Tuesday, December 26, 2023

வேண்டாம் மெத்தனம்....!

மெத்தனம் வேண்டாம்....!

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் ஈடுபாடு, அவர்களின் குரல்களை வலுப்படுத்துவதிலும், ஜனநாயக செயல்முறைக்குள் அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை திறம்பட முன்வைப்பதிலும் மிகவும் அவசியம். அதற்காக, வாக்களிக்கும் நாளில் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்து, தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான ஜனநாயகத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் முக்கிய விஷயமாகும். 

ஆனால், சிறுபான்மையின மக்களிடையே, குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேடுப்பது குறித்த அலட்சியப் போக்கு அல்லது மெத்தனம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகதான், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய அவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வரும் என்பதையும் முஸ்லிம் சமுதாயம் இன்னும் உணர்ந்துகொள்வதில்லை. 

கவனம் மிகவும் தேவை:

நாடு தற்போது சென்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையை பார்த்தால், எதிர்க்காலத்தில் அடையாள அட்டைகள் பெறாத மக்கள், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.  எனவே, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, பணிபுரியும், அலுவலக நிறுவனத்தின் அட்டை, வீட்டு முகவரி அட்டை போன்ற முக்கியமான அனைத்து அடையாள அட்டைகளையும் நாம் அனைவரும் பெற்று கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று, வங்கிக் கணக்கு வைத்து இருப்பவர்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களையும் கட்டாயம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து பாசிச கும்பம் பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நமக்கு மிகமிக அவசியமான அடையாள அட்டைகளை எந்தவித சிரமம் அடைந்தாலும், அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அலட்சியம், மெத்தனம் வேண்டாம்:

முக்கியமான அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதில் தங்களிடம் இருக்கும் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கை முஸ்லிம்கள் உடனே கைவிட வேண்டும். அந்த அடையாள அட்டைகள் மூலம் எந்தவித பலன்களும் இல்லை என நினைத்தாலும் கூட, அதைப் பற்றி கவலைப்படாமல், முக்கியமான அனைத்து வகையான அடையாள அட்டைகளையும் பெற்றுக் கவனத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி, அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் அடையாள அட்டைகள் பெற்றுக் கொண்டு, கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

விழிப்புணர்வு பிரச்சாரம்:

முஸ்லிம் அமைப்புகள், சமூக நிறுவனங்கள், முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் என அனைத்து வகையான நல்ல உள்ளம் கொண்ட நிறுவனங்கள், அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுகொள்வதின் அவசியம் குறித்து அவர்கள் உடனடியாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து, முஸ்லிம்கள் மத்தியில் அதன் முக்கியத்துவம் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், தங்களது வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு முக்கியமானது, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதா, இல்லையா என்பதை அவர்கள் முதலில் அறிந்துகொண்டு, அப்படி இல்லையெனில், தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும். குடும்பத்தில், வாக்களிக்க உரிமை பெற்ற அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும் குடும்பத் தலைவர்கள் சரி பார்த்து, இல்லையெனில், அவர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க கால அவகாசம் அளித்துள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு உடனடியாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை கட்டாயம் சேர்க்க முன்வர வேண்டும். 

சமூக அமைப்புகளின் முயற்சி:

மகாராஷ்டிராவில் ரஹ்மான் அறக்கட்டளை என்ற அமைப்பு முக்கிய நிறுவனமான ஸ்டாஸ் பவுண்டேஷனுடன் இணைந்து,  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு உதவும் நோக்கத்துடன், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. 

ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் ஸ்டார் அறக்கட்டளை ஆகியவை பல்வேறு சமூக மற்றும் அரசியல் குழுக்களுடன் இணைந்து விரிவான பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றன. இந்த நிகழ்வுகள் குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம், நடைமுறைகள் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்களிக்கும் செயல்முறை, அதன் நன்மைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான அதன் முக்கியத்துவம் குறித்தும் முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சம், உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் பல்வேறு சிறுபான்மை குழுக்களிடையே இணைப்புகளை எளிதாக்குவதாகும்.   முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு அமைப்புகளும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 

ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் ஸ்டார் அறக்கட்டளையின் இந்த முயற்சி, மகாராஷ்டிராவில் உள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படியாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் சமூகங்களை ஜனநாயக செயல்முறையில் ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்த பிரச்சாரத்தின் வெற்றி சிறுபான்மை சமூகங்களுக்கு இன்றியமையாதது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும். 

நாடு முழுவதும் விழிப்புணர்வு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய முயற்சி, நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் அமைப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே எஞ்சியுள்ளதால், இந்த பணிகளை விரைப்படுத்த வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு சிறுபான்மையின மக்களிடையே தேர்தல் ஜனநாயக நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறி போகாமல் இருக்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம் என்பதை சமுதாயம் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும். அதன்முலம் மட்டுமே நாட்டில் நல்ல மாற்றதை ஏற்படுத்த முடியும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: