Sunday, February 11, 2024

மின்சார வாகனம் மற்றும் எரிசக்தி சேமிப்பு எக்ஸ்போ....!

தொழில்துறையில் குவிந்து கிடக்கும் ஏராளமான வாய்ப்புகள்....!

மின்சார வாகனம் மற்றும் எரிசக்தி சேமிப்பு எக்ஸ்போவில் தகவல்கள்...!


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், மின்சார வாகனம் மற்றும் ஆற்றல் சேமிப்பு தொடர்பான எக்ஸ்போ, அண்மையில் நடைபெற்றது இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த அரங்குகளில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள், அதன் பயன்பாடு, மக்களுக்கு கிடைக்கும் பலன்கள், வேலைவாய்ப்புகள், நவீன கருவிகளின் விலைகள் என பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டன. 

மணிச்சுடர் நாளிதழ் சார்பில், அதன் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், கண்காட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஒவ்வொரு அரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த மின்சார வாகன பொருட்கள், சூரியசக்தி மின்சார தயாரிப்பு கருவிகள் தொடர்பாக பல அரிய தகவல்களை திரட்டினார். மேலும், இரண்டு நேர்காணல்களையும் எடுத்தார். அதுகுறித்த ஒரு சிறப்பு ரிப்போர்ட் இதோ:

மின்சார வாகன துறை:

உலகம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், மக்களுக்கான தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராயச்சிகள், பல்வேறு முயற்சிகள் என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாகன உற்பத்தியில், மின்சார வாகனங்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் பல தொழில் நிறுவனங்கள் இந்த உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், அதற்கான உதிரி பாகங்களை தனியாகவும் பல சிறிய தொழில் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இதன்மூலம் தொழில்நுட்ப படிப்பு முடித்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த தொழிலில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இளைஞர்கள் சிலர், சிறிய நிறுவனங்களை தொடங்கி, ஆட்டோ உதிரி பாகங்கள்,மற்றும் பிற வாகன உதிரி பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து, மக்களுக்கு குறைந்த நிலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்மூலம், பலருக்கு வேலைவாய்ப்புகளையும் அவர்கள் வழங்கி வருகிறார்கள். 

இந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் சென்னையைச் சேர்ந்த நரேந்தர் குமார் ஈடுபட்டு, ஓஎம் இவி மோட்டார்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி, மின்சார வாகன உதிரி பாகங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் நாம் நடத்திய சிறிய நேர்காணலில் கிடைத்த தகவல்கள்  இதோ உங்கள் பார்வைக்கு:

உதிரி பாகங்கள் தயாரிப்பு:


பொருளாதாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் வாகன உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரே நிறுவனம் அனைத்துப் பொருட்களையும் தயாரிக்கும் சூழல் இருப்பது இல்லை. எனவே, பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மிகச் சிறப்பாக செயல்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு தங்களுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. 

அந்த வகையில், எங்களுடைய நிறுவனம், இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் பிற  மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது. மக்களின் தேவைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களின் விருப்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நல்ல தரமான பொருட்களை, நாங்கள் தயாரித்து வருவதால், எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், எங்களால் முடிந்த அளவுக்கு இளைஞர்களுக்கும் நாங்கள் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறோம். 

எங்களிடம் உதிரி பாகங்களை வாங்கும்போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும். எத்தனை காலத்திற்கு அது பலன் அளிக்கும்.  இதுபோன்ற பல தொழில்நுட்ப ஆலோசனைகளையும் நாங்கள் வழங்குகிறோம். இதன்மூலம் தென்மாநிலங்களில் எங்களுடைய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொழில்நுட்பப் படிப்புகள் முடித்து, புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள், நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் சிறிய முதலீட்டின் மூலம் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கலாம். தொடக்கத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் தொடர் முயற்சி மூலம் நிச்சயம் சாதிக்க முடியும். 

சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு:

இதேபோன்று, அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகின்றன. அதற்கான புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க புதிய நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று அதில் வெற்றிகளும் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு தற்போது வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, நாளுக்கு நாள், மின்சார தேவை அதிகரித்து வருவதால், இந்த புதிய முயற்சிகளின் மூலம் மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன், வீடு, வேளாண் மற்றும் தொழில் ஆகியவற்றுக்கு தேவையான மின்சாரத்தையும் குறைந்த செலவில் தயாரித்து பெற்றுகொள்ள முடியும். இதன்மூலம் வீட்டிற்கான மின்சார கட்டணம் மிகப்பெரிய அளவுக்கு குறைவும். வேளாண் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும், தங்களுடைய மின்சார தேவையை சூரியசக்தி மின்சார கருவிகளை பயன்படுத்தி பூர்த்தி செய்துகொள்ளலாம். 

இந்த புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளில் இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்திலும் ஒருசில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டீரிம் டெக் என்ற நிறுவனம் சூரியசக்தி மின்சார தயாரிப்பு கருவிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மணியிடம் நாம் நடத்திய நேர்காணலில் கிடைத்த தகவல்கள் இப்போது உங்கள் பார்வைக்கு இதோ:

குறைந்த விலையில் மின்சாரம்:


எங்கள் நிறுவனம், அதிகரித்து வரும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை தயாரித்து வருகிறது. நல்ல நவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் பாதுகாப்புடன் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் நாங்கள் கருவிகளை தயாரித்து அதை, நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகிறோம். குறிப்பாக, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் எங்களது தயாரிப்புகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, வீடுகளுக்கு தேவையான சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு கருவிகளை நாங்கள் விற்பனை செய்யும்போது, அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று, நல்ல முறையில் பொருத்தி, வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். ஒரு வீட்டிற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில், சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு கருவிகளை பொருத்தி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை பொதுமக்கள் பெற முடியும். அதன்மூலம் மின்சாரத்திற்கு அதிகளவு பணத்தை செலவழிக்க முடியாது. மின்சார சேமிப்பு மற்றும் பண சேமிப்பு ஆகிவற்றை பெற முடியும். 

சமுதாயம் முன்வர வேண்டும்:

பல்வேறு துறைகளில் உலகம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், முஸ்லிம் சமுதாயம் இன்னும் பின்தங்கியே இருப்பது வேதனை அளிக்கிறது. தொழில் துறையில் நமது சமுதாயம் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்து வருகிறது. படித்துவிட்டு, வேலைக்கு செல்வதில் மட்டுமே, இஸ்லாமிய இளைஞர்கள் ஆர்வம் கொண்டு வருகிறார்கள். புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க முன் வருவதில்லை. முயற்சிகளில் இறங்குவதில்லை. அப்படி, முன்வரும் இளைஞர்களுக்கு சமுதாயம் உதவி செய்ய முன்வருவதில்லை. மாறிவரும் சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு சவால்களை முஸ்லிம்கள் இனி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, சுயதொழில் நிறுவனங்களை தொடங்குவதில் முஸ்லிம் சமுதாயம் இனி அதிக அக்கறையும் ஆர்வமும் செலுத்த வேண்டும். 

குறிப்பாக, வாகன உற்பத்தி, சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு போன்ற புதிய புதிய முயற்சிகளில் நமது இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட வேண்டும். அப்போது தான், நமது சமுதாயம், வலிமையுடன் துணிந்து நிற்க முடியும். பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்றும், தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.  இனி வரும் காலங்களில் சமுதாயம் இந்த இலக்கை நோக்கி நிச்சயம் பயணிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: