Saturday, December 23, 2023

திருப்தியுடன் வாழும் முஸ்லிம் சமுதாயம்....!

உலகிலேயே மிகவும் மன திருப்தியுடன் வாழும் முஸ்லிம் சமுதாயம்....!


உலகம் முழுவதும் சுமார் 900 கோடி பேர் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களில் முஸ்லீம்களின் மக்கள் தொகை மட்டும் 200 கோடியாக இருந்து வருகிறது. இந்தோனேஷியாவிற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்து வாழும் முஸ்லிம்கள், தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்களா...? நல்ல மன திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கிறார்களா...? என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. 

மதம் மக்களுக்காக இருப்பது, அவர்களுக்கு சொந்தமானது மற்றும் திருப்தி ஆகியவற்றை வழங்குகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. ஒருவர் மதத்துடன் ஒரு சக்திவாய்ந்த தொடர்பைக் கொண்டிருப்பது வாழ்க்கைத் திருப்தியின் உயர் மட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதைப் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  முஸ்லிம்களின் பொருளாதார நிலை, சமூக வாழ்க்கை, மார்க்கம் சார்ந்த நம்பிக்கை என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நாடுகளில் அவ்வவ்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாழ்க்கையில் முஸ்லிம்கள் திருப்தியுடன் வாழ்க்கிறார்களா என்பது குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல சுவையான நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. 

முஸ்லிம்கள் குறித்து ஜெர்மன் ஆய்வு:

ஜெர்மனியின் மேன்ஹெய்ம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 67 ஆயிரம் பேர் கலந்துகொண்டு, தங்களுடைய வாழ்க்கை முறை குறித்தும், நம்பிக்கை குறித்தும், அதன்மூலம் கிடைக்கும் திருப்தி குறித்தும் கருத்துகளை தெரிவித்தனர். ஆய்வில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்த இந்த கருத்துகளின் அடிப்படையில், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மன திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்பது குறித்து ஒரு பட்டியல் அதாவது அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையின்படி உலகில் மிகவும் மன திருப்தியுடன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

காரணம் என்ன?

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் திருப்தியுடன் வாழ காரணம் என்ன ? என்று ஆய்வு செய்தபோது,  முஸ்லிம்கள் மத்தியில் மிக உயர்ந்த ஒற்றுமை பண்பு இருந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இஸ்லாமிய வாழ்க்கை நெறி அறிவுறுத்தியப்படி, முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமை என்ற கயிற்கை பலமாக பிடித்துக் கொண்டு, தங்களுடைய வாழ்க்கையைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்களுக்கு நல்ல ஒற்றுமை உணர்வு கிடைப்பதாகவும், இதன்மூலம் மன ரீதியாக முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. 

இதேபோன்று,  ஓர் இறைக்கொள்கையில் இஸ்லாமியர்கள் மிகவும் உறுதியுடன் இருப்பதால், அவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு சண்டை, சச்சரவு ஏற்படுவதில்லை. இம்மை, மறுமை என்ற கோட்பாட்டில் முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இருப்பதால், அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புகிறார்கள் என்றும், பிறரை நேசித்து வாழ விரும்புவதாகவும் அதன்மூலம் முஸ்லிம்களின் குடும்பங்களில் மகிழ்ச்சி தவழ்வதாகவும் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

ஆராய்ச்சியாளர் கருத்து:

முஸ்லிம்களின் வாழ்க்கை முறை தொடர்பாக அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட ஆய்வில், முக்கிய ஆராய்ச்சியாளர் லாரா மேரி எர்டிங்கர்-ஸ்கான்ஸ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், "இந்த ஆய்வின் முடிவுகள் வாழ்க்கை திருப்தியில் ஓர் இறை நம்பிக்கை குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவை வெளிப்படுத்துகின்றன என்றும் மத நம்பிக்கைகளைக் கூட கட்டுப்படுத்துகின்றன " என்றும் கூறியுள்ளார். அத்துடன், முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்த நம்பிக்கைகள் மதத்தை விட மக்களின் வாழ்க்கை திருப்தியை அளிப்பதை உணர்த்துவதாகவும் லாரா மேரி குறிப்பிட்டுள்ளார். 

"ஒரு தெய்வீகக் கொள்கை, வாழ்க்கை, உலகம், பிற மக்கள் அல்லது செயல்பாடுகளுடன் ஒன்றாக இருப்பது போன்ற உணர்வு" ஆகியவை முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும், அது அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலித்து, நல்ல ஒரு திருப்தியை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தாம் நேரில் கண்டு வியப்பு அடைந்தாகவும் லாரா மேரி குறிப்பிட்டுள்ளார். 

"உலகில் உள்ள அனைத்தும் இணைக்கப்பட்டவை மற்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்ற எண்ணம்" என்று ஓர் இறைக் கொள்கையை வரையறுக்கிறது. எந்த ஒரு மதத்திலும் குறிப்பாக கவனம் செலுத்தாமல் ஒற்றுமைக்கும் அதிக வாழ்க்கை திருப்திக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய ஆய்வை மேற்கொண்டதாக கூறியுள்ள டாக்டர் எடிங்கர்-ஸ்கோன்ஸ் . இருப்பினும், களப்பணியின் போது, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை விட முஸ்லிம்கள் வாழ்க்கைத் திருப்தியில் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்ததாக கூறியுள்ளார். 

ஓர் இறை நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிக திருப்தி அடைந்துள்ளனர் என்றும், ஆண்களை விட பெண்கள் ஒற்றுமையில் நம்பிக்கை வைப்பதில் கணிசமான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் தாம் கண்டறிந்ததாக குறிப்பிட்ட லாரா மேரி, குறைந்த வருமானம் உள்ளவர்களை விட நடுத்தர முதல் உயர் வருமானம் உள்ளவர்கள் கொள்கையுடன் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சிந்திக்க வைக்கும் ஆய்வு:

ஜெர்மனி ஆராய்ச்சியாளரின் இந்த ஆய்வு முடிவுகள், முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது என்றே கூறலாம். உலகில் வாழும் முஸ்லிம்கள் இடையே நாடு, மொழி, கலாச்சாரம் என பல்வேறு வகையில் வேறுபாடுகள் நிலவி வந்தாலும், கொள்கை சார்ந்த கோட்பாட்டியில் அவர்கள் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக, ஓர் இறைக் கொள்கை, மறுமை, அனைத்து படைப்புகள் மீதும் அன்பு செலுத்தும் பண்பு, ஒற்றுமையாக வாழும் குணம் என பல நிலைப்பாடுகளில் முஸ்லிம்கள் மத்தியில் நல்ல புரிதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காக, முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் அமைப்புகள் இடையே பிரச்சினைகள் இருந்து வருவதை நாம் மறைக்க முடியாது. ஆனால், வாழ்க்கை திருப்தி என்ற நிலை வரும்போது, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, முஸ்லிம்கள் மத்தியில் சற்று அதிகம் என்றே கூறலாம். அதற்கு ஓர் இறைநம்பிக்கையுடன் கூடிய அச்சம், இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் என கூறிக் கொண்டே போகலாம். அதன் காரணமாக தான், கனமழை, வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் முஸ்லிம் சமுதாயம் ஏக இறைவனுக்கு அஞ்சி, அவனுடைய திருப்தி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், சமுகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதன்மூலம் முஸ்லிம்கள் நல்ல திருப்தியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்க்கிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: