Friday, September 29, 2023

இந்து சகோதரி வெளிப்படுத்திய அன்பு.....!

 

கேரளாவில் நடந்த மீலாது விழா ஊர்வலத்தில்

இந்து சகோதரி வெளிப்படுத்திய அன்பு.....! 

மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடு என

குவியும் பாராட்டுகள்...!!

 

நாடு முழுவதும் கடந்த 28ஆம் தேதி மீலாது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாளில், முஸ்லிம்கள், அனைத்து மத சகோதரர்களுக்கும், தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், உணவுகளை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இது அனைவரின் பாராட்டை பெற்றது.

கேரளாவில் மனித நேயம்:

இதேபோன்று, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மீலாது விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து அனைத்து சமுதாய மக்களுக்கும் எடுத்துக் கூறும் வகையில் முஸ்லிம்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில் மலப்புரம் வலியாடு பகுதியில் உள்ள மதரஸா மாணவர்கள் கலந்துகொண்ட, மீலாது பேரணி நடைபெற்றது. இதில் கம்பீரமான நடையில் மாணவர்கள் அணிவகுத்து சென்றது அனைவரையும் கவர்ந்தது. கொட்டும் மழையிலும் மதரஸா மாணவர்களின் அணிவகுப்பை சாலையோரங்களில் நின்று ஏராளமானோர் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது பேரணியை கண்டு மகிழ்ச்சி அடைந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஷீனா கருவந்தோடி என்ற பெண்மணி, திடீரென, சாலையை கடந்து, பேரணியை தலைமை ஏற்று நடத்திச் சென்ற மதரஸா மாணவர் ஹாதி ஷாமிலுக்கு ரூபாய் நோட்டு மாலையை அணிவித்து, கன்னத்தில் அன்பாக முத்தமிட்டு, தனது மனிதநேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

குவியும் பாராட்டுகள்:

இந்த மனிதநேய, மத நல்லிணக்க சம்பவத்தின், காணொலி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. அத்துடன், தொலைக்காட்சிகளும் சகோதரி ஷீனாவின் அழகிய செயலை செய்தியாக வெளியிட்டு, மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்திற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என கருத்துகளை வெளியிட்டனர்.

இதையடுத்து ஒரு அழகிய செயல்மூலம், கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும்  மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சகோதரி ஷீனா தற்போது உருவெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ஷீனாவின் ஒன்றுவிட்ட சகோதரி, கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றும், அதை தான்  தனது சகோதரி அன்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது இளம் வயது முதல் ஷீனா, மீலாது பேரணிகளை கண்டு வளர்ந்து வந்ததாகவும், அப்போது ஊர்வலத்தில் பங்கேற்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வகையில், எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பதாகவும், அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார். அந்த கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் பாராட்டு:

சகோதரி ஷீனா, முஸ்லிம் மதரஸா மாணவர்கள் மீது வெளிப்படுத்திய இந்த அன்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது அலுவலத்தின் சக ஊழியராக பணிபுரியும் முகமது நிப்ராஸ் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீலாது பேரணிகள் நடத்தப்பட்டதாகவும், அந்த பேரணிகளில் மதரஸா மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், முகமது நிப்ராஸ் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்து சகோதரி ஷீனாவின் அழகிய செயல் இப்போது நாடு முழுவதும் சிறந்த முறையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது நிகழும் சம்பவங்களை கவனிக்கும்போது,  கேரளா மாநிலம் சகோதரி ஷீனா மூலம் நல்ல ஓர் அழகிய மத நல்லிணக்கத்தை நாட்டிற்கு எடுத்துக் கூறி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

No comments: