Thursday, December 21, 2023

சப்போட்டா....!

ஏராளமான மருத்துவ சத்துக்களை கொண்ட சப்போட்டா....!

ஏக இறைவனின் படைப்பில் ஒவ்வொரு பழத்திற்கு ஒரு அற்புத குணம் உண்டு. நல்ல சுவையுடன் கூடிய இந்த பழங்களில் ஏராளமான மருத்துவ சத்துக்களும் அடங்கியுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் அந்த நாடுகளில் நிலவும் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப பழங்கள் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் அழகிய காஷ்மீரில் ஆப்பிள் பழம் அதிகளவு பயிரிடப்படுகிறது. காஷ்மீர் ஆப்பிள் பழத்திற்கு உலகம் முழுவதும் ஒரு தனி மசுவு இருந்து வருகிறது. இப்படி ஒவ்வொரு பழங்களை குறித்து நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

இன்றைய இந்த கட்டுரையில் சப்போட்டா பழம் குறித்தும் அதன் சுவை, மருத்துவ சத்துக்கள், கொஞ்சம் அறிந்துகொண்டு, அதன்மூலம் நாம் பலன் அடையலாம். 

பதட்டத்தை வெல்லும் சப்போட்டா:

சப்போட்டா பழத்தில் ஒரு வித்தியாசமான இனிப்பு உள்ளது. பல சிறப்பான பண்புகள் நிறைந்த சப்போட்டா, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான பழமாக உள்ளது.  இந்தப் பழம் மட்டுமின்றி, அதன் மரத்தின் பல்வேறு பகுதிகளும் உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்து நிறைந்த சப்போட்டா அதன் சுவைக்காக பெரிதும் விரும்பப்படுகிறது.  இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் அழகில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி1, இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது சத்துக்கள் நிறைய  உள்ளன.

தற்போதைய நவீன, வேகமான வாழ்க்கை சூழலில் நம்மில் பலருக்கு அடிக்கடி பதட்டம் ஏற்படுகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு இன்றைய இளைஞர்கள் ஆளாகி கடும் உடல் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாள்தோறும் ஒரு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றை வெல்லலாம் என நாட்டு வைத்தியர்கள் உறுதி அளிக்கிறார்கள். 

பார்வைக்கு நல்லது: 

சப்போட்டா வைட்டமின் ஏ-இன் சிறந்த மூலமாகும். வைட்டமின் ஏ கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதில் காணப்படும் பொட்டாசியம், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவை  செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதேபோன்று, சப்போட்டாவை நாள்தோறும் பயன்படுத்தி வந்தால், சருமத்திற்கு நன்மை பயக்கும். உடலில் இருந்து நச்சுகளை அகற்ற சப்போட்டா உதவுகிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் இயற்கையான ஈரப்பதத்தையும் சப்போட்டா  வழங்குகிறது. மேலும் சப்போட்டாவில்  டானின் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

வலுவான எலும்புகளுக்கு: 


தற்போது உள்ள உணவுப் பழக்க முறைகளால், அதிகளவு மக்களுக்கு எலும்பு தோய்மானம் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காகவே தனி மருத்துவ மையங்களும் இருந்து வருகின்றன. எலும்பு பிரச்சினையால் மூட்டு வலி உள்ளிட்ட வலிகளால் முதிய வயது ஆண்கள், பெண்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த பிரச்சினை தற்போது இளைஞர்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு காண நாள்தோறும் சப்போட்டா சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காரணம், இதில் கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால், நமது எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

சப்போட்டா இரத்த சோகையை குணப்படுத்துகிறது. சப்போட்டா என்பது குறைந்த கலோரி கொண்ட பழமாகும். இதில் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது. தொப்பை கொழுப்பு மற்றும் அதிக எடையை அகற்ற சப்போட்டா மிகவும் உதவும்.

உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சப்போட்டா பழம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு சர்வதேச ஆய்வின்படி, சப்போட்டா இரைப்பை நொதிகளின் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த முடியும். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக, உங்கள் பசியின்மையும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். இதன் காரணமாக உங்கள் எடையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

சப்போட்டா சாப்பிடுங்கள்:

அதிக மருத்துவ சத்துக்களை தன்னுள் கொண்டுள்ள சப்போட்டா பழகத்தை வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் மறக்காமல் சாப்பிடுங்கள்.  உடலுக்கு தீமை அளிக்கும் உணவுப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கை நமக்கு அள்ளி தந்திருக்கும் பழங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி வந்தால், அதன்மூலம் உடலும் மனமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதை நாம் எப்போதும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள சப்போட்டாவின் விலை, ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் அளவுக்கே உள்ளது. எனவே, இனி சப்போட்டாவை சாப்பிட ஒருபோதும் மறக்காதீர்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: