Saturday, September 23, 2023

அன்பின் கடை.....!

வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை.....!


நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் வெறுப்பை விதைத்து அதை வேகமாக பரப்பி வருகின்றன. அரியானா, உத்தரப் பிரதேசம்  உள்ளிட்ட சில மாநிலங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அரியானாவில் அண்மையில் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு, அங்குள்ள முஸ்லிம்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். மேலும், முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும், முஸ்லிம் வணிக நிறுவனங்களில் யாரும் பொருட்களை வாங்கக் கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் மிரட்டி வருவதால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து அரியானாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணிபுரியும் முஸ்லிம்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனினும், விவசாய அமைப்புகள் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளதால், இந்துத்துவ அமைப்புகள் தங்களது வேகத்தை சற்று குறைத்துள்ளன. 

முஸ்லிம் எம்.பிக்கு எதிராக வெறுப்பு:

இப்படி, நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பி வரும் பாசிச அமைப்புகள், தற்போது நாடாளுமன்றத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை கக்கி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பேசிய டெல்லியை சேர்ந்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்.பி., டேனிஷ் அலி குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதனை முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் சிரித்துக் கொண்டே ரசித்தனர். 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஜனநாயக நெறிமுறைகள் கடைப்பிடித்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்த நிலையிலும் கூட, பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, முஸ்லிம் எம்.பி. மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன்மூலம் பாஜகவின் உண்மையான முகம் இப்போது நாடாளுமன்றத்திலும் தெரியவந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி பேசிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி குறித்து, ரமேஷ் பிதுரி பேசிய கருத்துகள் அனைத்து எம்.பி.க்களையும் அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. திமுக எம்.பி. கனிமொழி, பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி குறித்து தரக்குறைவாக பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதேபோன்று, மிகுந்த வருத்தத்துடன் டேனிஷ் அலியும் சபாநாயகருக்கு கடிதம் எழுதி, தனக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைகளுடன் பாஜக எம்.பி. பேசியதாக வேதனை தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி சந்திப்பு:

இத்தகைய சூழலில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லியில் டேனிஷ் அலியை நேரில் சந்தித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ``வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை" என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள டேனிஷ் அலி, ``தனது மன உறுதியை உயர்த்தவும், ஆதரவை வழங்கவும் ராகுல் காந்தி வந்ததாகவும், தான் தனியாக இல்லை, ஜனநாயகத்துடன் நிற்கும் அனைவரும் தன்னுடன் நிற்கிறார்கள் என்று ராகுல் காந்தி தன்னிடம் கூறினார்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ``நாட்டில் அதிகரித்துவரும் வெறுப்பு கலாசாரத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர, ராகுல் காந்தியின் திடீர் வருகை தனக்குப் பெரும் பலத்தை அளித்தது என்றும்,  வெறுப்பு தோற்கும், அன்பு வெல்லும்" என்றும் டேனிஷ் அலி குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடம் டெல்லியின் டேனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி, ஆதரவு தெரிவித்தனர். 

வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, வெறுப்பை அன்பின் மூலம் வீழ்த்த வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.  அத்துடன், தாம் செல்லும் இடங்களில் எல்லாம் அன்பின் கடையை திறந்து மக்கள் மத்தியில் அன்பு விதையை விற்பனை செய்து வந்தார். ஏழை காய்கறி வியாபாரி, பஞ்சாப் விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில் சுமைத் தூக்கும் கூலி தொழிலாளர்கள், பழைய டெல்லியில் சிறிய ஓட்டல் வணிகர்கள், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ராகுல் காந்தி, தனது அன்பை வெளிப்படுத்தினார். 

ராகுல் காந்தியின் இந்த செயல் சிலருக்கு வினோதமாக இருக்கும். ஆனால், தற்போது நாட்டில் நடைபெற்று வரும் வெறுப்பு கலாச்சாரச் சம்பவங்களை உற்று கவனித்தால், மக்கள் மத்தியில் எப்படி வெறுப்பு விதைக்கப்பட்டு, வளர்க்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்து கொள்ளலாம். இத்தகையாக நெருக்கடியான சூழ்நிலையில், வெறுப்பு சந்தையில் ராகுல் காந்தி தொடங்கியுள்ள அன்பின் கடை நாட்டு மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். நாடு முழுவதும் மக்கள் வெறுப்பை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். வெறுப்பை ஒதுக்கிவிட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடையே அன்பை செலுத்த நாட்டு மக்கள் தற்போது தயாராகி வருகிறார்கள். எனவே நாமும், அனைத்து பகுதிகளிலும் அன்பின் கடையை திறந்து அனைவரிடமும் உண்மையான சகோதரத்துவம், நேசம், நட்பு, பாசத்துடன் அன்பை வெளிப்படுத்தி, நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: