Wednesday, December 27, 2023

இந்தியர்கள் ஆர்வம் ....!

தங்கம், வங்கி முதலீடுகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்கள்....!

ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் சம்பாதிக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. இப்படி சேமிக்கும் பணம், மருத்துவச் செலவு, திருமணச் செலவு, சுற்றுலாப் பயணம் என பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. சேமிக்கும் பழக்கம்  பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிடுவதில்லை. ஒரு சுய கவுரவத்துடன் வாழ வழி காட்டுகிறது. இதன் காரணமாக தான், அரசுகளும் சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கின்றன.  

இதேபோன்று, குடும்பங்களிலும் தங்களது பிள்ளைகளிடம் சேமிப்பு பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும் பணம் உண்மையிலேயே எதிர்கால தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்கின்றன என்று உறுதியாக கூறலாம். 

இந்தியர்கள் ஆர்வம்: 


பொதுவாக இந்தியர்களிடையே, சேமிப்பு பழக்கம், பண்டைக்காலத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சரி, இந்தியர்கள் எந்தவகையில் தங்களது வருவாயை சேமிக்கிறார்கள் என ஆராய்ந்தால் பல சுவையாக தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, தங்கம், மற்றும் வங்கி முதலீடுகளில் சேமிப்பதை இந்திய மக்கள் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதேபோன்று, இந்திய பெண்மணிகள் மத்தியில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. 

ஆய்வில் தகவல்:

இந்நிலையில், இந்தியர்கள் இடையே இருக்கும் சேமிப்பு பழக்கம் தொடர்பாக நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு கேள்விகள் மக்கள் முன்பு வைக்கப்பட்டன. அவர்கள் எந்த திட்டங்களில் சேமிக்க ஆர்வம் கொள்கிறார்கள். தங்கம், வங்கி முதலீடு ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளதாக போன்ற வினாக்கள் ஆய்வில் கலந்துகொண்ட மக்களிடம் வினவுப்பட்டது. 

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த பெரும்பாலான மக்கள், தங்கம் மற்றும் வங்கி டெபாசிட்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் சுமார் 77 சதவீத குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பை வங்கி வைப்பு மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புவதாக கூறியுள்ளனர். இதன்மூலம் தங்கம் மற்றும் பாரம்பரிய வங்கி டெபாசிட்கள் மீதான இந்தியர்களின் நாட்டம் மாறாமல் உள்ளதை அறியமுடிகிறது. 

அவசர தேவைக்காக சேமிப்பு:


இதேபோன்று, 22 சதவீத இந்தியர்கள் எதிர்பாராத மருத்துவ அவசரநிலை காரணமாக தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், 56 சதவீத இந்திய குடும்பங்கள் வேலை இழப்பு குறித்த அச்சத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர். அடுத்த ஆறு மாதங்களில் மூன்று சதவீத குடும்பங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், 10 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் வாங்கப் போவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்த கணக்கெடுப்பின்படி, 53 சதவீத குடும்பங்களுக்கு இன்னும் உடல்நலக் காப்பீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சதவீதம் முந்தைய ஆண்டை விட 3 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கூடுதலாக, 2022-இல் 6 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை தற்போது 10 சதவீத இந்திய குடும்பங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

 சவால்களுக்கு மத்தியில் கனவு: 

இந்திய மக்கள் அனைவரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு நிலைப்பாடுகளை எதிர்கொண்டு, வாழும் மக்கள், வேலையில்லா திண்டாட்டம், தொழில் பாதிப்பு, வருவாய் குறைவு என ஏராளமான நெருக்கடிகளை நாள்தோறும் சந்தித்து வருகிறார்கள். இதனால், நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் வருவாய் மிகப்பெரிய அளவுக்கு உயரவில்லை என்பது நிதர்சன உண்மையாகும். 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சராசரி மாத குடும்ப வருமானத்தின் அடிப்படையில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று, கர்நாடகா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இந்தியர்கள் மத்தியில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது என்றும், அந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: