Thursday, December 21, 2023

மோசமான பாதையில்.....!

மிகவும் மோசமான பாதையில் பயணிக்கும் இந்திய ஊடகங்கள்....!


ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை இருந்து வருகிறது. நாட்டில் நடக்கும் அநீதிகளை, அக்கிரமங்களை,  தட்டிக் கேட்கும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு. இதன் காரணமாக தான், ஊடகத்துறையில் ஒருவர் பணிபுரிந்தால், அவருக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. அநீதிக்கு எதிரான நல்ல எழுத்துக்கள் பலரது அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்து இருக்கிறது என்பது வரலாறு. இதேபோன்று, ஊடகத்துறையின் நல்ல சிந்தனைகள், பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் வரலாறுதான். 

உண்மையைச் செய்திகளை, எந்தவித தயக்கமும் அச்சுறுத்தலும் இல்லாமல் தர வேண்டியது ஒரு பொறுப்பான நல்ல ஊடகத்தின் தலையாயப் பணி. அந்த ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து ஊடகவியலாளர்களும் அறம் சார்ந்த பணிகளை ஆற்ற வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஆனால், தற்போது இந்திய ஊடக உலகம் மிகவும் மோசமான பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஊடகங்கள் மீது மக்களுக்கு இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. 

கண்டுகொள்ளாத ஊடகங்கள்:


ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைய உள்ளன. இந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்த நல்ல பணிகள் என்ன? அதன்மூலம் மக்களுக்கு எந்தளவுக்கு பலன் கிடைத்து இருக்கிறது? நாட்டின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறதா? வேலைவாய்ப்புகள் பெருகி, இளைஞர்கள் நல்ல பணிகளில் அமர்த்தப்பட்டார்களா என கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. இதுகுறித்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. அதேநேரத்தில் அரசுக்கு அடிபணிந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 

வேலையில்லா திண்டாட்டம் குறித்து எந்தவித விவாதங்களும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படுவதில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் எந்தவித கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. பிரதமர் நரேந்திர மோடி, ஏன் செய்தியாளர்களின் சந்திப்பை நடத்துவது இல்லை என எந்த ஊடகமும் கேள்வி எழுப்புவதில்லை.  அதேநேரத்தில், மக்களுக்கு சிறிதும் பலன் அளிக்காத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு, விவாதங்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதார வல்லுநர்களின் நேர்காணல்களை தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்ப மறுக்கின்றன. ஆனால், ஒரு நடிகர், அல்லது நடிகை குறித்து நேர்காணல்கள் பல மணி நேரம் ஒளிப்பரப்படுகின்றன. 

இதேபோன்று, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்தும் அதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் எந்த தொலைக்காட்சி சேனல்களும் விவாதங்களை நடத்துவதில்லை. மாறாக, பெண்களுக்கு எதிராக குற்றம் செய்து தண்டனை பெற்று, சிறையில் இருந்து வெளிவரும் குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை தரும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.  இதன்மூலம் இந்திய ஊடகங்கள் எந்த திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ளலாம். 

வேடிக்கை பார்க்கும் ஊடகங்கள்:


கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் போது, மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வண்ண குப்பிகளை வீசி அட்டகாசம் செய்தனர். இப்படி செய்தவர்களை மக்களவை உறுப்பினர்கள் சிலர் பிடித்து, காவலர்களிடம் ஒப்படைத்தனர். மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள், எப்படி இளைஞர்கள் நுழைய முடியும். பாதுகாப்பு குளறுபடியால், மற்றும் அரசின் மெத்தன போக்கால் ஏற்பட்ட சம்பவம் இது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

இந்த சம்பவம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், விளக்கம் கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர், நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டன பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தின. 

ஆனால், ஜனநாயகம் காப்போம் என குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகளை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, மாநிலங்களவை தலைவர் ஜெகதீஷ் தங்கர் குறித்து மிமிக்கிரி செய்த உறுப்பினரின் செயலை பெரிய செய்தியாக வெளியிட்டு, ஊடகங்கள் தாங்கள் மத்திய அரசின் அடிமைகள் என்பதை நிரூபித்தன.

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி குறித்தோ, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனநாயக படுகொலை குறித்தோ  இந்திய ஊடகங்கள் விவாதங்களை நடத்தவில்லை. இந்த செயல் ஊடகங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம். மத்திய அரசின் ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்த்த ஊடகங்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இப்படி நிறைய சம்பவங்களை கூறிக் கொண்டே போகலாம். 

மோசமான பாதையில் பயணம்:


தற்போதைய நிலையில், ஒருசில ஊடகங்களை தவிர பெரும்பாலான ஊடகங்கள், மத்திய அரசுக்கு பயந்து அநீதியை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து மிகவும் மோசமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியதை போல், ஊடகங்கள் நீதி, நேர்மைக்கு மாறாக தங்களது பணிகளை ஆற்றி வருகின்றன. இதனால் தான் இத்தகையை ஊடகங்களை மக்கள் கோதி மீடியா என தற்போது அழைத்து வருகிறார்கள். 

தப்பி தவறி, ஒருசில ஊடகங்கள் தைரியாக செய்திகளை வெளியிட்டால், அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அல்லது அந்த ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை, வருமான வரித்துறை சோதனை என பல மிரட்டல்களை நல்ல ஊடகங்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது நாட்டில் இருந்து வருகிறது. எனவே தான் மோசமான பாதையில் பயணித்தால் கூட பரவாயில்லை என முடிவு எடுத்துவிட்டு, அநீதியை தட்டிக் கேட்காமல், ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே அதிகளவு ஊடகங்களில் வருகின்றன. எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும், அதை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. 

மாற்றமே நம்பிக்கையை தரும்:

தற்போதைய சூழ்நிலையில், ஊடகங்கள் மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், ஊடங்கங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் ஆதரவு ஊடகம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெளியே வந்து, ஒரு ஊடகம் எப்படி நேர்மையாக, துணிச்சலாக, வெளிப்படையாக, யாருக்கும் அஞ்சாமல் செயல்பட வேண்டுமோ, அதுபோன்று, இந்திய ஊடகங்கள் செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இந்திய ஊடகங்கள் குறித்து தற்போது உலக மக்கள் மத்தியில் இருக்கும் பார்வை மாறும். உண்மையான மாற்றமே, மக்களின் நம்பிக்கையையும், மதிப்பையும் பெற முடியும் என்பது உணர்ந்துகொண்டு, இந்திய ஊடகங்கள் இனி செயல்பட வேண்டும். மாறாக குப்பையான செய்திகள், விவாதங்கள், நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் நடத்தினால், ஊடகங்கள் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் மதிப்புக் கூட, இனியும் இல்லாமல் போகும். மாற்றமே நம்பிக்கையை தரும் என்பதை உணர்ந்து இந்திய ஊடகங்கள் செயல்பட்டால், ஊடகத்துறை மிக ஆரோக்கியமான துறையாக மீண்டும் மாறும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: