஏற்படும். இந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, இந்தியா கூட்டணி உறுதியுடன் செயல்பட வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள், தங்களது சுயநலங்களை மறந்துவிட்டு ஈகோவை கைவிட்டு, பரந்த எண்ணங்களுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இயங்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இனி வரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி செயல்பட்டால், நாட்டுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: