Monday, December 18, 2023

நம்பிக்கை - மன்னிப்பு...!.!

நம்பிக்கை....!

ஜூம்மா தொழுகைக்கு ஒருமுறை சென்னை ரிச் ஸ்டீட்டில் உள்ள குலாம் உசேன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.

இமாம் சாஹிப் ஜூம்மா உரையை, அழகிய எளிய உர்தூ மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் செய்தார்.

ஏக இறைவன் மீது மக்கள் எப்படி உறுதியாக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை இமாம் சாஹிப் விளக்கிய விதம் மனதை கவர்ந்தது.

உறுதியான நம்பிக்கை:

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிச்சயம் ஒரு  தீர்வு உண்டு. இதை நாம் உறுதியாக நம்பி, ஏக இறைவனின் அருளை எதிர்பார்க்க வேண்டும் என்றார் அவர்.

போலியான நம்பிக்கை, பகுத்தறிவுக்கு இடம் தராத  செயல்கள் மூலம் நமது பிரச்சினைகளுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என இமாம் சாஹிப் கூறியது மனதை யோசிக்க வைத்தது.

ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்க்கைப பயணத்தை தொடருங்கள்.

துன்பங்கள், துயரங்கள் வரிசையாக நின்றாலும் அவற்றை நீங்கள் துணிவுடன் சந்தித்து தூள் தூளாக்கி விடலாம் என்றார் இமாம் சாஹிப்.

எவ்வளவு உண்மையான, நம்பிக்கையை ஊட்டும் வார்த்தைகள்.

ஏக இறைவன் மன்னிக்க வேண்டுமா?

இதேபோன்று, மற்றொரு ஜூம்மா உரையில், மன்னிப்பு குறித்து இமாம் சாஹிப் கூறிய கருத்து மனதை வெகுவாக தொட்டது.

நாம் எல்லோரும் ஏக இறைவன் நமது பிழைகளை, பாவங்களை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆசைப்படுகிறோம். அதற்காக மனம் உருகி பிரார்த்தனை செய்கிறோம். இது மிகவும் நல்ல செயல். ஆனால் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். ஏக இறைவன் நமது பிழைகளை மன்னிக்க வேண்டும் எனில் நாம் ஒன்றை உறுதியாக செய்ய வேண்டும். அதை வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என கூறி, இமாம் சாஹிப் தனது உரையை சில நொடிகள் நிறுத்தி பார்வையாளர்கள் மத்தியில் புன்முறுவலுடன் தனது பார்வை செலுத்தினார்.

பிறர் குறைகளை மன்னிக்க வேண்டும்:

சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது உரையை மீண்டும் தொடங்கிய இமாம் சாஹிப், நம்மில் எத்தனை பேர் பிறர் குறைகளை, பிழைகளை, தவறுகளை மன்னிக்கிறோம் என கேள்வி எழுப்பினார். குடும்பங்களில், உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படுவது வாழ்க்கையில் வழக்கமான ஒன்று. இவற்றை நாம் உடனே மறந்துவிட்டு, மன்னித்து விட்டு உறவுகளை பேண வேண்டும்.

ஆனால், பிறரின் குறைகளை, பிழைகளை நாம் மன்னிப்பது இல்லை. மறப்பது இல்லை. அந்த பிரச்சினைகளுடன் வாழ்ந்து அவற்றை மேலும் அதிகமாக வளர்த்து கொள்கிறோம். எப்போதும் ஒருவித குரோத எண்ணத்துடன் வாழ்கிறோம். இதனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம்.

பிறரை மன்னிக்க மனம் இல்லாத நம்மை, ஏக இறைவன் எப்படி மன்னிப்பான். நல்ல உறவுகளை பேண மறக்கும் நம் மீது ஏக இறைவன் எப்படி கருணை மழை பொழிவான். நமது பாவங்களை, பிழைகளை ஏக இறைவன் மன்னிக்க வேண்டுமானால், நாம் முதலில் பிறர்  குறைகளை மன்னிக்கும் வகையில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறி, அழகிய புன்முறுவலுடன் தனது உரையை இமாம் சாஹிப் நிறைவு செய்தார்.

சிந்திக்க வைத்த உரை:

நம்பிக்கை மற்றும் மன்னிப்பு குறித்து இமாம் சாஹிப் கூறிய இந்த கருத்துக்கள் என் மனதின் ஆழத்தில் இன்னும் பதிந்து பசுமையாகவே இருக்கிறது. ஏக இறைவன் என்னை மன்னிக்க வேண்டும் எனில் நான் பிறரை மன்னிக்க வேண்டும் என உறுதியாக இருந்து வருகிறேன்.

அழகிய முறையில் ஆழமாக சிந்திக்க வைக்கும் இதுபோன்ற ஜூம்மா உரைகள், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இமாம்கள் நிகழ்த்தினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் அல்லவா....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: