Friday, December 22, 2023

ஜனநாயகம்.....!

ஜனநாயகம் காப்போம்....!

அண்மையில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பாஜகவின் செயல்பாடுகளில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கர்வத்துடன் கூடிய ஒரு மகா துணிச்சல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,  ஒன்றிய பாஜக அரசு தங்களை இனி யாருமே வீழ்த்த முடியாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் நாள்தோறும் நாட்டு மக்களின் முன் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஒன்பதரை ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் வெறும் வெற்று முழக்கங்களே நாட்டு மக்களுக்கு பரிசாக கிடைத்து வந்தன. நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் தான் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது அரையுறுதி தேர்தலாக கருதப்பட்ட 5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றவுடன், அக்கட்சியின் தலைவர்கள் அனைவரும் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர். 

கேள்விக்குறியான ஜனநாயகம் :

நாட்டின் விடுதலைக்காக போராடி, சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகள் தற்போது முற்றிலும் குழித்தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு சிறிதும் மதிப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே தான், நாட்டில் தற்போது ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிட்டது என அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். 

ஜனநாயகம் குழித்தோண்டி புதைக்கப்பட்டதற்கு அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே சாட்சியாக இருந்து வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்  நடத்தப்பட்ட அதேநாளில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடடத்தில் மீண்டும் சிலர் அத்துமீறி நுழைந்து முழக்கங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடாளுமன்ற தாக்குதலில்  22ஆம் ஆண்டு நினைவுநாளில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து திடீரென அவைக்குள் குதித்த சாகர் சர்மா என்ற இளைஞர், எம்.பி.க்கள் பயன்படுத்தும் மேசைகள் மீது ஏறி ஓடத் தொடங்கினார். எம்.பி.க்கள், அவைக்காவலர்கள் என அனைவரும் அச்சமடைந்த நிலையில், பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்தார் மைசூரைச் சேர்ந்த மனோ ரஞ்சன் என்ற மற்றொரு இளைஞர். அவர் குதித்த வேகத்திலேயே கீழே விழுந்துவிட்டதால், அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அச்சத்தில் எம்.பி.க்கள் கூச்சலிட்ட நேரத்தில், தனது காலணிக்குள் மறைத்து வைத்திருந்த கேஸ் கேனிஸ்டரை எடுத்து கையில் பிடித்தபடி, அடக்குமுறை ஒழிக என முழக்கமிட்டார் முதலில் குதித்த சாகர் சர்மா. பிடிபட்ட இருவரையும் வெளியே கொண்டு வந்த நொடியில், நாடாளுமன்றத்தில் விஐபிக்கள் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டு அடக்குமுறை ஒழிக என முழக்கமிடத் தொடங்கினார்கள் நீலம், அமோல் ஷிண்டே என்ற இரண்டு பெண்கள். நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

மைசூரு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் ஒப்புதல் கடிதத்தோடு இரு இளைஞர்களும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.  பாஜக எம்பியின் பரிந்துரைக் கடிதத்தை பயன்படுத்தியே இருவரும் மக்களவையில் நுழைந்திருப்பதாக கூறியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.பி.க்கள் இடைநீக்கம்:


இந்த பாதுகாப்பு குளறுபடிக்கு பொறுப்பு ஏற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி குறித்து எந்த விளக்கமும் அளிக்க முன்வராத பாஜக ஆட்சியாளர்கள், மாறாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 150 பேரை கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தனர். இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்ற பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிறிதும் விரும்பவில்லை என்பது உறுதியாகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று ஜனநாயகம் காப்போம் என்ற முழக்கத்துடன் மத்திய அரசை கண்டித்து டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. 

ஜனநாயகம் காப்போம்:

டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் விடுதலைக்காக போராடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவை மாற்றிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் ஜனநாயக சிந்தனைகள் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் படுகுழிக்குள் போடப்பட்டு வருவதாக கூறினார். சர்வாதிகார போக்குடன் செயல்படும் பிரதமரின் நடவடிக்கைகளை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்காது என்றும் அதை உறுதியாக எதிர்க்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதேபோன்று, பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, அதை முடி மறைத்துவிட்டு, தேவையில்லாத மிமிக்கிரி பிரச்சினையை பாஜக கையில் எடுத்து, மக்களை திசை திருப்பி வருவதாக குற்றம்சாட்டினார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், ஒன்றிய பாஜகவின் சர்வாதிகார போக்கை கடுமையாக கண்டித்து பேசினர். 

அடிமைத்தனத்தை நோக்கி செல்லும் நாடு:

இதுஒருபுறம் இருக்க, நாடு தற்போது அடிமைத்தனத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ் திகாயத், குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள அவர், மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பும் எம்.பி.க்களை எப்படி இடைநீக்கம் செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி குறித்த உண்மைகள் நாட்டின் முன் வர வேண்டும் என்றும் திகாயத் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் தற்போது ஜனநாயகம் இல்லை என்றும், அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் குரல் எழுப்பும் சாமானியர் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும்,  எம்.பி.க்கள் குரல் எழுப்பினால், சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ள ராகேஷ் திகாயத், இதன்மூலம் நாடு அடிமைத்தனத்தை நோக்கி செல்வது உறுதியாக தெரியவருகிறது என்றும் சாடியுள்ளார். விவசாயிகள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், ஒன்றிய பாஜக ஆட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒன்றிய பாஜக அரசு தொழில் அதிபர்களுக்கான அரசு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

சர்வாதிகாரம் அழிவையே தரும்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை சர்வாதிகார திசையில் கொண்டு செல்வது மிகப்பெரிய அழிவை தரும் என்பதை பாஜக ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே உணவு என்ற சிந்தனைகள் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிற்கு ஒருபோதும் சரியாக இருக்காது. இந்திய மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, சாதி, மொழி, மதம், இனம் என பார்க்காமல், ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒற்றுமையுடன் இருக்கும் மக்கள் மீது சர்வாதிகாரம் திணிக்கப்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.  சர்வாதிகாரம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்பதை உலக வரலாற்றில் நடந்த சம்பவங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எனவேதான்,  வேண்டாம் சர்வாதிகாரம். காப்போம் ஜனநாயகம் என்ற முழக்கமே நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலாக தற்போது இருந்து வருகிறது. ஜனநாயக நெறிமுறைகளை காக்க தங்களது பங்களிப்புகளை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போதைய சூழலில் ஏற்பட்டு இருக்கிறது என்பதை நாட்டு மக்களும் உணர்ந்துகொண்டால், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளை யாராலும் அழிக்க முடியாது என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: