Sunday, December 31, 2023

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்....!!

போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாத பாரம்பரிய சுன்ஹாரி பாக் மசூதியை ஒருபோதும் அகற்ற கூடாது...!

புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்....!!


புதுடெல்லி, ஜன02- டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சுன்ஹாரி பாக் பள்ளிவாசல், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என காரணம் கூறி, அதனை அகற்றும் நடவடிக்கைகளை புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை  ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் என்.டி.எம்.சி. சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முஸ்லிம்கள் உட்பட ஏராளமானோர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இ.யூ.முஸ்லிம் லீக் கடிதம்:

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான இ.டி.முஹம்மது பஷீர்,  புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலின் தலைமை கட்டிடக் கலைஞர் அசோக்குமார் திமானுக்கு, சுன்ஹாரி பாக் மசூதி விவகாரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாரம்பரியமான சுன்ஹாரி பாக் மசூதியை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாத வகையில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலை ஒருபோதும் இடிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இ.டி.முஹம்மது பஷீர் வேண்டுகோள்:

தலைமை கட்டிடக் கலைஞருக்கு இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், சுன்ஹரி பாக் மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், என்.டி.எம்.சி.யின் உத்தரவாதத்தின் பேரில், மசூதி இடிக்கப்பட மாட்டாது என நீதிமன்றம் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டு அதுதொடர்பாக ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருப்பது வியப்பு அளிப்பதாகவும் பஷீர் தெரிவித்துள்ளார். என்.டி.எம்.சி. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், 8 நாட்களாக அவகாசம் அளித்து, மசூதியை இடிக்க சட்டப்பூர்வ பாதுகாப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

பாரம்பரிய நினைவு சின்னம்:

புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலின் முக்கிய நோக்கம் மசூதியை இடிப்பதைத் தவிர, போக்குவரத்தை சீர்படுத்துவது இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள பஷீர், சுன்ஹாரி பாக் மஸ்ஜித், டெல்லியில் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் வக்ஃப் மட்டுமல்ல என்றும், என்.டி.எம்.சி.யால் அறிவிக்கப்பட்ட 141 பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். சுன்ஹேரி மஸ்ஜித் வழிப்பாட்டு தளங்கள் தொடர்பாக 1991 சட்டத்தின் பாதுகாப்பைக் கொண்ட ஒரு நடைமுறை மசூதி என்றும், மசூதிக்கு அருகாமையில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

மசூதியை ஏன் இடிக்கக் கூடாது:

மேலும், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் இடிக்காமல் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான தனது கருத்துக்களையும் முஹம்மது பஷீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், மசூதி ரவுண்டானாவிற்குள்ளேயே அமைந்துள்ளது என்றும், அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மசூதியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால், அவர்களிடம் இருந்து எந்த ஆலோசனைகளும், ஆட்சேபனைகள் வர வாய்ப்பு இல்லை என்றும் பஷீர் கூறியுள்ளார். இந்த மசூதியில் மிகப்பெரிய அளவுக்கு கூட்டம் வருவதில்லை என்றும், வெள்ளிக்கிழமைக் கூட, சமாளிக்கும் வகையில் மட்டுமே தொழுகையாளிகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த புகாரும் வராத நிலையில் மசூதியை இடிக்க முயற்சி செய்வது அநீதி என்றும், தேவைப்பட்டால், எதிர்காலத்தில், நடைபாதையில் இருந்து சுரங்கப்பாதை வசதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

மசூதிக்கு அருகாமையில் இதுபோன்ற இரண்டு சுற்றுச் சாலைகள் உள்ளன என்றும், துக்ளக் சாலையில்  அக்பர் சாலை சந்திப்பு, கிருஷி பவன் மற்றும் ஜன்பத் -மோதிலால் நேரு சாலை சந்திப்பு, உள்ளது என்றும், அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்தாலும், அந்த ரவுண்டானாக்களுக்கு கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான அத்தகைய முன்மொழிவு இல்லை என்றும் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சுற்றுவட்டத்தின் உள்ளே அமைந்துள்ள மசூதியை பாதுகாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கேள்விக்குரிய பொது அறிவிப்பு பாரம்பரிய பாதுகாப்பு குழு (எச்.சி.சி.) இருக்க முடியும் என்றும், ஆனால்,  பாரம்பரியச் சின்னமாக இருக்கும் மசூதியால் அப்படி எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முஹம்மது பஷீர், எனவே, சுன்ஹாரி பாக் பள்ளிவாசலை இடிக்காமல் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.

- தகவல்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: