Monday, March 4, 2024

ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டன்.....!

மருத்துவ மாணவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் பலன் அளிக்கும்

ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டன்.....! 

யுனானி மருத்துவ முறையானது, பண்டைய கிரேக்கத்தில் உருவான ஒரு முறையாகும். அனைத்து யுனானி சூத்திரங்களும் மூலிகைகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் உலோகங்களை அடிப்படையாகக் கொண்டவை. யுனானி என்பது மருந்துகளை தயாரிப்பதற்கான பாரம்பரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான முறைகளை உள்ளடக்கியது. பல்வேறு மூலிகை சிகிச்சைகள், உணவு முறைகள் மற்றும் ரெஜிமென்டல் சிகிச்சை ஆகியவை யுனானி மருந்துகளின் ஒரு பகுதியாகும். 

மருத்துவத்தின் அடிப்படை நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் உடல் பாதுகாப்பு உள்ளது. மேலும் இந்த மருந்துகள் உடலை உள்ளிருந்து மேலும் வலுப்படுத்துகின்றன. ஒரு நபர் ஆரோக்கியமாக வாழ யுனானி மருத்துவம் மிகவும் பயனுள்ள நுட்பங்களைக் கண்டறிய உதவுகிறது. யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முலிகைகள், செடிகள், அவற்றை வளர்க்கும் முறைகள் ஆகியவற்றை குறித்து நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். 

ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டன்:

இந்தியாவில்,  தற்போது இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் மீது மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவத்தின் மீது மக்கள் அதிகளவு நம்பிக்கை வைத்து, அதனை அதிகளவு பயன்படுத்தி, நன்கு குணம் அடைந்து வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில், யுனானி, சித்தா மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. 

இங்குள்ள யுனானி மருத்துவக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி மருத்துவர்களாக உருவாகி வருகிறார்கள். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் சிறப்பான முறையில் கல்வி பயில பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டன் இங்கு அமைந்துள்ளது. இந்திய யுனானி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹக்கீம் அஜ்மல் கானின் பெயரில் இந்த யுனானி ஹெர்பல் கார்டன் உருவாக்கப்பட்டுள்ளது. 

270 வகையான முலிகை வகைகள்:

அரசு யுனானி மருத்துவக் கல்லூரியின் பணிபுரியும் பேராசிரியர் டாக்டர் வி.ஹபிபுல்லாஹ் எம்.டி., அவர்களின் மேற்பார்வையிலும் தலைமையிலும் இந்த யுனானி ஹெர்பல் கார்டன் உருவாக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த நாம், அதுகுறித்து தகவல்களை பெற நாடியபோது பேராரிசியர் டாக்டர் எஸ்.நிஜாமுத்தீன், மற்றும் மருத்துவ முதுகலை முதலாண்டு மாணவி டாக்டர் சையதா ரபியா தஸ்லிம் ஆகியோர், யுனானி ஹெர்பல் கார்டனுக்கு அழைத்துச் சென்று அதனை சுற்றிக் காண்பித்தனர். 

இங்குள்ள 270 வகையான யுனானி முலிகை செடிகள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்த யுனானி ஹெர்பல் கார்டனில், பச்சை தொங்கு தோட்டம், மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, முலிகை செடிகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்தும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக, சாதா சுஹாகம், ஆதிஜோடா, சுபைத் மஸ்லி, கும்சி, கங்கி, பாபூல், குப்பி, சபோட்டா என 270க்கும் மேற்பட்ட முலிகை வகைகளின் 600க்கும் அதிகமான செடிகள் வளர்க்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்:

ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டனில் வளர்த்து பராமரிக்கப்படும் இந்த அரிய வகை முலிகை செடிகள் குறித்தும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும்,  யுனானி கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நல்ல வகையில் நேரடியாக பல்வேறு அம்சங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம், மாணவ மாணவிகளின் யுனானி மருத்துவ அறிவு விசாலமாக மாற வாய்ப்பு உருவாகிறது. இப்படி பெற்ற யுனானி மருத்துவ அறிவின் மூலம், புதிய மருத்துவர்களாக சமுதாயத்திற்கு கிடைக்கும் மருத்துவர்களின் மூலம், நாட்டிற்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும், நோயாளிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 

ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டன், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யுனானி மருத்துவ நாள் விழாவின்போது பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், யுனானி மருத்துவத்தின் மகிகை, அதன் பயன்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்படுகிறது. 

சென்னையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கூட, யுனானி நாள் விழாவின்போது, இந்த கார்டனை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். அந்த வகையில், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ஹக்கீம் அஜ்மல் கான் யுனானி ஹெர்பல் கார்டனை ஒருமுறை கட்டாயம் சென்று பார்த்து கண்டு மகிழ்ந்து பயன் அடையுங்கள். அதன்மூலம் யுனானி மருத்துவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உங்களுக்கு நிவர்த்தியாகும் என்பது நிஜம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: