Tuesday, September 12, 2023

அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகள்....!

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகள்....!

மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்...!!

உலகில் அறிவியல் வளர்ச்சி வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், மனிதர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நுனி விரலில் எல்லா தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் மனிதன், மன அமைதி என்ற நிலையை மட்டும் அடைய முடியாமல் தவித்து வருகிறான். அவனுடைய பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றுக் கொண்டே இருக்கின்றன. இதனால், மனிதர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் உருவாகி விபரீத முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

இத்தகையை சூழ்நிலையில் தற்கொலை செய்துக் கொள்வதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், தற்கொலை மிகப்பெரிய ஆபத்து என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் மனநல மருத்துவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். 

அதிகரிக்கும் தற்கொலைகள்:

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமானோர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் தற்கொலை  எண்ணங்களை சுமந்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டே செல்கிறார்கள். கடந்த 2019-ஆம் ஆண்டில் உலகளவில் 15-29 வயதுடையவர்களிடையே இறப்புக்கான நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை இருந்துள்ளது.

அதிகரிக்கும் மனநலப் பிரச்சினை :

உலகின் இளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் மனநலப் பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். இந்த தகவலை கூறியுள்ள அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் விபா கோயல், தற்கொலை என்பது குடும்பங்கள், சமூகங்களை பாதிக்கும் ஒரு சோகம் என்றும், பின்தங்கிய மக்கள் மீது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.  சிகிச்சை அளிக்கப்படாத மனநலக் கோளாறு தற்கொலைக்கு வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

தற்கொலை போன்ற நெருக்கடியான தருணங்களில் ஒரு நபர் மோதல், பேரழிவு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் சூழ்நிலைகளில் மனக்கிளர்ச்சியுடன் நிகழலாம் என மருத்துவர் விபா கோயல் கூறியுள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சமூகத்தின் கடுமையான, உணர்ச்சியற்ற அணுகுமுறை, மனச்சோர்வு மற்றும் தற்கொலையுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளைப் புரிந்துகொள்வது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மன பலவீனமே காரணம்:

உலகில் நிகழும் தற்கொலைகளுக்கு மனநல நிலை பலவீனத்தின் அறிகுறியே முக்கிய காரணம் என்றும், ஒரு நபர் வலிமையானவராக இருந்தால், அவருக்கு இந்த நிலை இருக்காது என்றும் மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனனர்.  

தற்கொலை எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க ஒருவர் தனிமையாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்போதும் சம மனிதர்களுடன் கூடி வாழ்வதை பழக்கமாக கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

தற்கொலையை வெறுக்கும் இஸ்லாம்:

இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறார்கள். எது நடந்தாலும், அது ஏக இறைவனின் விருப்பத்துடன் நடப்பதாக இஸ்லாமியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மேலும், இஸ்லாத்தில் குடும்பவியல் வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

உறவுகளை பேணி வாழ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உறவு முறைகளை துண்டிப்பவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என இஸ்லாம் சொல்லித் தருகிறது. எனவே, இஸ்லாமியர்கள் மத்தியில் தற்கொலைகள் அவ்வளவாக நிகழ்வது இல்லை. ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இஸ்லாமியர்கள் எப்போதும் இறை நம்பிக்கையுடன் வாழ்க்கையை கடந்து செல்வதால், தற்கொலை குறித்து எண்ணிப் பார்ப்பதே இல்லை. அதற்கு எந்தவித முயற்சிகளையும் செய்வதில்லை. இதனால் இஸ்லாமிய குடும்பங்களில் தற்கொலைகள் தடுக்கப்பட்டு எப்போதும் அமைதி நிலவுகிறது என கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: