Tuesday, November 4, 2025

நியூயார்க் மேயராக தேர்வு....!

 

நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி

அதிபர் டிரம்பின் எச்சரிக்கையும் மீறி மக்கள் அமோக ஆதரவு

இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த முடிவு

நியூயார்க், நவ.05- அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புதிய மேயரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி மிகப்பெரிய அளவுக்கு வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

நியூயார்க் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக 34 வயதான இந்திய வம்வாளியான முஸ்லிம் இளைஞர் ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

மம்தானி அபார வெற்றி :

இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் நடைபெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (04.11.1025) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஜோஹ்ரான் மம்தானி தனது மனைவியுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்கு செலுத்தினார். இதில் ஜனநயாகக் கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஷ் ஸ்லிவாவும் முன்னிலை பெற்றனர். இறுதியில் மேயர் பதவிக்கான தேர்தலில்

ஆளுங்கட்சி மற்றும் , சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோவை வீழ்த்தி ஜனநாயகக் கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி, அபார வெற்றி பெற்றார்.

முதல் முஸ்லிம் மேயர் :

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லிம் மேயர் மற்றும் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார். மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலில் பிரதிபலிக்கும் என்பதால் அதன் முடிவுகள் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்க்கப்பட்டது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கடுமையாக விமர்சித்து மம்தானி பிரச்சாரம் செய்தார். இதனால், அவருக்கு யூத தொழில் அதிபர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்து வந்தது. அதேநேரத்தில, நியூயார்க் மக்களின் ஆதரவு மம்தானிக்கு இருந்தால், தேர்தலில் ஏற்கனவே கருத்துக் கணிப்புகளின் கூறியபடியே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நியூயார்க் மேயராக மம்தானி வென்றால் நியூயார்க் பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகிவிடும் என்றும், நியூயார்க் நகரத்திற்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த நிலையிலும், மக்கள் மம்தானிக்கு ஆதரவு அளித்து அவரை தங்களது மேயராக தேர்வு செய்து இருக்கிறார்கள்.

இலவச பேருந்து பயணம் :

தம்மை ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் என்று அழைத்துக் கொள்ளும் மம்தானி, இலவச குழந்தை பராமரிப்பு, இலவச பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை-ஒழுங்குபடுத்தப்பட்ட நியூயார்க்கர்களை பாதிக்கும் வாடகை முடக்கம் ஆகியவற்றுக்கான திட்டங்களுடன் தனது பணியை தொடங்க இருக்கிறார். நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்ற இருப்பதாக வெற்றிக்குப் பிறகு மம்தானி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

நியூயார்க் நகரத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தானி தேர்தலில்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நியூ ஜெர்சி மற்றும் வர்ஜீனியாவில் உள்ள ஆளுநர் போட்டிகள் உட்பட பிற முக்கிய தேர்தல்களிலும் ஜனநாயக வேட்பாளர்கள் வெற்றிகளைப் பெற்றுள்ளது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: