Tuesday, August 1, 2023

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க.....நெருங்க....!

                                          நாடாளுமன்ற தேர்தல் நெருங்க.....நெருங்க....!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் பாசிச அமைப்புகள் எந்தவித எல்லைக்கும் செல்லும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும்போது, இந்துத்துவ அமைப்புகள் தங்களுடைய செயல்திட்டங்களை இப்போதே தொடங்கி விட்டன என்பது உறுதியாக தெரிகிறது. 

மணிப்பூர் வன்முறை இன்னும் ஓயாமல், அந்த மாநிலத்தில் அமைதி திரும்பாத நிலையில், நாட்டின் பிற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கண்டு ஆளும் பாஜக மத்தியில் ஒருவித அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த பயத்தின் காரணமாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விடுமோ என்ற கவலை பாஜக மற்றும் பாசிச அமைப்புகளுக்கு இருந்து வருகிறது. எனவே, எந்தவித எல்லைக்கும் சென்று, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என பாசிச அமைப்புகள் திட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. 

சத்யபால் மாலிக் எச்சரிக்கை:

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாம் கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் பாஜக அதை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள சத்யபால் மாலிக், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக துடித்துகொண்டு இருப்பதாகவும், அதற்காக எந்தவித எல்லைக்கும் செல்ல திட்டங்கள் திட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், இல்லையெனில் நாட்டில் இனி ஜனநாயகம் ஒருபோதும் இருக்காது என்றும் சத்யபால் மாலிக் எச்சரித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சரியான முறையில் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்தும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜகவின் செயல்திட்டங்கள் குறித்தும், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும் சரியான முறையில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் சத்யபால் மாலிக், இந்தியா கூட்டணியை கேட்டுக் கொண்டுள்ளார். 

ஓடும் ரயிலில் முஸ்லிம்கள் கொலை: 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிகின் எச்சரிக்கைப்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்ரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலில் பயணம் செய்து 3 முஸ்லிம்கள் உட்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சேத்தன் குமார் சௌத்ரி என்பவன், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். 

3 முஸ்லிம்கள் மற்றும் திக்காராம் என்ற தலித் உயர் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, இந்தியாவில் இருக்க வேண்டுமானால் மோடி மற்றும் யோகி  என சொல்ல வேண்டும் என்றும் அவன் கூப்பாடு போட்டுள்ளான். 

முஸ்லிம்கள் மீது எந்தளவுக்கு வன்மம் இருந்தால், ஓடும் ரயிலில் இப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இருப்பான். இந்த சம்பவம் குறித்து மிகப்பெரிய அளவுக்கு கண்டனங்களை யாரும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் 4 பேரை சுட்டுக் கொன்ற சேத்தன் குமார் சௌத்ரி ஒரு பைத்தியக்காரன் என தற்போது, தகவல்களை பரப்பி வருகிறார்கள். 

அரியானாவில் இமாம் படுகொலை: 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் பள்ளிவாசல் இமாம் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 

குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதியை ஒரு கும்பல் தாக்கி, கோயிலுக்கு தீ வைத்தது. இந்த தாக்குதலில் இமாம் முகமது சாத்  கொல்லப்பட்டார், மசூதியில் பணிபுரிந்த குர்ஷித் பலத்த காயம் அடைந்தார். தாக்குதலின்போது மசூதிக்குள் 5 பேர் இருந்தனர். இருவர் தாக்கப்பட்டபோது, மீதமுள்ளவர்கள் கட்டிடத்திற்குள் ஒளிந்துகொண்டு தப்பிக்க முடிந்தது என்று குர்கான் நாக்ரிக் ஏக்தா மஞ்சின் இணை நிறுவனர் அல்தாஃப் அஹ்மத் கூறியுள்ளார். இது நினைக்க முடியாதது என்றும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அல்தாஃப் அஹ்மத் வேதனை தெரிவித்துள்ளார். 

வன்முறையில் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. பல கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  வன்முறையில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. மூன்று மாவட்டங்களில் பரவிய மோதலால் அரியானாவில் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்தியா கூட்டணி  கவனத்திற்கு:

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கிட்டதட்ட 9 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும் என தற்போதைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாசிச அமைப்புகள், தங்களது வழக்கப்படி மீண்டும் இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பு பரப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. 

இத்தகைய செயல்களை உடனே தடுத்து நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகளின் இந்தியா கூட்டணி நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் பாஜகவின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். மணிப்பூர் வன்முறையை தடுக்க முடியாத பாஜக ஆட்சியாளர்கள், தற்போது அதே பாணியில் நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, மக்கள் மத்தியில் அமைதியையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்ட வேண்டும். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் மிகப்பெரிய அளவுக்கு நாட்டு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல சிந்தனையாளர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், இந்த இந்திய ஒற்றுமை பயணத்தை மிகவும் வரவேற்று ஆதரவு அளித்ததை நாம் மறுந்துவிடக் கூடாது. 

எனவே, நாட்டின் உண்மையான வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார மற்றும் வணிகத்துறைகளில் நாடு புதிய உச்சத்தை தொட, நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையோடு, ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். செயல்பட வேண்டும். இந்த உயர்ந்த நோக்கத்தை நாட்டு மக்கள் அனைவரின் மனங்களில் இந்தியா கூட்டணி பதிய வைக்க வேண்டும். இதற்காக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இப்போதே தொடங்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சதித் திட்டங்கள் தோல்வி அடையும். அதன்மூலம் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதை நாம் மறுந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: