Monday, December 25, 2023

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி....?

திருமண வாழ்வில் உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி....?


இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளில் திருமணம் செய்வது ஒரு அழகிய சுன்னாவாகும்.  திருமணத்திற்குப் பிறகுதான் ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது. திருமணத்திற்குப் பிறகு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பதாக கூறப்படுகிறது, பொதுவாக அது அவரது மனைவி என கருதப்படுகிறது, அதேநேரத்தில், வெற்றியில் இருந்து தோல்விக்கு செல்லும் ஒவ்வொரு நபரின் பின்னாலும் ஒரு பெண்ணின் கை உள்ளது என்ற கருத்தும் இருந்து வருகிறது. குறிப்பாக, அந்த பெண் ஒருவரின் மனைவி என்றும் வழக்கமான கருத்து நிலவுகிறது. எனவே, திருமணத்திற்குப் பிறகு, வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால், ஆண், பெண் இருவரும் நல்ல புரிதலுடன் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டும். அதன்மூலம், ஆணின் தோல்விக்கு பெண் காரணம் என்ற குற்றச்சாட்டை உடைத்து எறியலாம். 

தவிர்க்க வேண்டிய அம்சங்கள்:


கணவனின் வெற்றிக்குக் காரணமான மனைவி, அவனுக்குத் துணையாக, அவர்களின் துயரங்களில் துணை நிற்கும் நம் சமூகத்தில், கணவன் வாழ்க்கையை அவலப்படுத்தும் சில மனைவிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனைவிகளால், ஒருவரின் முன்னேற்றம் என்பது வெற்றி ஏணியில் ஏறுவது கடினமாக மட்டுமல்ல, ஒருவரின் நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் கடினமாகிறது. இதன் காரணமாகதான் கணவன்மார்கள், எப்போதும் தங்கள் மனைவிகள் உளவு பார்ப்பதைத் தவிர்க்கவும், அவர்களின் தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்குரிய பழக்கங்களிலிருந்து விடுபடவும் வழிகளைத் தேடுகிறார்கள். 

கணவன் மீது சந்தேகம் கொள்ளும் பழக்கம் என்பது ஒரு நோயாகும். இந்த நோய் பல பெண்களிடம் காணப்படுகிறது. சில சமயங்களில் இந்த நோய் குணப்படுத்த முடியாத நோயாக மாறுகிறது. சந்தேகம் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான மனைவிகள், தங்கள் கணவர்களை எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல பழக்கங்களைக் குறைத்து மதிப்பிடவும் தொடங்குகிறார்கள். கணவன் ஒரு விதவைக்கு உதவி செய்தாலோ, தொண்டு செய்தாலோ, ஒரு பெண்ணைப் புகழ்ந்தாலோ, ஒரு பெண் தனது கணவனைப் புகழ்ந்தாலோ, அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கணவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஆர்வம், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார் என தேவையில்லாமல் இவர்களே கற்பனை செய்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக கணவனின் பெண் முதலாளி, செயலாளர், பக்கத்து வீட்டுப் பெண்கள், அவர் சந்திக்கும் மற்ற பெண்களை மனைவிமார்கள் உளவுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும், கணவனுக்கு தன்னைப் பற்றி சிறிதும் கவலை இல்லை, அக்கறை இல்லை என நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தாமதமாக வீட்டிற்கு வந்தால், குறைவாக சாப்பிட்டால், கணவன் வேறு பெண்களிடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேக மனநிலையில் ஒரு மனைவி முதிர்ச்சி அடைந்து அந்த எண்ணத்துடனே வாழ்ந்து வருகிறார். இது ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் விரும்பாமல் பிரிந்து செல்ல விரும்பும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துவிடுகிறது. ஆரம்பத்தில் இந்த முடிவு மகிழ்ச்சியையும், திருப்தியை தரும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில், இது மிகப்பெரிய ஆபத்துகளை கணவன்-மனைவிகளிடையே ஏற்படுத்தி விடுகிறது என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 

பிரிவுனைக்குப் பிறகு வாழ்க்கை:


திருமண உறவு முறிந்தபிறகு கணவன், மனைவியை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறான். அவன் வேறொரு நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், ஒவ்வொரு பெண்ணிலும் அவன் கற்பனை செய்யும் மனைவி, அவனுக்கு அரிதாகவே காணப்படுகிறாள்.  இதேபோன்று, திருமண உறவை முறித்துக் கொண்ட பெண்,  தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளையும் இழந்துவிட்டு தனியாகக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறாள்.  இதனால், வாழ்க்கையில் மன அமைதி பறிபோகிறது. கணவன்-மனைவி உறவை உடைத்துக் கொள்ளும் முடிவினால், அவர்கள் இருவர் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் கடுமையான இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சிக்கலைத் தீர்க்க வழி:

குடும்பங்களில் ஏற்படும் எந்தவொரு சிக்கலையும் தீர்க்க மிகவும் கடினமான வழியை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. ஆனால் அந்த சிக்கலை எளிதான மற்றும் பேச்சுவார்த்தை வழியில் தீர்ப்பது உறவின் அழகையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது. அதனால்தான், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையையே சிரமத்தில் ஆழ்த்தினாலும், அவர்களுடன் தொடர்புடையவர்களைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண விவாகரத்து போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருப்பது முக்கியம். ஆனால், கணவனையும், வீட்டையும் நேசிக்கும் பெண், தன் காதல் எப்போதும் பறிபோகும் ஆபத்தில் இருப்பதாலேயே, இப்படிப்பட்ட நோய்களில் சிக்குகிறாள் என்பதே உண்மை. இல்லையெனில், கணவன் புரிந்துகொள்வது அவசியம். 

மனைவியின் இந்த பலவீனத்தை அவளிடம் அன்போடும், பாசத்தோடும் விளக்கி, அவள் மீது கோபப்படுவதையோ, அவள் சொல்வதற்காக அவளை திட்டுவதையோ விடுத்து, அவள் வாழ்க்கையில் யாரேனும் முக்கியமானவர் என்றால், அவள் மட்டுமே என்னை நேசிக்கிறாள் என்று கணவன் நினைக்க வேண்டும்.  இதுபோன்ற எண்ணங்கள், மனைவி சந்தேக நோயிலிருந்து மீள்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், வீட்டுச் சூழலை மேம்படுத்துவதிலும் உறவை வலுப்படுத்துவதிலும் சிறந்த பங்கை வகிக்கும். கணவர்கள் தங்கள் மனைவிகளுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனைவியிடம் தங்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்க வேண்டும், தங்களுடைய பொருட்களை சரிபார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், எந்த விஷயத்திலும் சுதந்திரமாக பேசுவதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கணவன்மார்கள், தங்கள் மனைவிகளுக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் இது மிகவும் முக்கியமானது என்பதால் அவற்றைப் புரிந்துகொண்டு அன்புடன் விளக்க முயற்சிக்க வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபோது, ​​​​அவர்களிடம் தங்கள் விவகாரங்களை மறைக்கவோ அல்லது அவர்களிடம் பொய் சொல்லவோ முயலும்போது அவர்கள் சந்தேகத்திற்குரிய பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இது ஒரு குடும்பத்தை மற்றும் வீட்டை அழிக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.

உளவியல் ரீதியான அணுகுமுறை:


கணவன்-மனைவி உறவுகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டுமானால், இருவரும் உளவியல் ரீதியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.  சில பெண்கள் தங்கள் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டிய அறிவுரைகளையும் வழிமுறைகளையும் கேட்க வழிவகுக்கிறது. ஏனென்றால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர், உண்மையில் உங்கள் நலம் விரும்புபவர்கள் அல்ல. உங்கள் பிரச்சினைகளைப் பற்றி, அவர்கள் தங்கள் பகையை வெளிப்படுத்த எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டார்கள். அவர்களின் அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் அழகான உறவையும் அழிக்கும். நீங்கள் யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால், புத்திசாலித்தனமான பயனாளியைத் தேடுங்கள். 

பல்வேறு விசாரணைகள், கருணையுடன் கூடிய உறுதிமொழிகள் மற்றும் நீங்கள் தவறு என்று விளக்கங்கள் அளித்த போதிலும், உங்கள் கணவர் வேறொருவர் மீது ஆர்வமாக இருப்பதாக நீங்கள் உண்மையாக இன்னும் உணர்ந்தால், நீங்கள் ஒரு நல்ல உளவியலாளரை சந்திக்க வேண்டியிருக்கும். சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்பது அதற்கு அர்த்தம். எனவே, வாழ்க்கையில் விவாகரத்து, பிரிவினை, சண்டை எல்லாம் நல்ல தீர்வல்ல என்பதை கணவன்-மனைவி ஆகிய இருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் வீணான, கற்பனையான எண்ணங்கள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதை தவிர்த்துவிட்டு, புரிதல் மனப்பான்மையுடன் இருவரும் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். கணவரின் விருப்பத்திற்கும் புரிதலுக்கும் ஏற்ப வழிமுறைகளை அமைத்துகொண்டு, அவருக்கு ஆதரவளிக்க மனைவி முன்வர வேண்டும். இதே நிலையில்தான் கணவனும் இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் திமிர் பிடிப்பதை விட நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். இந்த குணங்களை அனைத்தும் மனைவியிடம் காணும் கணவன் அவள் மீது உண்மையான அன்பை செலுத்துவான் என்பது உண்மையான  உளவியல் கருத்தாக உள்ளது. 

- நன்றி: ரோஸ்நாமா ராஷ்ட்ரிய சஹாரா உர்தூ நாளிதழ், அலி அஷ்ஹத் அஸ்மி,தோஹா கத்தார்.

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: