Friday, September 1, 2023

இந்தியா கூட்டணி....!

நம்பிக்கை தரும் இந்தியா கூட்டணி....! 

சரியான பாதையில் பயணம் தொடங்கியது....!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஓர் அணியில் திரண்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்  இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆக்ஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்று ஆகிய தேதிகளில் மும்பையில் மிக நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது.  பாட்னா, பெங்களுரூவை தொடர்ந்து மும்பையில் நடந்த இந்த மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைந்ததால், அதன் பலம் 28ஆக உயர்ந்துள்ளது. 

தலைவர்கள் பேச்சு:

மும்பை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் நாட்டில் பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் என  கருத்து தெரிவித்தனர்.  கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொய்களையும், அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக கொண்டு பாஜக ஆட்சி நடத்தி வருவதாக கூறினார். ஏழை, எளிய மக்களுக்கு ஒன்றிய பாஜக ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். எனவே, இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை காக்கும் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

இதேபோன்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் குழித்தோண்டி புதைத்துவிட்டு, சர்வாதிகார போக்கில் சென்றுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். 

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியில் 60 சதவீத மக்கள் தொகையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக உள்ளது என குறிப்பிட்டார். அனைவரும் ஒன்றுபட்டால், பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறினார். ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியால் நாட்டுக்கு எந்த பலனுக்கும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். வரும் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாகவும், உறுதியாகவும் கூறினார். 

முக்கிய தீர்மானங்கள்:

வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து போட்டியிடுவது என்றும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி வரும் 30ஆம் தேதிக்குள் இறுதி செய்வது என்றும் பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்துவது என்றும் மும்பை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒன்றுபடும் பாரதம், வெற்றி பெறும் இந்தியா என்ற கருத்து உருவாக்கப்பட்டு, அதை நாடு முழுவதும் மக்கள் மனங்களில் பதிய வைக்கவும் பிரச்சாரங்களை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குழுக்கள் அமைப்பு:

இந்தியா கூட்டணியின் பணிகளை விரைவுப்படுத்த ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் வியூக குழு, பிரச்சாரக் குழு, சமூக ஊடகங்களுக்கான பணிக்குழு, ஊடகத்திற்கான பணிக்குழு, ஆராய்ச்சிக்கான பணிக்குழு, என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலை மிகச்சிறந்த முறையில் சந்திப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை தரும் இந்தியா:

பாட்னா, பெங்களூருவைத் தொடர்ந்து, மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் இந்த மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. இந்தியா கூட்டணி குறித்து மக்கள் மத்தியில் பாஜகவால் போலியாக உருவாக்கப்பட்ட குழப்பங்கள் களையப்பட்டு, ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒன்றிய பாஜக ஆட்சியால் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட, நாட்டு மக்கள், பாஜகவிற்கு மாற்றாக ஓர் நல்ல அரசியல் களம் அமையாதா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், தற்போது, இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது பணிகளை தொடங்கியுள்ளது. மும்பை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் இனி வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலை மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அத்துடன், பாஜகவின் உண்மையான முகத்தையும், ரூபத்தையும் நாட்டு மக்கள் தற்போது உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், தென்மாநிலங்களைப் போலவே, வட மாநிலங்களிலும் பாஜக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வெறுப்பை மூலதனமாக வைத்து, அரசியல் செய்யும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, நாட்டு மக்களும் உறுதியாக இருப்பது சமூக ஊடங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் உறுதி அளிக்கின்றன. 

சரியான பாதையில் பயணம்:

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தற்போதைய நிலையில் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு, நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்டு, ஒருங்கிணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின்  விமர்சனங்கள் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்தியா கூட்டணியை சிதைக்க பல்வேறு திட்டங்களை பாசிச அமைப்புகள் செயல்படுத்தும் என்பது உறுதி. 

இதனை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேலும் உறுதியாக செய்ய வேண்டும். தற்போது நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி தனது பணிகளை உடனடியாக மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சரியான பாதையை வகுத்துக் கொண்டு, சரியான வழிக்காட்டுதலுடன் பயணித்தால், இந்தியா கூட்டணிக்கு வரும் தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயம் மகத்தான ஆதரவை அளித்து, மிகப்பெரிய வெற்றியை தேடித்தருவார்கள் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: