Saturday, December 23, 2023

முட்டைக்கோஸ்….!

 

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் முட்டைக்கோஸ்….!

காய்கறி வகைகளில் முட்டைக்கோஸ் ஒரு தனி ரகமான காய்கறியாகும். ஐரோப்பியாவில் இருந்து ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு அறிகமும் செய்யப்பட்டதாக கூறப்படும் முட்டைக்கோஸின் தாவரவியல் பெயர் பிராசிகாக ஒலரேசியாவாகும். பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுகலில் இருந்து வந்த வணிகர்கள் மூலம் இந்தியாவிற்கு முட்டைக்கோஸ் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அனைத்து வகையான காய்கறிகளில் இயற்கையாகவே நல்ல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. அந்த வகையில் முட்டைக்கோஸிலும் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, வைட்டமின் இ, வைட்டமின் சி, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ள முட்டைக்கோஸ், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் கீரை வகை காய்கறியாகும்.

இதய, புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:

முட்டைக்கோஸ் அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பிரபலமான காய்கறியாக கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல உணவுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கடுமையான நோய்களின் அபாயத்தை திறம்பட குறைக்கும். முட்டைக்கோஸ் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தை குறைக்கும்

ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படும் முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பிற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைக்கோஸில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அது,  தோல், இரத்த நாளங்கள், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

வயிற்று நோய்கள் நீங்கும்:

முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து, வயிற்று நோய்கள், வயிற்றில் உள்ள குடல் அழற்சி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. வயிற்றுப்புண் மற்றும் குடல் நோய்களை குணப்படுத்துகிறது. முட்டைகோஸில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கப் சமைத்த முட்டைக்கோஸில் 34 கலோரிகள் மட்டுமே உள்ளன, இது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாக உள்ளது. முட்டைக்கோஸில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது உடலில் அதிகப்படியான சோடியத்தின் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் ஒவ்வொரு முட்டைக்கோஸ் இலைகளிலும் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை சேமிக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்திற்கு:


மூளை நல்ல ஆரோக்கியத்துடன் செயல் பட வேண்டுமானால், நாம் முட்டைக்கோஸை கண்டிப்பாக நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டைக்கோஸ், மூளையை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின் கே மன செயல்பாடு, பணிகளில் நன்கு கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. வைட்டமின் கே நரம்பு செல்களை சேதத்தில் இருந்து பாதுகாப்பதால், முட்டைக்கோஸ், முளைக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துகளை அளிக்கும் காய்கறி என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதேபோன்று, முட்டைக்கோஸ், வலுவான எலும்புகளை உருவாக்க தேவையான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக இருந்து வருகிறது. எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை முட்டைக்கோஸில் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி:

முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளன. இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. முட்டைக்கோஸ்,. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதால்,நாம் பல்வேறு நோய்களை எதிர்த்து தைரியமாக போராடலாம். முட்டைக்கோஸ் சாறு வயிற்றுப் புண்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருந்து வருகிறது. இதில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ் போன்ற, அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் வயிற்றுப் புண்களைக் குறைக்க உதவுகிறது.

முட்டைக்கோஸில் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ உள்ளதால், முட்டைக்கோஸை நமது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது பார்வை ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க முடியும். தலை முடி ஆரோக்கியமாக இருக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும், நாம் அவசியம் முட்டைக்கோஸை பயன்படுத்த வேண்டும்.

கவனம் தேவை:


முட்டைக்கோஸில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அதை நாம் அதிகளவு சாப்பிடுவது பாதிப்பை தரும் என்றும் சொல்லப்படுகிறது. அதிக அளவில் முட்டைக்கோஸை சாப்பிடுவது தைராய்டை பாதிக்கலாம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸை அதிகம் பயன்படுத்தினால், வாய்பு, செரிமான தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கருத்து நிலவி வருகிறது.

எனவே, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழியை நன்கு உள்வாங்கிக் கொண்டு, நமது உணவுகளில் முட்டைக்கோஸை பயன்படுத்தினால், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், மேலே குறிப்பிட்ட அனைத்து வகையான நன்மைகளையும் பலன்களையும் நாம் நிச்சயம் பெறலாம்.

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: